வயநாடு துயரம்: இறுதிச் சடங்குக்கு கூட பணமின்றித் தவிக்கும் உறவுகள் - காணொளி

காணொளிக் குறிப்பு, வயநாடு துயரம்: இறுதிச் சடங்குக்கும் பணமின்றித் தவிக்கும் உறவுகள் - காணொளி
வயநாடு துயரம்: இறுதிச் சடங்குக்கு கூட பணமின்றித் தவிக்கும் உறவுகள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

வயநாடு நிலச்சரிவில் பேரழிவைச் சந்தித்துள்ள கிராமங்களில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சில கிராமங்களில் சடலங்களைப் புதைக்கக் கூட இடமில்லை. அந்தச் சடலங்களுக்கு மேப்பாடி கிராமத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மயானங்களில் இறுதிச்சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சில தன்னார்வ குழுக்கள் மற்றும் மத குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன.

இந்தப் பேரழிவு, பல குடும்பங்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று நிற்கின்றனர். நெருங்கிய உறவுகளை இழந்துள்ள சிலரிடம் இறுதிச்சடங்கை நடத்தக் கூட பணம் இல்லை.

மேப்பாடியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்து மயானம் உள்ளது. இங்கு ஏற்கனவே 40 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்வதற்கான செலவு மற்றும் பொருட்களை சேவா பாரதி அமைப்பு வழங்குகிறது.

மேப்பாடியில் உள்ள ஜும்மா மசூதியை ஒட்டிய மலையில் முஸ்லிம்களின் மயானம் உள்ளது. இங்கு ஏற்கனவே 40 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இங்கு கொண்டு வரப்படும் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மேப்பாடி ஜும்மா மஸ்ஜித் கமிட்டியினர் தெரிவித்தனர். அங்கு போதிய இடவசதி இல்லாததால், சுற்றுவட்டார மசூதிகளின் மயானங்களில் அடக்கம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

பல உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளன. அந்த உடல்களின் இறுதிச் சடங்குகளை அரசே நடத்தும். வயநாடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மயானங்களில் இறுதிச் சடங்குகளைச் செய்யும் பொறுப்பு கேரள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு: பல்லா சதீஷ், பிபிசி தெலுங்கு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)