தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்து வந்த பாதை

காணொளிக் குறிப்பு, நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்து வந்த பாதை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரன் தற்போது அந்த கட்சியின் மாநில தலைவராகியுள்ளார். அவர் கடந்து வந்த பாதை என்ன?

உள்ளூர் மக்களால் "பண்ணையார்" என அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் செல்வந்தரான குடும்பத்தைச் சேர்ந்தவர். நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், அரசியலுக்கு வரும் முன்னரே நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக குடியேறிவிட்டார்.

நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

பின்நாட்களில் கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு திமுகவுக்கு செல்ல, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் பெயர் சொல்லும் தலைவராக வளர்ந்திருந்தார். அப்போதும் கருப்பசாமி பாண்டியனுடன் பரஸ்பரம் நட்பு பாராட்டியதாகக் கூறுகின்றனர் நெல்லை மாவட்ட அதிமுகவினர்.

2001-ம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு கட்சி மாறியது , இவருக்கு சாதகமாக திரும்பியது. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது.

அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் ஜெயலலிதா நிர்வாகத்திலும், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்தார் நயினார் நாகேந்திரன். பலமுறை துறைகள் மாற்றப்பட்டப் போதும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை.

2006-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கொண்டார்.

"ஜெயலலிதாவின் தலைமையிலிருந்தது போல அதிமுக இப்போது இல்லை" என்று காரணம் கூறி 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்த நயினார், இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவினரையும், அதிமுகவினர் அண்ணாமலையையும் பொதுத்தளத்தில் விமர்சித்ததையும் காண முடிந்தது.

இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவரான நயினார் நாகேந்திரன் இந்த பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, இரு கட்சிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

பாஜகவிற்கு கட்சி மாறிய பின்னர் மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் போட்டியிட, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன்.

சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் வந்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றார் நயினார்.

இதன் பின்னர் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நயினார் நாகேந்திரன்.

கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளில் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமான உறவு பாராட்டக்கூடியவராக நயினார் நாகேந்திரன் அறியப்படுகிறார். சட்டமன்றத்தில் சொந்த மாவட்டக்காரரான அப்பாவு சபாநாயகராக இருக்கும் சூழலில் பல சுவையான விவாதங்களிலும் நயினார் நாகேந்திரனின் பெயர் இடம்பெறத் தவறுவதில்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைக்க, இதனை அன்போடு பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதே போன்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்ட போதே கடந்த பிப்ரவரி மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மத்திய அரசை விமர்சித்த முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொண்டதும் நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு