You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹவாலா பணமா? கோவை கார் கொள்ளை முயற்சி வழக்கில் அதிர்ச்சித் தகவல்
கோவையில் காரை மடக்கி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் (Dashcam Footage) வெளியாகி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மதுக்கரை அருகே கேரளா புறவழிச்சாலையில் முகமூடி அணிந்து காரில் வந்த நபரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். இரண்டு பேரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.காவல்துறை கூற்றுப்படி, கேரளாவைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர் கொச்சினில் விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். ஜுன் 13ஆம் தேதி தனது நண்பர்களுடன் பெங்களூருவுக்கு சென்று கணினி சாதனங்களை வாங்கிய அவர் காரில் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். ஜுன் 14ஆம் தேதி அதிகாலை கோவை மதுக்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது சித்திக்கின் காரை 3 கார்களில் வந்த நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஒரு காரில் இருந்த நபர்கள் அவரது காரை இடைமறித்து தாக்க தொடங்கியுள்ளனர்.
ஓட்டுநர் சுதாரித்து காரை பின் நகர்த்தி பின்னர் வேகமாக பின்னோக்கி சென்று தப்பினார். அருகிலிருந்த சுங்கச்சாவடிக்கு சென்று அங்கிருந்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். சித்திக்கிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட மதுக்கரை போலீசார், காரின் பதிவெண்ணை வைத்து சிவதாஸ், ரமேஷ்பாபு, விஷ்ணு மற்றும் அஜய்குமார் ஆகிய நான்கு பேரை பாலக்காடு அருகே வைத்து கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு அவர்கள் பயன்படுத்திய இரண்டு இன்னோவா கார்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அஸ்லாம் சித்திக் வேறொருவரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்துச் சென்றதால், வழக்கமாக இது போன்ற நபர்களிடம் ஹவாலா பணம் இருக்கலாம் என்பதால் சித்திக் சென்ற அந்த குழு காரை குறி வைத்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும் விரிவான விசாரணைக்கு பிறகே முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)