சர்வதேச கவனம் பெறும் அரவிந்த் கேஜ்ரிவால் கைது - ஐ.நா சபை கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, சர்வதேச கவனம் பெறும் அரவிந்த் கேஜ்ரிவால் கைது: ஐ.நா சபை கூறியது என்ன?
சர்வதேச கவனம் பெறும் அரவிந்த் கேஜ்ரிவால் கைது - ஐ.நா சபை கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி மற்றும் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து இப்போது ஐக்கிய நாடுகள் சபையும் கருத்து தெரிவித்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனி குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் அரசியல், சிவில் உரிமைகள் மற்றும் அனைத்து மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரமான, நியாயமான சூழலில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று உலகம் நம்புகிறது,” என்று தெரிவித்தார்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கேஜ்ரிவால் கைது தொடர்பாக ஐ,நா தெரிவித்துள்ள கருத்து திட்டமிடப்பட்டதைப் போல் உள்ளதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் துருக்கி, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கான தூதராகச் செயல்பட்டவருமான கன்வால் சிபல் விவரித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கேஜ்ரிவாலுக்கு கிடைக்கும் இந்த ஆதரவு ஏதாவது சொல்கிறதா? உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஐ.நா சாசனம் தடை செய்கிறது. ஆனால், ஐ.நா பொதுச் செயலாளரின் அலுவலகமே அதை மீறுகிறது. ஐ.நா. அதன்மீதான அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)