காணொளி: காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் அறிவித்த திட்டத்தில் என்ன உள்ளது?
காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹமாஸுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஸா போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் அறிவித்திருக்கும் இந்த 20 அம்ச திட்டத்தில் என்ன உள்ளது? உலக நாடுகள் இதை எப்படி பார்க்கின்றன?
டிரம்ப் பேசியது என்ன?
திங்கட்கிழமை வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார். அதன்பிறகு இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது காஸாவுக்கான புதிய அமைதி திட்டத்தை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், இதனை "அமைதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்" என்றார்.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்தத் திட்டத்திற்கு, ஹமாஸ் உடன்படவில்லை என்றால், 'ஹமாஸின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர' நெதன்யாகுவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்று அவர் கூறினார்.
நெதன்யாகு என்ன பேசினார்?
இந்த அமைதி திட்டத்தை வரவேற்ற இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, இதனை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது இதற்கு எதிராக செயல்பட்டாலோ காஸா மீண்டும் இஸ்ரேலுக்கு ஆபத்தாக இல்லாமல் இருப்பதை இஸ்ரேல் உறுதி செய்யும் எனக் கூறினார்.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை தொடர்புகொண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் கத்தாரைச் சேர்ந்தவர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் நெதன்யாகு கூறினார்.
காஸா அமைதி திட்டத்தில் என்ன உள்ளது?
டிரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தில் என்ன உள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, காஸா பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத அமைதியான மண்டலமாக மாற்றப்படும். நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்ட காஸா மக்களின் நலனுக்காக காஸா மீண்டும் மேம்படுத்தப்படும். இந்த முன்மொழிவுக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் போர் உடனடியாக முடிவுக்கு வரும். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக, இஸ்ரேல் படைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறைக்குள் பின்வாங்கும். ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக நம்பப்படும் சுமார் 24 பேரின் உடல்களையும் 72 மணி நேரத்தில் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள நூற்றுக்கணக்கான பாலத்தீனர்களை விடுவிக்க வேண்டும்.
ஆயுதங்களை ஒப்படைத்து, அமைதியை ஏற்றுக்கொள்ளும் ஹமாஸ் குழுவினருக்கு மன்னிப்பு வழங்கப்படும். காஸாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு, பாதுகாப்பாக வெளியேற வழிவகை செய்யப்படும்.
காஸாவில் ஹமாஸ் ஆட்சியில் தொடரக் கூடாதென இதில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் சார்பற்ற பாலத்தீனக் குழு தற்காலிகமாக காஸாவில் ஆட்சி நடத்தும். Board of Peace என்ற சர்வதேச இடைக்கால அமைப்பு இதனைக் கண்காணிக்கும். இதன் தலைவராக டிரம்ப் இருப்பார் என்கிறது டிரம்பின் 20 அம்ச காஸா அமைதித் திட்டம்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையை நிர்வகிக்கும் பாலத்தீன அதிகார சபை, அமெரிக்க அதிபரின் முயற்சிகளை "நேர்மையானது மற்றும் உறுதியானது" என்று கூறியுள்ளது.
ஹமாஸ் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
உலக தலைவர்கள் கூறியது என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா, கத்தார், எகிப்து, ஜோர்டான், துருக்கி, இந்தோனீஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த திட்டம் தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் டிரம்பின் "தலைமைத்துவத்தையும், காஸா போரை முடிவுக்கு கொண்டு வர அவர் எடுத்துள்ள உண்மையான முயற்சிகளையும்" வரவேற்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த திட்டத்துக்கு "இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் நேர்மறையான பதில் எனக்கு உற்சாகம் அளிக்கிறது" என்று கூறிய ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (Antonio Costa) "அனைத்து தரப்பினரும் இந்த தருணத்தைப் பயன்படுத்தி அமைதிக்கு உண்மையான ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்" என்றார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இந்த திட்டத்தை வரவேற்று, "இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யவும், அதை நடைமுறைப்படுத்தவும் அமெரிக்க நிர்வாகத்துடன் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்வதாக" தெரிவித்தார்.
"ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, ஆயுதங்களை கைவிட்டு, மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, இந்த துயரத்திற்கு முடிவு கொண்டு வர வேண்டும்" என்றும் கூறினார் அவர்.
"போரை முடிவுக்கு கொண்டு வரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பங்களிக்க பிரான்ஸ் தயாராக உள்ளது" என்று இமானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்ட அறிக்கையில், இந்தத் திட்டம் "ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



