பட்ஜெட் 2023: நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நல்ல செய்தியும் 5 சவால்களும்

பிரசுரிக்கப்பட்டது

உலகம் முழுவதும் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் செல்லப் போகிறது என்று கருதப்படும் நிலையில் இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

அடிப்படையில் நரேந்திர மோதி அரசின் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட்டாக இது. கடுமையான பட்ஜெட்டாக இது இருந்தால் மக்கள் ஆதரவு குறையும். மீண்டு வரும் பொருளாதார நிலையில் தாராளமான பட்ஜெட்டையும் வழங்க முடியாது என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

அதே நேரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சாதகமான நிலைமையும் இந்தியாவில் இருக்கின்றன. என்ன சாதகம், என்ன கவலை என்பது குறித்துப் காணொளியில் பார்க்கலாம்.

முதலில் நல்ல செய்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாண்டு பெருந்தொற்றுக்குப் பிறகு உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் மந்தநிலை விளிம்பில் உள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டு ஒப்பீட்டளவில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது.

ஜிடிபி இலக்கில் சற்று குறைவு ஏற்பட்டிருந்தாலும், உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 6 முதல் 6.5 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பணவீக்கம் குறைகிறது. எரிசக்தி விலைகள் குறைகின்றன. நாட்டில் தொடர்ந்து வலுவான முதலீடுகள் கிடைப்பதோடு, நுகர்வோர் பணப்புழக்கமும் அதிகரித்து வருகிறது.

சரி அடுத்ததாக சவால்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சவால் 1 - வேலைவாய்ப்பின்மை

ஒருபுறம் ஏழைகளின் சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் வளர்ச்சிக்கு ஆதரவான செலவினங்களை அதிகரிப்பதற்கும் மறுபுறம் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் இடையே செய்ய வேண்டிய கடினமான சமநிலைப்படுத்தும் பணி நிதியமைச்சருக்கு உள்ளது.

ஜிடிபி வளர்ச்சி குறித்த கணிப்பு சிறப்பாக இருந்தாலும் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இது நிதியமைச்சர் முன்னிற்கும் முக்கியமான சவால்.

சவால் 2 - பொருளாதார ஏற்றத்தாழ்வு

இரண்டாவதாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பதாகவே கணிக்கப்படுகிறது.

இந்தியாவின் 40 சதவிகித சொத்துகள் 1 சதவிகிதம் பேருக்குச் சொந்தமானது என்பது பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாமின் சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்தது. இந்தக் கணக்கீட்டு முறைகளில் குறைபாடுகள் இருப்பதாகப் பலர் சுட்டிக் காட்டினர்.

ஆனால் மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைந்து வருவது, இரு சக்கர வாகனங்களைவிட சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்திருப்பது போன்ற பிற தரவுகள், பெருந்தொற்றுக்குப் பிந்தைய கே-வடிவ பொருளாதார மீட்சியைக் காட்டுகின்றன.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆவர். ஏழைகள் மேலும் ஏழையாவர். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் இதன் அறிகுறிகளைத் தெளிவாகக் காண முடிகிறது.

சவால் 3: ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தாமதமாக ஊதியம் வழங்கப்படுவதை பல இடங்களில் காண முடிகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அரசியல் மோதலில் சிக்கித் தவிக்கும் மாநிலமான மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குப் பிபிசி பயணம் செய்தது.

அரசின் கிராமப்புற வேலைகள் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி அளவிலான ஊதியம், ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தாமதம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

சவால் 4: நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு

நான்காவதாக இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது.

அரசாங்கத்தின் மொத்தக் கடன் இரண்டு மடங்காகி இருக்கிறது. இதைச் சமாளிப்பதற்கு உணவு மற்றும் உரங்கள் மீதான மானியங்கள் நான்கில் ஒரு பங்காக குறைக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸின் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது.

சவால் 5: ஏற்றுமதிக்கு ஆபத்து

உலகின் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள உள்ளதால் இந்தியப் பொருள்களின் ஏற்றுமதிக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது. இது உள்நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். இதைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியதும் நிதியமைச்சரின் முன் நிற்கும் சவால்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: