பாகிஸ்தானில் சீனா உதவியுடன் மிகப்பெரிய விமான நிலையம் - இந்தியாவிற்கு புதிய சவால் உருவாகுமா?
பாகிஸ்தானின் குவாதர் (Gwadar) துறைமுகம் வியூக ரீதியாக இந்தியாவுக்கு சவாலாக இருந்து வரும் நிலையில், தற்போது குவாதரில் சீனா நிதியுதவியுடன் ஒரு சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த விமான நிலையத்தால் இந்தியாவிற்கு புதிய சவால்கள் ஏற்படுமா? பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் கட்டப்பட்ட இந்தப் புதிய சர்வதேச விமான நிலையம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
கடந்த 20ஆம் தேதி, பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான PIA-ன் விமானம் நியூ குவாதர் சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பாகிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, பரப்பளவு அடிப்படையில் இது பாகிஸ்தானின் மிகப்பெரிய விமான நிலையமாகும். ஆண்டுதோறும் 4,00,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட குவாதர் விமான நிலையத் திட்டம், பாகிஸ்தான் அரசால் 2009-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் இதன் கட்டுமானம் 2019ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது.
ஒப்புதல் அளிக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பின் இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் முன்பு எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் அமையவில்லை. இந்தச் சூழலில் ஒரு சிறிய நகரத்தில் கட்டப்பட்ட இவ்வளவு பெரிய விமான நிலையத்தை யார் பயன்படுத்துவார்கள் என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். சீன பொறியாளர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களால் விமான நிலையப் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விமான நிலையத்தின் சிறப்பு என்ன?
பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் குவாஜா முகமது ஆசிஃப்,(Khawaja Muhammad Asif) புதிய விமான நிலையத்தின் ஓய்வறையைத் திறந்து வைக்க வந்தார். இது இந்தப் பகுதியில் மூலதன முதலீட்டை அதிகரிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று குவாஜா ஆசிஃப் கூறினார். குவாதர் விமான நிலையக் கட்டுமானத்தை சீனா - பாகிஸ்தான் ஒத்துழைப்பின் முக்கிய சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விமான நிலைய கட்டுமானத்தில் சீனாவுக்கு பெரும் பங்கும் ஓமனுக்கு சிறிய பங்கும் உள்ளது. இந்த விமான நிலையம் சுமார் 4,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு முன்பே புதிய குவாதர் விமான நிலையம் திட்டமிடலில் இருந்தது. அதில் ஏற்பட்ட தாமதத்தால், அதன் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக, மத்திய மேம்பாட்டு பணிக்குழு தோராயமாக $96 மில்லியன் செலவில் கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் தற்போதைய திட்டம் தோராயமாக 240 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக, குவாதரில் இந்த விமான நிலைய திறப்பு விழாவும் தடைபட்டது. முன்னதாக இந்த நிகழ்வு ஆகஸ்ட் 14, 2024 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜூலை 28 அன்று பலூச் ஏக்தா சமிதி (Baloch Ekta Samiti) குவாதரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஆகஸ்ட் 25 அன்று, பலுசிஸ்தானில் 13 இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன, இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலும் அடங்கும். இதற்கு பிரிவினைவாத பலூச் அமைப்பான பி.எல்.ஏ பொறுப்பேற்றது. மோசமான அமைதி சூழல் காரணமாக, அக்டோபரில், சீனப் பிரதமர் லீ ஜியாங் இஸ்லாமாபாத்தில் இருந்து குவாதர் விமான நிலையத்தை திறந்து வைத்தார். அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனவரி 10 ஆம் தேதி விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் மஸ்கட்டிற்குப் புறப்படும் என்று கூறப்பட்டது. எனினும், முதல் பயணிகள் விமானம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதிதான் மஸ்கட்டுக்கு புறப்பட்டு சென்றது.
சரி, இந்த விமான நிலையத்தை யார் பயன்படுத்துவார்கள்?
பலுசிஸ்தானின் வடக்குப் பகுதிகளுக்கு எளிதான மற்றும் திறன்வாய்ந்த அணுகலை வழங்க குவாதரில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையத்தைக் கட்டுவது அவசியமாக இருக்கும் என்பது பாகிஸ்தானின் திட்டக் குழுவின் கூற்றாகும். குவாதர் விமான நிலையத்தை செயல்படுத்தும் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இது தொடர்பாக தேசியக் கட்சியின் செனட்டர் ஜான் பலிடி (Jan Buledii) கூறுகையில், தற்போது குவாதர் மாவட்டத்தில் நான்கு விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஓட்மாரா, ஜிவ்னி மற்றும் பஸ்னி ஆகிய மூன்று விமான நிலையங்கள் செயல்படவில்லை. இதேபோல, பலுசிஸ்தானின் பஞ்ச்கோர், துர்பத் கஸ்தார் மற்றும் தால்பந்தேன் ஆகிய இடங்களில் உள்ள பிற விமான நிலையங்களும் செயல்படும் நிலையில் இல்லை. இந்த விமான நிலையம் வியூக ரீதியான நோக்கங்களுக்காக சீனாவுடன் பயன்படுத்தப்பட்டால், அது வேறு விதமாக இருக்கக்கூடும். தற்போதைய சூழலில் இதற்கு எந்த சிறப்புப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



