'நெதன்யாகு கத்தாரை தாக்க மாட்டார், ஆனால்... ' - டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று (செப்டம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
அப்போது, "ஹமாஸ் எங்கே இருந்தாலும் அவர்கள் குறிவைக்கப்படலாம் என நெதன்யாகு தெரிவித்தார். கத்தார் மீண்டும் தாக்கப்படுவதை விரும்பவில்லை என நீங்கள் கூறினீர்கள். இது குறித்து ஏதேனும் உத்தரவாதம் இருக்கிறதா?" என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர் (நெதன்யாகு) கத்தாரை தாக்க மாட்டார். கத்தார் பெயரை நீங்கள் உச்சரிப்பது சரியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என எமிர் சொன்னார்.
நான் எப்போதுமே அதை கத்தார் என்றே நினைத்திருக்கிறேன். அது அழகான ஒலி. உண்மையில், கத்தார் நட்பு நாடாக இருக்கிறது. நிறைய பேருக்கு இது தெரியாது. ஆனால், அவர் (நெதன்யாகு) கத்தாரை தாக்க மாட்டார். ஆனால், அவர் வேறு இடங்களை தாக்கலாம்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



