You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவில் சீனா செல்வாக்கு பெறுவதை தடுப்பதில் இந்தியாவுக்கு முதல் வெற்றி - என்ன தெரியுமா?
இந்தியா - மாலத்தீவு உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை திரும்ப அழைத்த பிறகு அந்த இடத்திற்கு இந்தியாவில் இருந்து திறமையான தொழில்நுட்பக் குழு அனுப்பி வைக்கப்படும் என்று வியாழக்கிழமை தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இந்தியா ஒரு நடுநிலையான பாதையைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மாலத்தீவும் அதை ஏற்கத் தயாராகும் என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அங்கு இந்திய வீரர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியா தனது பணிகளை தொழில்நுட்பக் குழுவைக் கொண்டும் செய்ய முடியும். மாலத்தீவில் சீனா செல்வாக்கு பெறுவதை தடுப்பதில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது கருதப்படுகிறது.
மாலத்தீவின் பூகோள அமைவிடம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மாலத்தீவு வழியாக மட்டுமே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அந்த நாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஒரு கட்டத்திற்கு மேல் மோசமடையாமல் இருக்குமாறு செய்வது மாலத்தீவுக்கு அவசியம் என்று புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகளுக்கான மையத்தின் இணைப் பேராசிரியராக உள்ள அரவிந்த் யெலேரி கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
இந்தியா தனது துருப்புகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் தொடக்கத்தில் பிடிவாதமாக இருந்த மாலத்தீவு, தற்போது அங்கு பணியமர்த்தப்படுபவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்புடையவர்களாக இருக்கக் கூடாது என்று ஒப்புக் கொண்டிருப்பது பெரிய விஷயம் என்று அரவிந்த் யெலேரி குறிப்பிட்டார்.
"வேறு நாட்டின் ராணுவத்தில் பணியில் இருக்கும் வீரர்கள் தனது நாட்டில் நிலைநிறுத்தப்படுவது ஒரு நாட்டிற்குக் கவலை அளிக்கும் விஷயம்தான். ஓய்வுபெற்ற அதிகாரிகள், கடலோர காவல்படை அல்லது பிற துணை ராணுவப் படைகளின் விஷயம் வேறு. இருப்பினும் இத்தகைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வது மாலத்தீவுடைய நெகிழ்வுத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை முழுமையாகப் புறந்தள்ள முடியாது என்பதை அது ஒருவகையில் ஏற்றுக்கொண்டுள்ளது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு கூறியது.
பிப்ரவரி 5ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்ற அவையில் பேசிய அதிபர் முய்சு, “மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சமீபத்திய பேச்சுவார்த்தையில், மொத்தமுள்ள மூன்று விமானப்படை தளங்களில் ஒரு தளத்தில் இருந்து வரும் மார்ச் 10ஆம் தேதிக்குள்ளும், மீதமுள்ள இரண்டு தளங்களில் இருந்து மே 10ஆம் தேதிக்குள்ளும் இந்திய ராணுவம் வெளியேறும்” என்று கூறினார்,
ஆனால் தற்போது இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் மாலத்தீவின் உயர்மட்ட மையக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்குப் பிறகு பிப்ரவரி 2ஆம் தேதி இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் மூன்றாவது கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும் “மாலத்தீவில் இருக்கும் ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு மாற்றாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.” என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் மாலத்தீவுக்கான நிதியுதவியை இந்தியா குறைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், “இந்தத் தொகை உண்மையில் அதிகரித்துள்ளது. இறுதி புள்ளி விவரங்கள் வரும்போது, உதவி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவு ஏற்படும்,” என்றார்.
கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா மாலத்தீவுக்கு 400 கோடி ரூபாயை ஒதுக்கியது. பின்னர் இந்த உதவி 770 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இந்த உதவித் தொகை 600 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “மாலத்தீவின் வளர்ச்சிக்கான பங்குதாரராக இருப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. வரும் காலங்களில் மாலத்தீவு மூலம் கிடைக்கும் தெளிவைத் தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீடு மாற்றப்படலாம்,” என்று வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்தது.
மாலத்தீவு அதிபர் முய்சுவின் கட்சி சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அவரது கட்சி 'இந்தியாவே வெளியேறு' என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரம் செய்தது.
மாலத்தீவில் இருக்கும் தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அதிபராகப் பதவியேற்ற பிறகு முய்சு கேட்டுக் கொண்டார். வேறு எந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கும் தனது நாட்டில் இடம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
மாலத்தீவில் பொதுமக்களின் மருத்துவ தேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகச் செயல்படும் இந்திய விமான தளத்தின் பணிகள் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.
மாலத்தீவில் தற்போது 77 இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்கள் கடல் கண்காணிப்புக்காக ஒரு Dornier 228 விமானத்தையும், மருத்துவ உதவிக்காக இரண்டு ஹெச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்களையும் இயக்குகின்றனர்.
இதற்கு மத்தியில், சீனாவிடம் இருந்து பெரும் பொருளாதார உதவியை நாடப் போவதாக முய்சு அறிவித்ததைத் தொடர்ந்து மாலத்தீவு "கடுமையான கடனில் சிக்கும் அபாயத்தில்" இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் புதன்கிழமை எச்சரித்துள்ளது.
மாலத்தீவு சீனாவிடம் இருந்து எவ்வளவு கடன் வாங்கப் போகிறது என்பது பற்றிய விரிவான தகவலை சர்வதேச நாணய நிதியம் அளிக்கவில்லை. ஆனால் "மாலத்தீவு விரைவில் தன் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்" என்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் ஐஎம்எஃப் கூறியது.
"பெரிய கொள்கை மாற்றங்கள் இல்லையென்றால் மாலத்தீவின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசு கடன் ஆகிய இரண்டும் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தீவிர வெளிநாட்டுக் கடனில் சிக்கும் ஆபத்தில் அது உள்ளது," என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
சீனாவிடம் கடன் வாங்கி பல தெற்காசிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பாகிஸ்தானும் இலங்கையும் சீனாவின் லட்சிய திட்டமான ’பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு கட்டுமானங்களுக்காக அந்த நாட்டிடமிருந்து பெரும் கடன் வாங்கி இப்போது கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
மாலத்தீவின் மீது மொத்தமாக மூன்று பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன் உள்ளது. அதில் 42 சதவீதம் சீனாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.எம்.எஃப். எச்சரிக்கைக்கு முன்பாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் புள்ளி விவரங்கள்படி, நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் உள்ளது என்று முய்சு கூறியிருந்தார்.
இந்நிலையில், மாலத்தீவு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை இந்த வாரம் ஒப்புக்கொண்ட முய்சு, தடைபட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொடங்க விரும்புவதாகக் கூறினார். நாட்டின் பொருளாதார நிலை பற்றிக் குறிப்பிட்ட அவர் பெரும் கடனுடன் தத்தளிக்கும் பொருளாதாரத்தைத் தாங்கள் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முய்சு தனது இந்திய விரோத அணுகுமுறையால் அரசியல் மட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோதி லட்சத்தீவு சென்றார். அவரது பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டனர், அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜிய ரீதியிலான பிரச்னை தொடங்கியது.
இதன் பின்னர் சுற்றுலாவுக்காக மாலத்தீவு செல்வதற்குப் பதில் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டும் என்று இந்தியர்கள் சிலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவு உயர்வு ஏற்பட்டுள்ளதாக தி இந்து நாளிதழின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)