'நூலிழையில் உயிர் தப்பினேன்' - கரூர் கூட்ட நெரிசலில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம்

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, துர்காதேவி
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்." என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.

"யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்," என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயிரிழந்த ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா (தாய் மற்றும் குழந்தைகள்)

கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

கரூரில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்த நிலையில் மாலை வேளையில் தான் விஜய் அங்கு சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

'உணவு, தண்ணீர் தட்டுப்பாடு'

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்தவரான துர்கா தேவி தான் நூலிழையில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பியதாகக் குறிப்பிடுகிறார். "காலை நேரத்தில் கூட்டம் அளவாகவே இருந்தது. விஜயின் வருகை தாமதம் ஆகவே கூட்டம் அதிகரித்தது. வெளியூர் மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றதால் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை. மாலை கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே பலர் மயக்கமடைந்தனர்." என்றார்.

சில இளைஞர்கள் உதவியால் தான் உயிர்பிழைத்ததாக குறிப்பிடும் துர்கா தேவி, "காலையில் இருந்து வந்தவர்கள் யாருமே அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. நேரம் ஆகஆக கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. மாலையில் கட்டுக்கடங்காத அளவிலான கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நான் ஒரு கட்டடத்தின் மீது ஏற உதவி செய்தார்கள். அதனால் காயமின்றி பிழைத்தேன்." என்றார்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, லட்சுமி

மயக்கமடைந்த குழந்தைகள்

கூட்ட நெரிசலுக்கு முன்பே குழந்தைகள் பலரும் மயக்கமடைந்ததை தன் கண்களால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் அதே ஊரைச் சேர்ந்தவரான லட்சுமி.

பிபிசியிடம் பேசிய அவர், "காலையில் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் இல்லை. முதலில் ஏற்பாடுகள் சரியாகவே இருந்தது. ஆனால் கூட்டம் அதிகரிக்கவே யாராலும் சமாளிக்க முடியவில்லை. பல குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்." எனத் தெரிவித்தார்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, ஆனந்த் குமார்

காலையிலிருந்தே கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் காத்திருந்ததாக கூறுகிறார் அதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆனந்த் குமார்.

"கரூரில் இதுபோன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை. விஜய் மாலை தான் வந்தாலும் மதியத்திலிருந்தே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை எவ்வாறு அழைத்து வந்தார்கள் எனத் தெரியவில்லை. ரசிகர்கள் மிகவும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். பாலத்தின் மீதும் பயங்கர கூட்ட நெரிசலாக இருந்தது. ஊர் முழுவதும் குழுமியிருந்த கூட்டம் விஜய் பேச இருந்த இடம் அருகே மொத்தமாக சென்றது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம்." என்றார் அவர்.

திருமண நிச்சயத்திற்கு முன்பு உயிரிழந்த பொறியாளர்

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, பொறியாளர் ரவியின் தாயார்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் சிவில் பொறியாளரான ரவியும் ஒருவர்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தாயார், "என் மகன் கடந்த சில மாதங்களாக சொந்தமாக தொழில் செய்து வருகிறான். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை என் மகனுக்கு பெண் பார்க்க இருந்தோம். அதனால் என்ன வாங்கி வர வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருந்தான். நண்பர்களுடன் பிரசாரத்தை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றான். அவனின் செல்போன் எடுக்கவில்லை. அதன் பின்னர் அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வரச் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் அவன் உயிருடன் இல்லை." என உருக்கத்துடன் தெரிவித்தார்.

வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் பலியான 2 வயது சிறுவன்

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, பேரனை பறிகொடுத்த சோகத்தில் வசந்தா

இந்த கூட்ட நெரிசலில் வேலுசாமிபுரத்தை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த வசந்தா என்பவரது 2 வயது பேரனும் உயிரிழந்துள்ளார். "எனது பேரனை அவனின் அத்தை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். சாலையின் ஓரமாக தான் அவர் நின்றுள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாகி நகரத் தொடங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தனர்." எனத் தெரிவித்தார்.

இதில் குழந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த அவரது அத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர், தவெக பிரசாரம், விஜய் பிரசாரம், கரூர் கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசலில் கரூரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான ஜெயபால் காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் தந்தை அழகிரி பிபிசியிடம் பேசுகையில், "நண்பர்களுடன் கூட்டத்திற்கு சென்றிருந்தான். அங்கு கூட்ட நெரிசல், உயிரிழப்பு என செய்தி வந்தபோது பதறிப்போய் அவனுக்கு அழைத்தால் அவன் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. அவன் நண்பர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1 மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அழைத்து கூறினார்கள்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு