சுல்லி டீல்ஸ்: இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள், தனி விவரங்களை விற்பனைக்கு அறிவித்த சந்தேக நபர் மீது குற்றவியல் விசாரணை

சுல்லி டீல்ஸ்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஆண்டு ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியை உருவாக்கி 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டு விற்பனைக்கு என அறிவித்த நபர் மீது கிரிமினல் சதி செய்ததற்கான குற்றவியல் நடைமுறையில் விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

25 வயதான ஓம்கரேஷ்வர் தாக்கூரை விசாரிக்க டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா நீதிமன்றத்தில் அனுமதி வழங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 2021 -இல் GitHub என்ற இணைய தளத்தின் வாயிலாக இந்த சுல்லி டீல்ஸ் செயலி ஹோஸ்ட் செய்யப்பட்டது. இதில் இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் அவர்களது புகைப்படங்களுடன் அவர்கள் ஏலம் விடப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஓம்கரேஷ்வர் தாக்கூர் என்ற இளைஞர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

கடுமையான குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட டெல்லி காவல்துறையின் ஒரு குழுவினரால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் மாதம் தாக்கூருக்கு ஜாமீன் வழங்கியபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் வாய்ப்போ அல்லது விசாரணையில் செல்வாக்கு செலுத்தும் நிலையோ இல்லை என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

கணினி பயன்பாடுகளில் பட்டம் பெற்ற தாக்கூர் மீது இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்தியாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 196 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய முடிவெடுத்தனர்.

இதில் பிரிவு 196 ஒரு தனிநபரைக் காட்டிலும் "அரசுக்கு எதிரான குற்றங்களை" கையாள்கிற சட்டப்பிரிவாகும்.

பொதுவாக உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

இப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படுகிறது.

இந்நிலையிலேயே, இவ்வழக்கில் பிரிவு 196ன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

சுல்லி டீல்ஸ்: இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்களை விற்பனைக்கு அறிவித்த நபர் மீது குற்றவியல் விசாரணை

பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT

பொதுவெளியில் கிடைக்கும் இஸ்லாமிய பெண்களின் படங்களை எடுத்து அவர்களுக்கான சுயவிவர பக்கங்களை உருவாக்கி, அவற்றை "டீல்ஸ் ஆஃப் தி டே' என்று விவரித்தது சுல்லி டீல்ஸ்.

இதேபோல 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றிய புல்லி பாய் செயலியை உருவாக்கியதாகக் கூறப்படும் 20 வயதான நீரஜ் பிஷ்னோய் என்பவரும் தாக்கூருடன் கைது செய்யப்பட்டார்.

இரண்டு நிகழ்வுகளிலும், உண்மையான விற்பனை எதுவும் நடைபெறவில்லை. இவற்றின் நோக்கம் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தே ஆகும்.

இவற்றில் பட்டியலிடப்பட்ட பலரும் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியும் அரசாங்கமும் தொடர்ந்து மறுத்துவரும் இந்து தேசியவாதத்தின் எழுச்சியைப் பற்றி வெளிப்படையாகப் பேசியவர்கள் ஆவர்.

சுல்லி டீல்ஸ்

இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில், இஸ்லாமிய பெண்களை ஆன்லைனில் கிண்டல் செய்வது சமீபத்திய ஆண்டுகளில் மோசமாகிவிட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஆன்லைன் துன்புறுத்தல்கள் பற்றி 2018 ஆம் ஆண்டு ஆம்னெஸ்டி அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கை, ஒரு பெண் எவ்வளவு அதிகமாகக் குரல் கொடுக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது.

மேலும், மத சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகம் என்கிறது இவ்வறிக்கை.

இந்த இரண்டு செயலிகளிலும் இடம்பெற்றவர்கள் பெரும்பாலும் தங்களது கருத்துக்களை பொதுவெளியில் தொடர்ந்து எடுத்துரைக்கும் இஸ்லாமிய பிரிவை சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.

சுல்லி டீல்ஸில் தனது புகைப்படம் பதிவேற்றப்பட்ட ஒரு வணிக விமானி பிபிசியிடம் கூறுகையில், "இந்த செயலியைப் பற்றி கேள்விப்பட்டபோது தனது முதுகுத்தண்டு வரை சில்லிட்டுப்போனதை உணர்ந்தேன்," என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: