மூன்று சிறுமிகள் வெளியிட்ட வீடியோவால் சீரடைந்த கிராமச்சாலை

காணொளிக் குறிப்பு, மூன்று சிறுமிகளின் வைரல் வீடியோவால் சாலை சீரமைப்பு
மூன்று சிறுமிகள் வெளியிட்ட வீடியோவால் சீரடைந்த கிராமச்சாலை
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவை சேர்ந்த நேஹா காக்ரே, மானசி பவார் மற்றும் ஜோத்ஸ்னா முக்னே ஆகிய மாணவிகள், சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்த காணொளியைப் பதிவு செய்தனர். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இவர்கள் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் பகுதியில் உள்ள கண்ட்பே கிராமத்தில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களைப் போன்ற மாணவிகள், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து தினமும் சில கிலோமீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.

அதுகுறித்துப் பேசிய மானசி பவார், "சாலையில் பள்ளங்கள் இருந்தன. வாகனங்கள் செல்லும்போது சேறு எங்கள் மீது தெறிக்கும். எங்கள் பள்ளிச் சீருடை வெள்ளை நிறம் என்பதால் அது அழுக்காகிவிடும். அழுக்கான உடையுடன் பள்ளிக்குச் செல்ல முடியாது. மீண்டும் உடைகளை மாற்ற வேண்டியிருக்கும். அதனால் வகுப்புகளுக்குச் செல்ல தாமதமாகும்." என்றார்.

மலையேற்றத்துக்குச் செல்வோரின் தொடக்கக் கிராமமான கொண்டிவாடேவுக்குச் செல்லும் சாலை குறித்து அவர்கள் காணொளி ஒன்றைப் பதிவு செய்தனர்.

"நாங்கள் நண்பர்கள் அனைவரும் சாலையில் நடந்து சென்றுகொண்டே புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துக்கொண்டிருந்தோம். நானும் ஜோத்ஸ்னாவும் சாலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மானசி, 'நான் உங்களை வீடியோ எடுக்கிறேன்' என்று கூறி அதை எடுத்தார்." என்கிறார் மாணவி நேஹா காக்ரே.

"ஒவ்வோர் ஆண்டும் ஓர் அமைப்பு எங்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கும். அதனால் எங்கள் பள்ளி ஆசிரியர் எங்களை அங்கு அனுப்பினார். எங்களுடன் வந்த வகுப்புத் தோழி ஒருவரிடம் ஃபோன் இருந்தது. நாங்கள் வேறு கிராமத்துக்குச் செல்வதால், பாதுகாப்புக்காக அவரது தாய் அதை அவரிடம் கொடுத்திருந்தார்.

சாலையில் பெரிய பள்ளங்கள் இருப்பதைப் பார்த்தோம். இந்தப் பள்ளங்களைப் பார்த்து அந்தப் பெண்கள் கேலி செய்யத் தொடங்கினர். இதை விரைவுச்சாலை என்றெல்லாம் அழைத்தனர். அதனால் வேடிக்கைக்காக நான் அதை வீடியோ எடுத்தேன். மக்கள் செல்லும் இடங்களிலெல்லாம் வலைப்பதிவு காணொளிகள் எடுப்பதை யூடியூபில் நான் அடிக்கடி பார்ப்பேன். அதனால் நானும் ஒரு வலைப்பதிவு காணொளி எடுத்தேன்." என்று மானசி பவார் கூறினார்.

காணொளி வைரலானதைத் தொடர்ந்து நிர்வாகமும் இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இந்த மாணவிகளை அவர்களின் குடும்பத்தினரும் கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

"யாரோ ஒருவர் அந்த வீடியோவைக் காட்டி, 'இந்தப் பெண் யார்?' என்று கேட்டார். நான் வீடியோவைப் பார்த்தேன். 'ஓ, இது என் மகள்' என்று தெரிந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெருமையாக உணர்ந்தேன். நன்றாக இருந்தது. இந்தப் பெண்கள் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 'ஜென் ஸீ தலைமுறை' சிறப்பாகச் செயல்படுகிறது." என்று மாணவி நேஹாவின் தந்தை ஆத்மாராம் காக்ரே பெருமிதத்துடன் கூறினார்.

"பள்ளியில் நண்பர்கள் எங்கள் பெயர்களுக்குப் பதிலாக எங்களை 'ரிப்போர்ட்டர்', 'கேமராமேன்' என்று அழைக்கிறார்கள்." என்று புன்னகையுடன் கூறுகிறார் மாணவி நேஹா காக்ரே.

"என் பெயரை எப்படி எழுதுவது என்பது கூட பலருக்குத் தெரியாது. 'ஜோத்ஸ்னா' என்று அவர்களால் உச்சரிக்கவும் முடியாது. இப்போது இந்த வீடியோ வைரலான பிறகு, எல்லோரும் என்னை 'ரிப்போர்ட்டர்' என்று அழைக்கிறார்கள். என் சகோதரிகளும் என்னைக் கேலி செய்கிறார்கள்." என்கிறார் ஜோத்ஸ்னா முக்னே,

தங்கள் கிராமத்தின் சாலைகள் மட்டுமின்றி, அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று இந்த மாணவிகள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பொதுப்பணித் துறை அதிகாரி ராகுல் தேவாங், "ஜூலை 16ஆம் தேதிக்குள் இந்தப் பகுதியை நாங்கள் சீரமைத்துவிட்டோம். ஆனால் மழை காரணமாக மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டன. வீடியோ வைரலான பிறகு, சாலையில் தற்காலிகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாகனங்கள் செல்லும் வகையில் சாலையைச் சமன்படுத்தி, அந்தப் பகுதியைச் சீராக்கி வருகிறோம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் நிரந்தரத் தீர்வைக் காண முயற்சித்து வருகிறோம். ஏற்கெனவே ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளோம்." என்று கூறினார்.

இந்த வீடியோ வைரலான பிறகு, மகாராஷ்டிராவின் மற்ற கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், கிராமப்புறப் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த மூன்று மாணவிகளும் விரும்புகின்றனர்.

"எல்லோரும் நகரச் செய்திகளுக்குத்தான் கவனம் செலுத்துகிறார்கள். கிராமப்புறப் பிரச்னைகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் கிராமங்களையும் பார்க்க வேண்டும்." என்கிறார் மாணவி நேஹா காக்ரே.

செய்தியாளர்: ஜான்வி மூலே

ஒளிப்பதிவு&படத்தொகுப்பு: ராகுல் ரன்சுபே

முழு விவரம் காணொளியில்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு