சளி, இருமலை சிக்கன் சூப், டார்க் சாக்லேட் குணமாக்குமா? நம்பிக்கைகளும் உண்மையும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிளாரி ஸ்பிரெட்பரி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இது பருவமழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கும்.
மொத்தமாக கிருமிகளை தடுப்பது சாத்தியமில்லாதது, ஆனால் சிலவற்றை உண்பது மற்றும் அருந்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிரான சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியுமா?
உடல்நலமுடன் வாழ அடிப்படை விஷயங்களுக்கு திரும்புதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் என, மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் கூறுகிறார். "புகைப்பழக்கம் மற்றும் அதிகமாக மது அருந்துவதையும் தவிர்ப்பது, மன அழுத்தத்தை தவிர்ப்பது, போதுமான தூக்கம் ஆகியவை முக்கியம்."
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான வழி இல்லை என எச்சரிக்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் நியான்னன் லேம்பெர்ட். இவர், 'லர்ன் ஹௌ டூ ஈட் வெல் ஃபார் ஹெல்த் அன்ட் ஹாப்பினஸ்' எனும் புத்தகத்தை எழுதியவர். "நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான உணவுமுறை என்ற ஒன்று இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு சமநிலையான நோயெதிர்ப்பு அமைப்பு வேண்டும், அதற்கு சரிவிகித உணவுமுறை தேவை என்பதுதான் முக்கியம்."
சாதாரணமாக ஏற்படும் சளியை தடுப்பதற்கோ அல்லது குணப்படுத்துவதற்கோ எந்தவொரு பொருளும் இல்லை, ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுவது இதில் உதவலாம்.
தவறான கற்பிதங்கள்
உடல்நிலை சரியில்லாதபோது, நமக்கு கூறப்பட்ட ஏதாவது கற்பிதங்களை முயற்சி செய்வோம். ஆனால், இந்த நம்பிக்கைகளில் ஏதேனும் உண்மை உள்ளதா?
உணவு உட்கொள்வது குறித்த கருத்து
"சளி இருக்கும்போது உணவு உண்பது, உடலை சூடாக்க உதவும் என்றும் உடல் ஏற்கெனவே சூடாக இருக்கும்போது உணவை தவிர்த்தால், குளிர்ச்சியாகும் எனவும் பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது," என்கிறார் லேம்பெர்ட்.
"உண்மை என்னவெனில் உங்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்படும்போது நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஆற்றல் தேவை, அது தன் வேலையை செய்ய சத்துகள் தேவை. அதனால், உண்பதும் போதுமான அளவு நீர்ச்சத்துகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் முக்கியம். எனவே, காய்ச்சல், சளி என இரண்டுக்கும் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்."
"உங்களுக்கு பசி இல்லையென்றாலும், என்ன உடல்நல பிரச்னை ஏற்படுகிறதோ அதை எதிர்த்துப் போராட ஆற்றல் தேவை. வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சாப்பிட வேண்டியதில்லை, ஆனால் உடல் சரியாக இயங்குவதற்கு உதவும் ஊட்டச்சத்தான உணவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே, உடல்நிலை சரியில்லையென்றால், பலவிதமான, வண்ணமயமான, சரிவிகித உணவுகளை உட்கொள்ளுங்கள்."
பூண்டு சளியை விரட்டுமா?
"பூண்டில் அல்லின் (alliin) எனப்படும் கலவை உள்ளது, இதில் பூஞ்சைக்கு எதிரான குணங்கள் உண்டு," என்கிறார், உணவியல் நிபுணர் கிளேர் தோர்ன்டன்-வுட். "பூண்டை வெட்டும்போதோ அல்லது நசுக்கும்போதோ அல்லிலின் அல்லிசினாக 10 நிமிடங்களில் மாறிவிடுகிறது. எனினும், பூண்டை சூடாக்கும்போது அல்லிசின் அழிந்துவிடுகிறது, எனவே பூண்டை அப்படியே உண்பதும் அல்லது சமையலில் கடைசியாக சேர்க்கும்போதும் சிறப்பானது."
பூண்டு சாப்பிடுவது சளி நீடிக்கும் கால அளவை குறைப்பதாக சில ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கும் அவர், (போதுமான ஆதாரம் இல்லையென்றாலும்) பூண்டு சாப்பிடுவது நல்லது என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
உருளைக்கிழங்கை உங்கள் காலுறையின் கீழ் வைப்பது பயனளிக்குமா?
கேட்பதற்கு அபத்தமானதாக இருக்கும், ஆனால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து அடிக்கடி பேசப்படுகிறது. அதாவது, உறங்கச் செல்வதற்கு முன்பாக, உங்கள் காலுறையின் அடியில் (சாக்ஸ்) உருளைக்கிழங்கு துண்டுகளை வைக்க வேண்டும். ஒரே இரவில் வைரஸில் உள்ள நச்சுக்களை உருளைக்கிழங்கு எடுத்துவிடும், அதன்பின், உருளைக்கிழங்கு சாம்பல் நிறமாக மாறிவிடும் என நம்பப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து நிபுணர்கள் நம்பிக்கை அடையவில்லை. "நச்சுகளை நீக்குவதற்கோ அல்லது உடல்நலப் பிரச்னைகளை வேகமாக குணப்படுத்துவதற்கோ உருளைக்கிழங்கு சிறப்பாக உதவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. அப்படி செய்வது ஆபத்தானது இல்லை என்றாலும், அது எவ்வித பலனையும் அளிக்காது என்பதால் இந்த முறையை நிபுணர்கள் பரிந்துரைப்பதில்லை." என்கிறார் லேம்பெர்ட்.
கிளேர் தோர்ன்டன்-வுட் கூறுகையில், "இதனை உறுதிப்படுத்த எவ்வித ஆதாரமும் இல்லை. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆற்றல் மற்றும் பல சத்துகள் இருப்பதால் அதை உண்பது சிறந்தது."
சிக்கன் சூப் குடிக்கலாமா?
"சிக்கன் சூப் அருந்துவது ஒருவித புத்துணர்வை அளிக்கும் என்பதாலும், உடலை சூடாக்கும் என்பதாலும் அறிகுறிகளில் இருந்து தற்காலிகமாக அது விடுவிக்கும்," என்கிறார் பொதுநல மருத்துவர் கரேத் பேட்டர்சன் எனும் தெல்ரிஷ் ஜிபி.
"சளி எவ்வளவு காலம் நீடிக்கும், அது எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதில் அது எவ்வித வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், வீட்டிலேயே காய்கறிகள் கொண்டு சூப் தயாரிக்கப்பட்டிருந்தால், அதனால் ஊட்டச்சத்து கிடைக்கும்."
சிக்கன் சூப் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய சௌகரியமான உணவு என்கிறார் லேம்பெர்ட். "சிக்கன் சூப் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு."

பட மூலாதாரம், Getty Images
"ஊட்டச்சத்தின்படி பார்த்தால் சிக்கன் சூப்பில் புரதம் இருக்கிறது, அதனால் நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, திசுக்களை ஒழுங்குபடுத்தும். அதிலுள்ள காய்கறிகள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்ட்டிஆக்ஸிடென்டுகள் ஆகியவை நோயை எதிர்த்துப் போராடும் அமைப்புகளுக்கு முக்கியமானவை. மேலும், அதன் சாறு, நீர்ச்சத்துக்கு உதவுகிறது, இது நோயை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியம்."
வைட்டமின் சி சளியை தடுக்குமா?
"வைட்டமின் சி சளியை தடுக்கும் என்பது தவறானது, ஆனால் அதன் தீவிரத்தை குறைக்கலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ராப் ஹாப்சன், இவர் 'அன்பிராசஸ் யுவர் ஃபேமிலி லைஃப்' எனும் புத்தகத்தின் ஆசிரியர்.
"சளி ஏற்படுவதிலிருந்து வைட்டமின் சி உங்களை தடுக்காது, ஆனால், தினசரி அத்தகைய உணவுகளை எடுக்கும்போது, எவ்வளவு காலம் சளி நீடிக்கும் என்பது சிறிது குறைகிறது."

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் பேட்டர்சன் இதை ஒப்புக்கொள்கிறார்: " வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துவதற்கு உதவும் என்பதற்கு சிறிது ஆதாரம் உள்ளது. இதற்கான ஆராய்ச்சிகள் குறைவாக இருந்தாலும், என்னிடம் வரும் நோயாளிகளிடம், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உணவில் தினமும் இரண்டு பங்கு சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகிறேன்."
வைட்டமின் சி-யை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் அதை அதிகப்படுத்தக் கூடாது.
சளி அல்லது இருமல் இருக்கும்போது பால் பொருட்களை தவிர்க்க வேண்டுமா?
"பால் பொருட்களால் அலர்ஜி உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்," என்கிறார் மருத்துவர் பேட்டர்சன்.
"உடல்நிலை சரியில்லாத போது பால் பொருட்களை உண்ணும்போது மூச்சுக்குழாய் பாதையில் சளி சுரக்கும் என நீண்ட காலமாக நம்பப்படுகிறது, ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பால் பொருட்களுக்கு அலர்ஜி உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்."

பட மூலாதாரம், Getty Images
வறண்ட தொண்டையை தேன் சரிசெய்யுமா?
உடல்நிலை சரியில்லாதபோது அதன் அறிகுறிகளை சரிப்படுத்துவதிலும் தேன் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் உள்ளன என்கிறார் மருத்துவர் பேட்டர்சன்.
"இயற்கையான, சிறப்பான தேனில் அழற்சிக்கு எதிரான, பூஞ்சை தொற்றுக்கு எதிரான குணங்கள் உள்ளன, அது இருமல் மற்றும் சளிக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்."
டார்க் சாக்லேட் இருமலுக்கு நல்லதா?
"இருமலின் தீவிரத்தைக் குறைக்க டார்க் சாக்லேட் உதவலாம்," எனக்கூறும் லேம்பெர்ட், அதற்கு இரண்டு காரணங்களையும் குறிப்பிடுகிறார்.
"தேனை போன்று, சாக்லேட் தொண்டையில் ஓர் ஒட்டும் தன்மையுள்ள அடுக்கை உருவாக்குகிறது, இது எரிச்சல் தன்மையுடன் இருக்கும் நரம்பு முனைகளை காக்கிறது, இதனால் இரும வேண்டும் என்ற உந்துதலை குறைக்கிறது. இரண்டாவதாக, கோகோவாவில் (cocoa) தியோப்ராமைன் எனும் ஆல்கலாய்டு பொருள் உள்ளது, இது இருமலை அடக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. தியோப்ராமைன் என்பது கோடெய்னை (codeine) ஒத்த விளைவுகளை கொண்டுள்ளது, இது இருமல் தொடர்பான மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது" என்று தோர்ன்டன்-வுட் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
காரமான உணவுகள் மூலம் சளியை சரிசெய்ய முடியுமா?
"மிளகாயில் கேப்சாய்சின் (capsaicin) எனும் பொருள் உள்ளது, அதுதான் 'சூடாக்கும்' அல்லது எரியும் உணர்வை கொண்டிருக்கிறது," என்கிறார் தோர்ன்டன்-வுட். "அதை சாப்பிடும்போது, நாக்கில் ஏற்படும் (சூடான) வலி உணர்வு, தொண்டை வறட்சி போன்ற மற்றொரு வலியை தற்காலிகமாக தடுக்கிறது.
"கேப்சாய்சின் சளியை (mucus) உடைத்து, அதன் ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதனால், மூக்கடைப்பை சரிசெய்து, சளி எளிதில் வெளியேற முடியும்."

பட மூலாதாரம், Getty Images
சளியை சரிசெய்ய என்ன உணவுகள் உட்கொள்ளலாம்?
சரிவிகித உணவுடன் சில உணவுகளை சேர்ப்பது உடல்நலம் சரியாக உதவலாம்.
"ப்ரோத் (சூப் போன்றது) நல்ல உணர்வை ஏற்படுத்தும்," என்கிறார் ஹாப்சன். "அதன்மூலம் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிறது, சளி இருக்கும்போது அதை அருந்துவது முக்கியம், மேலும் அதில் சிஸ்டைன் (cysteine) உள்ளது, இந்த அமினோ அமிலம் சளியை இலகுவாக்கி, எளிதில் வெளியேற உதவுகிறது.
அனைத்துவித திரவ உணவுகளும் நீர்ச்சத்தை அளிக்கும் என்கிறார் அவர். "சூடான நீரில் தேன் கலந்து அருந்துவதும் நல்லது, அதனால் உங்களுக்கு வைட்டமின் சியும் தேன் மூலம் சளியிலிருந்து விடுபட்ட உணர்வும் கிடைக்கும். இஞ்சி அழற்சிக்கு எதிரானது, அதை தேநீர் வடிவில் அருந்துவது குமட்டல் அல்லது அசௌகரியத்திற்கு எதிராக செயல்பட உதவும்."

நீங்கள் உறங்குவதற்கு சிரமப்படுகிறீர்கள் என்றால், சாமோமைல் (chamomile) அல்லது வேலரியன் (valerian) கலந்த தேநீரை அருந்தும்போது அமைதியான உணர்வு ஏற்படும். வைட்டமின் சி அடங்கிய மிளகு, தக்காளி மற்றும் பெர்ரி முதல் துத்தநாகம் அடங்கிய உணவுகளை அதிகப்படுத்துவது வரை பலவற்றை பரிந்துரைக்கிறார் லேம்பெர்ட்.
"துத்தநாகம் இதில் முக்கிய பங்கை வகிக்கிறது, நோயெதிர்ப்பு செல்கள் தொற்றுக்கு எதிராக போராடும் தங்கள் பணியை செய்ய உதவுகிறது, மேலும், சளியை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றை எதிர்க்கவும் செல்களுக்கு உதவுகிறது."
அதாவது, துத்தநாகம் நிறைந்த உணவுகளை அதிகரிப்பதன் மூலம் பலன்கள் இருக்கலாம், அதற்காக அறிகுறிகள் ஆரம்பமாகும்போது கடல் உணவுகள், நட்ஸ், முழு தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































