You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறை - ஏன்? பின்னணி என்ன?
வருமான வரித்துறை தங்களது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரித்துறை 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி இளைஞர் காங்கிரசின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலான பணத்தை முடக்கிவிட்டு மீதமுள்ள பணத்தை உபயோகப்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த வரம்புடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சியின் கணக்குகளில் உள்ள நிதியின் அளவு மிகவும் குறைவு என்றும், எனவே உபயோகிப்பதற்கு எந்த நிதியும் மீதமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நளின் கோலி, ‘‘தனக்கு முன்பாக யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சட்டம் பார்ப்பதில்லை, விதிமீறல் நடந்ததா இல்லையா என்பதை மட்டும்தான் சட்டம் பார்க்கிறது,’’ என்று கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)