You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளைய தீர்ப்பு முதல் வாரிசு வரை: திரையுலகில் விஜய்யின் முப்பது ஆண்டுகள்
1992ஆம் ஆண்டில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய், திரையுலகில் 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். ரஜினி - கமல் தலைமுறைக்கு அடுத்தபடியாக மிக வெற்றிகரமான நடிகராகவும் உருவெடுத்திருக்கிறார் விஜய்.
விஜய்யின் 66வது திரைப்படமான வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருக்கிறது. இந்தப் படம விஜய்யுடைய திரை வாழ்வின் முப்பதாவது ஆண்டில் வெளிவரும் திரைப்படம்.
முந்தைய தலைமுறையின் முன்னணி நடிகர்களான ரஜினி - கமலுடன் ஒப்பிட்டால், 30 ஆண்டுகளில் 66 திரைப்படம் என்பது குறைவான எண்ணிக்கைதான். ஆனால், இந்தப் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு வரையிலான விஜய்யின் திரைப் பயணம் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதுதான்.
ஆனால், இந்த 30 ஆண்டுகளில் விஜய்யின் திரைப்பயணத்தில் சோர்வே கிடையாது. அதற்கு முந்தைய படம் வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்துவதுதான் அவரது பாணி.
1992ல் நாளைய தீர்ப்பு படம் வெளியானபோது விஜய் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தார். படம் வெளிவந்தபோது கேலியும் கிண்டல்களும் இருக்கவே செய்தன. படம் சுமாராக ஓடியது. இதற்கு அடுத்ததாக செந்தூரபாண்டி. இந்தப் படம் சற்று சுமாராக ஓடவே, படிப்புக்கு விடைகொடுத்துவிட்டு முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் விஜய்.
இதற்குப் பலன் இருக்கவே செய்தது. ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன என்றாலும், ஒரு 'ப்ரேக்' என்று சொல்லக்கூடிய வகையில் இருக்கவில்லை.
1996இல் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம், விஜய் நீண்ட காலமாக எதிர்பார்த்த வெற்றியாக அமைந்தது. இத்தனைக்கும், விஜய் அதுவரை உருவாக்கி வைத்திருந்த இமேஜிற்கு முற்றிலும் மாறான படமாக அது அமைந்தது. இருந்தாலும் மெகா ஹிட்.
இதற்குப் பிறகு பாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம், விஜய் முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் வர முடிந்தது. ஆனால், இந்த ஆண்டுகளில் விஜய் ஒரே மாதிரி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலாவே வா என எல்லாம் மென்மையான காதல் திரைப்படங்கள்.
2003ஆம் ஆண்டில் வெளிவந்த திருமலை இதையெல்லாம் மாற்றியது. அந்த கட்டத்தில் ஒரே மாதிரியான காதல் திரைப்படங்களில் நடித்து அவருக்கும் போரடித்துப் போயிருந்தது. திருமலையின் வெற்றி அவர் செல்ல வேண்டிய திசையைக் காட்டியது போலத் தோன்றியது. அதற்குப் பிறகு, அடுத்தடுத்து ஆக்ஷன் திரைப்படங்கள்தான்.
திருமலைக்குப் பிறகு அவர் நடித்த, கில்லி, மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, போக்கிரி போன்ற ஆக்ஷன் திரைப்படங்கள் அனைத்துமே ஹிட் அல்லது மெகா ஹிட். இதற்கு நடுவில் சச்சின் போன்ற மென்மையான காதல் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்தத் திசையை அவர் தேர்ந்தெடுக்க ஒரு காரணம் இருந்தது. விக்ரம் நடித்த தூள் படத்தின் கதையை இயக்குநர் தரணி முதலில் விஜய்யிடம் தான் சொல்லியிருந்தார். ஆனால், அந்தப் படத்தை விஜய் மறுத்துவிட்டார்.
ஆனால், விக்ரம் நடித்து வெளிவந்த படத்தைப் பார்த்த அவர் அசந்துபோய், தரணியிடம், "இந்தக் கதையையா என்னிடம் சொன்னீர்கள்?" என்று கேட்டார்.
"உங்களிடம் சொன்ன கதைதான். ஆனால், படம் உருவாகும்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்படி வந்துவிட்டது" என்றார் தரணி. "இதெல்லாம் அநியாயங்க" என்று சொன்னார் விஜய். இதையெல்லாம் ஒரு பேட்டியிலேயே விஜய் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
அந்தப் படம் வெளிவந்தபோதுதான் வசீகரா படமும் வெளிவந்தது. வசீகரா சுவாரஸ்யமான படம் என்றாலும், தூள் பற்றியே பேச்சு இருந்தது.
ஆகவே, எதிர்காலம் ஆக்ஷன் படங்களுக்கே என்று முடிவு செய்தார் விஜய். பின்னர், தரணி - விஜய் கூட்டணியில் ஒக்கடு என்ற தெலுங்குப் படத்தை தமிழில் கில்லியாக எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு விஜய்யின் பாதை எது என்பது தெளிவாகிவிட்டது. விஜய் நடித்து வெளிவந்த பல திரைப்படங்கள் குறித்து திரைப்பட ரசிகர்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தன.
குறிப்பாக சுறா போன்ற படங்கள் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இருந்தபோதும், ஆக்ஷன் - காமெடி - பஞ்ச் வசனங்கள் - அட்டகாசமான நடனங்களுடன் கூடிய பாடல்கள் என்ற பாதையிலிருந்து விஜய் விலகவே இல்லை.
விஜய் இப்போது மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ என உருவெடுத்துவிட்டாலும் அவ்வப்போது நகைச்சுவை மிகுந்த திரைப்படங்களை அவர் தவிர்த்ததேயில்லை. பிரண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணம்.
1990களின் மத்தியில் வருடத்திற்கு ஐந்தாறு படங்களில் நடித்த விஜய், நாட்கள் செல்லச் செல்ல தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டார். 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளிவந்தன. பிறகு எல்லா ஆண்டுகளிலும் வருடத்திற்கு ஒரு படம் என்ற பாணியையே பின்பற்றுகிறார்.
விஜய் தொடர்ந்து இதுபோலவே ரசிகர்களை திரையில் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுவதைப்போல அரசியலில் இறங்கப்போகிறாரா என்பவையெல்லாம் இப்போதைக்கு விடை தெரியாத கேள்விகள்.
ஆனால், கடந்த கால் நூற்றாண்டில், தமிழக இல்லங்களில் தனது படங்கள் மூலம் பல தருணங்களில் மகிழ்ச்சி நிலவச் செய்துள்ளார் என்பது மட்டும் நிச்சயம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்