டெல்லி செய்த 'காஸ்ட்லி மிஸ்டேக்' : ஆட்டத்தை அடியோடு மாற்றிய மேயர்ஸ் - பந்துவீச்சில் மிரட்டிய மார்க் வுட்

பட மூலாதாரம், Twitter/Lucknow Super Giants
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எளிதில் வெற்றி கொண்டது. டெல்லி அணி செய்த பிழையால் கண்டம் தப்பிப் பிழைத்த கைல் மேயர்ஸ் அசுரத்தனமாக ஆடி ஆட்டத்தின் போக்கையே அடியோடு மாற்றிவிட்டார். அவருடன், மார்க் வுட்டும் பந்துவீச்சில் மிரட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றி எளிதாகிப் போனது.
16வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய லீக் ஆட்டம் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் - கைல் மேயர்ஸ் ஜோடி களம் கண்டது.
தொடக்கத்தில் ரன் சேர்க்க திணறிய லக்னோ
பேட்டிங் செய்ய பெரியளவில் ஒத்துழைக்காத இந்த ஆடுகளத்தில் தொடக்க கட்டத்தில் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டினர். மோசமான ஃபார்ம் காரணமாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் அண்மைக்காலமாக ரன் சேர்க்கத் திணறி வரும் லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் நேற்றும் ரன் சேர்க்க திணறியதைப் பார்க்க முடிந்தது.
மறுமுனையில் ஐ.பி.எல்.லில் அறிமுக வீரராக களம் கண்டுள்ள மேயர்ஸூம் களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருந்தார். இதனால் அந்த அணியின் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே இருந்தது. ரன் ரேட்டை உயர்த்தும் பொருட்டு, நான்காவது ஓவரில் அதிரடி காட்ட முயற்சித்த லோகேஷ் ராகுல், ஒரு சிக்சருடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஏனெனில், அவர் அடித்த அடுத்த பந்து எல்லைக்கோடு அருகே அக்ஸர் படேல் கைகளில் கேட்சாக மாறியது. ராகுல் விக்கெட்டை சகாரியா வீழ்த்தினார்.
கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியதும் விஸ்வரூபம் எடுத்த மேயர்ஸ்
சகாரியா வீசிய அடுத்த ஓவரில், அதாவது ஆறாவது ஓவரில் கைல் மேயர்சையும் அவர் வீழ்த்தியிருப்பார். ஆனால், மேயர்ஸ் கொடுத்த எளிதான கேட்சை கல்லியில் நின்றிருந்த கலீல் கோட்டை விட்டார். அப்போது, கைல் மேயர்ஸ் 16 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரது கேட்சை கோட்டை விட்ட டெல்லி அணி அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது.
களத்தில் தன்னை நன்றாக நிலைநிறுத்திக் கொண்ட பிறகு கைல் மேயர்ஸ் பேட்டை நாலாபுறமும் சுழற்றத் தொடங்கினார். முகேஷ் வீசிய அடுத்த ஓவரில் 2-வது மற்றும் 5-வது பந்துகளை அவர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த ஓவரை வீச வந்த சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேலை பவுண்டரி மற்றும் சிக்சருடன் கைல் மேயர்ஸ் வரவேற்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் பறக்கவிட்ட மேயர்ஸ்
கைல் மேயர்ஸ் அடுத்த 2 ஓவர்களில் மட்டும் 30 ரன்களைத் திரட்டினார். இதனால், 6 ஓவர்களுக்கு 30 ரன்கள் எடுத்திருந்த லக்னோ அணியின் மொத்த ஸ்கோர் 8 ஓவர்களில் 60 ரன்களாகிப் போனது. குல்தீப் யாதவ் வீசிய 9-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்சர் அடித்து மேயர்ஸ் அரைசதத்தை எட்டினார். இதற்காக, 28 பந்துகளை மட்டுமே அவர் எதிர்கொண்டார். அதாவது முதல் 16 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர், கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பிறகு சந்தித்த 12 பந்துகளில் 36 ரன்களை குவித்திருந்தார்.
தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்திய மேயர்ஸ், சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேல் வீசிய 10-வது ஓவரின் 2வது, 3-வது பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார். குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரிலும் முதல் பந்தையே அவர் சிக்சருக்கு பறக்கவிட்டார்.
அக்ஷர் வீசிய மாயாஜால சுழலில் வீழ்ந்த மேயர்ஸ்
ஆனால், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் மறுமுனையில் நின்றிருந்த தீபக் ஹூடா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்சருக்கு ஆசைப்பட்டு, எல்லைக்கோடு அருகே வார்னரால் கேட்ச் செய்யப்பட்டு பெவிலியன் திரும்பினார்.
அடுத்த ஓவரில் அக்ஸர் படேல் வீசிய மாயாஜால சுழலில் கைல் மேயர்ஸ் போல்டாகி வெளியேறினார். 38 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 73 ரன்களை அவர் குவித்திருந்தார். அடுத்து வந்த ஆல்ரவுண்டர் ஸ்டோய்னிஸ் ஒரு சிக்சருடன் 12 ரன் எடுத்த நிலையில் கலீல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சர்பராசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிப் பிழைத்த பூரண் அதிரடி
கைல் மேயர்ஸ் வெளியேறிய பிறகு சற்று மந்தமான ஆட்டத்தை மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிகோலஸ் பூரண் தனது அதிரடி பேட்டிங்கால் மீண்டும் விறுவிறுப்பாக்கினார். 15-வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சருக்கு அவர் ஓடவிட்டார்.
குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் பூரன் கொடுத்த எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் சர்பராஸ்கான் தவறவிட்டார். கைல் மேயர்ஸ் போல, பூரனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த டெல்லி அதற்கும் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சகாரியா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை அவர் விளாசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் குருணால் பாண்டியா சிக்சர் அடித்தார்.

பட மூலாதாரம், Twitter/Indian Premier League
கடைசிக் கட்டத்தில் பதோனி அதிரடி
18-வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து முகேஷ் சிக்கனமாக வீசி முடிக்க, கலீல் வீசிய 19-வது ஓவரில் முதல் பந்தையே பூரன் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்த பூரன், மூன்றாவது பந்தில் பிருத்வியால் அபாரமாக கேட்ச் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
களமிறங்கியதுமே பவுண்டரி அடித்து அமர்க்களப்படுத்திய இளம் வீரர் பதோனி, கடைசி ஓவரில் சகாரியா பந்தில் அடுத்தடுத்து சிக்சர்களை அடித்து மிரளச் செய்தார். ஐந்தாவது பந்தில் பதோனி ஆட்டமிழந்து வெளியேறியதுமே, அவருக்குப் பதிலாக இம்பாக்ட் பிளேயராக கிருஷ்ணப்பா கவுதமை லக்னோ அணி களமிறக்கியது. அவரும் கடைசிப் பந்தை எதிர்கொண்டு சிக்சர் அடித்து அந்த அணியின் இன்னிங்சை தித்திப்பாக முடித்து வைத்தார்.
டெல்லி அணிக்கு வார்னர் - ஷா ஜோடி அதிரடித் தொடக்கம்
ஆறாவது ஓவர் தொடங்கி கடைசிப் பந்து வரை சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைக் குவித்தது. இதையடுத்து, கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது.
உனத்கட் வீசிய 2-வது ஓவரில் மட்டுமே டெல்லி அணி 17 ரன்களைத் திரட்டி அட்டகாசப்படுத்தியது. அந்த ஓவரில் வார்னர் 2 பவுண்டரிகளையும், பிரித்வி ஷா ஒரு பவுண்டரியும் அடித்தனர். சுழற்பந்துவீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசிய மூன்றாவது ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடிக்க மொத்தம் 9 ரன்கள் வந்தன. வார்னர் - பிரித்வி இணையின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 4 ஓவர்களில் 40 ரன்களை சேர்த்திருந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மார்க் வுட் மிரட்டல் பந்துவீச்சில் நிலைகுலைந்து போன டெல்லி அணி
ஐந்தாவது ஓவரை வீச வந்த மார்க் வுட், லக்னோ அணிக்கு திருப்பம் தந்தார். கடந்த ஐ.பி.எல். தொடரில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தவறிழைத்து அதிக முறை அவுட்டான பிரித்வியை அந்த அஸ்திரத்தைக் கொண்டே மார்க் வுட் மிரட்டினார். அந்த ஓவரின் மூன்றாவது வந்தில் பிரித்வியை அவர் கிளீன் போல்டாக்கினார்.
அடுத்த பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷையும் கிளீன் போல்டாக்கி மார்க் வுட் அசத்தினார். அவர் தனது முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த 2 ரன்களுமே வைட், நோபால் என்ற முறையில் வந்தவை. மார்க் வுட் அடுத்தடுத்த பந்துகளில் கொடுத்த அடியில் இருந்து டெல்லி அணியால் கடைசி வரை மீளவே முடியவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
4 ஓவர்களுக்குப் பிறகு குறைந்து போன டெல்லி அணியின் ரன் ரேட்
மார்க் வுட் வீசிய அடுத்த ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்து அஸ்திரத்தை பயன்படுத்தி இளம் வீரர் சர்பராஸ்கானை வெளியேற்றினார். பந்து பவுன்சராக வந்ததால் விலக எத்தனித்த சர்பராஸ்கானின் பேட்டில் பந்து பட்டு, பின்னால் நின்றிருந்த அக்ஷர் படேலிடம் கேட்சாகிப் போனது.
முதல் 4 ஓவர்களில் 40 ரன்களை சேர்த்திருந்த டெல்லி அணி மார்க் வுட்டின் சிறப்பான பந்துவீச்சால் நிலைகுலைந்து போனது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
உத்தி வகுப்பு இடைவேளைக்குப் பிறகு களம் கண்ட டெல்லி அணி பத்தாவது ஓவரில் அதிரடி காட்டியது. ரவி பிஷ்னோய் வீசிய அந்த ஓவரில் டெல்லி 17 ரன்களைத் திரட்டியது. ருஸ்ஸோவ் 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்சரையும் அடித்தார். எல்லைக்கோடு அருகே நின்றிருந்த கிருஷ்ணப்பா கவுதம் கேட்ச் செய்திருக்க வேண்டிய அந்த பந்து, அவரது தவறால் சிக்சராகிப் போனது.
அதிரடி காட்ட முடியாமல் தவித்த வார்னர்
ரவி பிஷ்னோய் வீசிய, ஆட்டத்தின் 12-வது ஓவரில் பீல்டிங் தவறால் ருஸ்ஸோவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தாலும், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்திருந்தார்.
சேவாக்கைப் போலவே டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எதுவாக இருந்தாலும் அதிரடியாக விளையாடக் கூடியவரும், 3 ஐ.பி.எல். தொடர்களில் அதிக ரன் சேர்த்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தியவருமான டேவிட் வார்னர் களத்தில் நிலைத்து நின்றாலும் அதிரடி காட்ட முடியாமல் தவித்தார்.
ஆவேஷ்கான் வீசிய 16வது ஓவரில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியதும் டெல்லி அணியிடம் லேசாக ஒட்டிக் கொண்டிருந்த நம்பிக்கையும் தகர்ந்து போனது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
மார்க் வுட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
அணியை கரை சேர்க்கப் போராடிய வார்னர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 56 ரன்களை சேர்த்திருந்தார். இனி அதிசயம் ஏதும் நிகழ்ந்தால் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற முடியும் என்றிருந்த நிலையில், அந்த அதிசயத்தை எந்தவொரு வீரராலும் நிகழ்த்திக் காட்ட முடியவில்லை. பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் நெருக்கடிக்கு பணிந்து போயினர்.
டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய மார்க் வுட் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மொத்தம் 4 ஓவர்களை வீசிய மார்க் வுட் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். அவர் வீசிய 24 பந்துகளில் 17 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Twitter/Indian Premier League
டெல்லி செய்த 'காஸ்ட்லி மிஸ்டேக்'
டெல்லி அணியின் மோசமான பீல்டிங் அந்த அணியை மோசமாக பாதித்தது. சொல்லப் போனால், அந்த அணியின் தோல்விக்கு அதுவே காரணமாகவும் ஆகிப் போனது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசமே கைல் மேயர்ஸின் சரவெடி ஆட்டம்தான். 150 அல்லது 160 ரன்கள் மட்டுமே சேர்க்கக் கூடிய ஆடுகளத்தில் லக்னோ அணி 193 ரன்களைக் குவிக்க அவரது அதிரடி ஆட்டமே காரணமாக அமைந்தது.
கைல் மேயர்ஸ் மட்டுமல்லாது, வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த மற்றொரு அதிரடி வீரர் நிகோலஸ் பூரனுக்கும் டெல்லி அணி ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டது. அவரும் வாண வேடிக்கை நிகழ்த்தி டெல்லி அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டார். குறிப்பாக, டெல்லி அணி வீரர் கலீலின் பீல்டிங் மோசமாக இருந்தது. 19-வது ஓவரை அவர் வீசி முடித்ததுமே, இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி அவருக்குப் பதிலாக ஆமன் கானை டெல்லி அணி களமிறக்கியது. வெறும் 6 பந்துகளே எஞ்சியிருக்கும் நிலையில் கலீலை டெல்லி அணி மாற்றியதே, அவரது பீல்டிங் தரத்திற்கு சான்றாக அமைந்தது என்று ஜாம்பவான் சச்சின் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்


























