மோதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சர்ச்சைப் பேச்சு - தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
மோதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சர்ச்சைப் பேச்சு - தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் பாஜக தலைவர்கள் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பேசும் போக்கும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோதி மற்றும் பாஜகவின் தலைவர்களின் இந்த பிரசார பாணி தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முஸ்லிம்கள் தொடர்பாக பாஜக தலைவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், அதற்கான எதிர்வினைகளும் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்றும் மோதி குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.

கர்நாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட் மற்றும் 'முஸ்லிம்களுக்கு எதிரான' தேர்தல் விளம்பரம் ஆகியவையும் சர்ச்சையை ஏற்படுத்தின.

‘‘தனிச்சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பாஜக தலைவர் ஜேபி நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ​​“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்த போது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்," என்றார்.

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்று கூறினார்.

பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், “இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத்தனமாக உள்ளன. இப்படியெல்லாம் பேசுவார்கள் என கற்பனை கூட செய்து பார்க்கவில்லை" என்றார்.

அதே நேரம், தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் தலைவர்களின் பிரச்சார பாணி அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டு அதில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக பாஜக தலைவர் ஜே,பி.நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியது. அப்போது ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனைக் கண்டித்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பிரதமரின் மூர்க்கத்தனமான பேச்சால் எழுந்துள்ள அழுத்தத்தால் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தெளிவாக தெரிகிறது. அதை ஈடுகட்ட ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா? இதைத் தான் நியாயமாக நடந்துகொள்கிறோம் என தேர்தல் ஆணையம் கூறுகிறதா" என கேள்வி எழுப்பினார்.

பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது பிரசாரத்திற்கு 48 மணி நேரம் தடை விதித்ததையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்டிற்கும் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது.

பிரதமர் மோதியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழக இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோதி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது’’ என்றார்.

``கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்னையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார்.

``தேர்தலுக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ததை பாஜகவினரில் ஒரு தரப்பு சரி என்றும், மற்றொரு தரப்பு தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று நினைப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆனால் இது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்ததாகவும் பேராசிரியர் நூருதீன் கூறுகிறார்.

ராமர் கோவில் திறப்பால் தனக்கு பலன் கிடைக்கும் என பாஜக நம்பியதாகவும், ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டும் நோக்கில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார் மைக்கேல் குகல்மேன்.

அமெரிக்காவில் இயங்கி வரும் வில்சன் மையத்தின் தெற்காசியா பிரிவின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டும் நோக்கில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார்.

ஆனால், வலதுசாரி சர்வதேச விவகாரங்களின் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா, பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் அல்ல, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது" என்கிறார்

"நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது வரலாற்று ரீதியாக உண்மை கிடையாது,” என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், அரசியல் விமர்சகர்களின் மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது என்கின்றனர்.

சரி, பாஜகவினரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுகளை மேற்கத்திய நாடுகள் எப்படி பார்க்கின்றன?

மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் செய்திகள் நல்ல தொனியில் இல்லை என்கிறார் பேராசிரியர் நூருதீன்.

இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் இந்த விவகாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாதம் வெளியான பியூ ரிசர்ச் ஆய்வறிக்கையில், ஐரோப்பாவில் காலப்போக்கில் இந்தியா மீதான எதிர்மறை எண்ணம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலையும் பேராசிரியர் நூருதீன் சுட்டிக்காட்டினார்.

”பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர, வேறு எந்த நாட்டின் தலைவரும் தேர்தல் பிரசாரங்களில் இந்தியாவை குறிப்பிட்டு விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்கிறார் மைக்கேல் குகல்மேன். ஆனால் வெளிநாட்டு மண்ணில் நிஜார் படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வரும்போது இந்த நிலைமை மாறுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

"இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், சர்ச்சை பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகளை பாஜக மறுக்கிறது.

பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமால் சித்திக், , “மோதி எப்போதும் முஸ்லிம்களின் நலன் பற்றியே சிந்திப்பவர். ஊடுருவியவர்கள் என்பது முஸ்லிம்களை குறிக்கவில்லை. அதை ஏன் முஸ்லிம்களோடு தொடர்புபடுத்துகிறார்கள் என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)