அரசுப் பேருந்தின் பின்னே ஓடிய பிளஸ்டூ மாணவி - வீடியோ வைரலான நிலையில் ஓட்டுநர் சஸ்பெண்ட்

காணொளிக் குறிப்பு,
அரசுப் பேருந்தின் பின்னே ஓடிய பிளஸ்டூ மாணவி - வீடியோ வைரலான நிலையில் ஓட்டுநர் சஸ்பெண்ட்
பிரசுரிக்கப்பட்டது

ஆலங்காயம் அருகே அரசுப் பேருந்தின் பின்னே பிளஸ்டூ ஓடிச் சென்ற வீடியோ வைரலான நிலையில், அந்த பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முதல் ஆலங்காயம் வரை அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் பஸ் பாஸ் மற்றும் பெண்கள் ஆகியோர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த அரசு பேருந்து வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் போது கொத்தக்கோட்டை என்ற இடத்தில் பிளஸ்டூ மாணவி ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார்.

அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசுப்பேருந்து அந்த மாணவி பேருந்தில் ஏறுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால், பிளஸ்டூ பொதுத்தேர்வு எழுத வேண்டியிருந்ததால், அந்த மாணவி பேருந்தை பிடிக்கும் முயற்சியில் நீண்ட தூரம் பேருந்தை பின்தொடர்ந்து ஓடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பள்ளி மாணவிக்காக நிற்காமல் அரசுப் பேருந்தை ஓட்டுநர் அவசரஅவசரமாக இயக்கியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். அலட்சியமாக பேருந்தை இயங்கி சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கொத்தகோட்டையில் +2 தேர்வு எழுதுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்றதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு