'தமிழக கோவில்களில் செல்போன் தடை அர்ச்சகர்களுக்கும் பொருந்த வேண்டும் '

கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கவும், கண்ணியமான ஆடை அணிந்து வருவதையும் இந்து அறநிலையத்துறை  உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. செல்போன் தடையை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இந்து அறநிலையத்துறை, ஆடைக் கட்டுப்பாடு பற்றிய முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையதுறை அதிகாரிகள், தீர்ப்பை ஏற்பதாகவும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கொண்டுவரும் செல்போனை பாதுகாப்பாக வைக்கும் மையங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும், ஆடைக் கட்டுப்பாடு குறித்து தற்போதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜே.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு கீழ்காணும்வாறு உத்தரவிட்டது.

''அரசியல் சாசனத்தின் 25வது பிரிவின் கீழ், அனைத்து நபர்களும் சுதந்திரமாக மதத்தை பின்பற்றுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கோவில் வளாகத்திற்குள் அத்தகைய சுதந்திரம் விதிமுறைகளுக்கு உட்பட்டது. கோவிலில் நடக்கும் வழிபாடுகளில் கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் குறித்த விதிகளை ஆகமங்கள் வகுத்துள்ளன. அதன்படி, கோவிலின் கண்ணியம் மற்றும் புனிதம் பேணப்படுவதை கோவில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எனவே, கோவிலுக்குச் செல்லும் நோக்கத்தில் இருந்து பக்தர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், வளாகத்திற்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்துவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்தலாம்,'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், ''பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நம் நாட்டில் பல கோவில்களில் செல்போன் தடை கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் ஆகியவை செல்போன் தடை செயல்பாட்டில் உள்ளதற்கு சான்று. இந்த கோவில்கள் ஒவ்வொன்றிலும் செல்போன்களை டெபாசிட் செய்ய தனித்தனி பாதுகாப்பு கவுன்டர்கள் உள்ளன. அதே போலவே எல்லா கோவில்களிலும் செயல்படுத்தவேண்டும்,'' என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

கோவிலுக்கு வருபவர்கள் 'டீசென்டான' ஆடைகளை அணிந்துவருவதையும் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மனுதாரர் சீதாராமனுக்காக ஆஜரான வழக்கறிஞர் எம்.சி. சுவாமி பேசுகையில், இரண்டு கட்டுப்பாடுகளையும் உடனடியாக செயல்படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது என்கிறார்.

''ஏற்கனவே, மதுரை கோவிலில் இருப்பது போல திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் செல்போன் கொண்டுசெல்வதற்குத் தடை தேவை எனக் கேட்டிருந்தோம். செல்போனில் படம் எடுப்பவர்கள் பெண்களின் அனுமதியின்றி அவர்களைப் படம் எடுக்கிறார்கள். கோவில் சிற்பங்கள் மட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு செல்போன் தடை தேவை. அதனால், செல்போன் பயன்பாட்டிற்கு தடை மற்றும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கோவிலுக்கு வரும்போது கண்ணியமான உடை  அணிந்துவரவேண்டும் என்றும்  நீதிபதிகள் கூறியுள்ளனர்,'' என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

பக்தர்களின் நிலைப்பாடு என்ன ?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செல்போன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் ஆடை கட்டுப்பாடு குறித்து பக்தர்களிடம் பேசினோம். ஒரு சிலர் செல்போன் தடை தேவையான ஒன்று என்றும் ஒரு சிலர் அந்த தடை அவசியமில்லை என்றும் கூறுகின்றனர். ஆடைக் கட்டுப்பாடு குறித்தும் கலவையான கருத்துகளையே பக்தர்கள் கொண்டுள்ளனர்.

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பக்தர் தேவியிடம் பேசியபோது, ''கோயிலுக்கு செல்போன் எடுத்துவரத் தடை என்பதை வரவேற்கலாம். கோவில் வளாகத்தில் போட்டோ எடுப்பது, சினிமா பாட்டு பாடுவது, ஒரு சிலர் விதவிதமாக போட்டோ எடுப்பது என்பதெல்லாம் குறையும். உண்மையான பக்தியுடன் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வதற்கு இந்த தடை உதவும். விஷேச பூஜை காலத்தில் சாமி கும்பிடுபவர்களை விட செல்போனில் படம் எடுப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்,'' என்கிறார்.

ஆடைக் கட்டுப்பாடு குறித்து பேசிய அவர், ''குருவாயூர் கோவிலில் கேரளாவின் பாரம்பரிய உடையை அணிந்தால்தான் உள்ளே செல்லமுடியும் என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. அது எல்லா கோவில்களிலும் சாத்தியமா என்று தெரியவில்லை. வேலையை முடித்துக்கொண்டு இளைஞர்கள் பலர் கோவிலுக்கு வரும்போது, ஆடைக் கட்டுப்பாடு அவர்கள் வருவதைத் தடுக்கும். புடவை, வேட்டி மட்டுமல்லாமல் இந்தக் காலத்துக்கு ஏற்ற உடைகளை நாம் கோவில்களில் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை,'' என்கிறார்.

கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

பட மூலாதாரம், Ranganathan

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு செல்லும் பக்தர் ரங்கநாதன், செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதால் நன்மையை விட தீமைதான் அதிகம் என்கிறார். ''செல்போன் பயன்பாடு இருக்கக்கூடாது என்று முடிவு செய்தால், பக்தர்கள் மட்டுமல்ல, அர்ச்சகர்களிடமும் செல்போன் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யவேண்டும். சில கோவில்களில் அர்ச்சகர்கள் கருவறையில் வீடியோ எடுக்கிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே அர்ச்சனை செய்கிறார்கள். பக்தர்கள் ஒருசிலர் செல்ஃபி எடுப்பது, கருவறையை வீடியோ எடுப்பதை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது சரியல்ல. சில கோவில்களில் நடக்கும் பிரச்னைகள் வெளிவருவதற்கு செல்போன்தான் காரணமாக உள்ளது,'' என்கிறார் ரங்கநாதன்.

''செல்போன் பயன்பட்டால் பல நன்மைகளும் உள்ளன. பல இளைஞர்கள் கோவில் வரலாறு, கல்வெட்டு போன்றவற்றை வீடியோ எடுப்பதால், பல ஊர்களில் இருக்கும் கோவில்களை நாம் பார்க்கமுடிகிறது. கோவிலுக்கு சென்றால், அந்த கோவிலுக்கான பாடல்களை நாம் வாசிப்பதற்கும் செல்போன் உதவுகிறது,'' என்கிறார் ரங்கநாதன்.

திருவொற்றியூர் கோவில் பக்தர்கள் ரேவதி மற்றும் அவரது சகோதரி அருணாபாய். ''நாங்கள்  தினமும் திருவொற்றியூர் கோவிலுக்கு வருபவர்கள். கோவிலில் பூசை நடக்கும்போது ஒருவரின் செல்போன் ஒலித்தால், எல்லோருடைய கவனமும் ரிங்டோன் பற்றிதான் இருக்கும். செல்போன் தடை நல்லது. அதேபோல ஆடையில் சுடிதார், பேண்ட் - சர்ட் அணிவதை ஏற்றுக்கொள்ளலாம். எல்லோரும் புடவை, வேட்டி அணிவது இந்த காலத்தில் சாத்தியமில்லை,'' என்கிறார்கள்.

கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை
படக்குறிப்பு, திருவொற்றியூர் கோவிலில் ரேவதி, அருணாபாய் உள்ளிட்டோர்.

இந்து அறநிலைய துறை சொல்வது என்ன ?

செல்போன் கவுன்டர்கள் அமைப்பது குறித்து கேட்டபோது, பிபிசி தமிழிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ''சமீபத்தில்தான் கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து எங்கள் துறையில் அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கவுன்டர் வெற்றிகரமாக செயல்படுகிறது. அதேபோலவே, தமிழகத்தில் உள்ள 48 பெரிய கோவில்கள், பக்தர்கள்  அதிகம் வரும் 150 கோவில்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு செல்போன் கவுன்டர் விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை,'' என தெரிவித்தனர்.

கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

பட மூலாதாரம், HRCE

செல்போன் பயன்பாடு காரணமாக ஒரு சிலர் கோவில்களில் செல்ஃபி எடுப்பது, மூலவரை வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறிய அதிகாரிகள், ''கோவிலுக்கு வருபவர்கள் செல்ஃபி எடுப்பதைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. தீடீரென பூஜை நடக்கும்போது, மூலவரை வீடியோ எடுக்கிறார்கள். பல இடங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால் இதுபோல கவுன்டர் அமைப்பதால் அதை கட்டுப்படுத்தமுடியும். அதேபோல செல்போன் கவுன்டர்களில் சிசிடிவி பொருத்தப்படவேண்டும். அது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும்,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

ஆடை கட்டுப்பாடு குறித்து கேட்டபோது, ''நீதிபதிகள் செல்போன் பயன்பாடு குறித்த உத்தரவை முழுமையாக பின்பற்றுவோம். 'டீசென்ட்டான' ஆடை குறித்து நீதிபதிகள் கூறியது பற்றி எங்கள் துறையில் ஆலோசனை கூட்டம் நடத்திதான் முடிவு செய்யவேண்டும். இதில் உடனே முடிவு எதையும் நாங்கள் சொல்லமுடியாது. அதனால் இப்போது இதுகுறித்து பேசமுடியாது,'' எனத் தெரிவித்தனர்.

''இரண்டு கட்டுப்பாடுகளும் தேவை இல்லை ''

நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் ரேணுகா, இரண்டு கட்டுப்பாடுகளும் தேவையற்றவை என்கிறார்.

கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

பட மூலாதாரம், Renuka

படக்குறிப்பு, சமூக செயற்பாட்டாளர் ரேணுகா

''நம் சமூகம் முன்னேறிய சமூகமாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் பெரியளவில் நம் வாழ்க்கையை மாற்றியுள்ளது. செல்போன் இருந்ததால்தான், கோவில்களில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள், திருட்டு போன்றவை வெளிவந்தன. ஆடை பற்றி சொல்லும்போது, 'டீசென்ட்' என்ற வார்த்தையை நீதிபதிகள் சொல்கிறார்கள். டீசென்ட் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்தை ஏற்படுத்தும். ஒரு சிலர் ஜீன்ஸ், டி-சர்ட் என்பதை டீசென்ட் என்பார்கள். ஒருசிலர், புடவை, வேட்டிதான் தேவை என்பார்கள். அதனால், இந்த இரண்டு கருத்தும் ஏற்புடையதல்ல,'' என்கிறார் ரேணுகா.

கோவிலில் உள்ள கலைநயம் பற்றி தெரிந்துகொள்வதற்கு செல்போன் உபயோகமான கருவி என்று கூறிய அவர், ''நம் கோவிலின் பெருமைகளை செல்போன் வீடியோ மூலம் பல இளைஞர்கள் வ்லோக் (vlog) பதிவிடுகிறார்கள். நம் கலாசாரம் பற்றிய தேடலை இந்த தடை தடுக்கும். நம் கோவிலில் உள்ள சிற்பங்களில் விதவிதமான உடை உடுத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம். அதுபோலவே, இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொருவரும், விதவிதமான அணிவதை ஏன் தடை செய்யவேண்டும்,'' எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, ஆகமங்கள் என்றால் என்ன? கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: