2வது டெஸ்ட்: சாதனை வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிய இங்கிலாந்தை இந்தியா தடுத்து நிறுத்தியது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஐந்து தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தி அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
2வது டெஸ்ட்: சாதனை வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறிய இங்கிலாந்தை இந்தியா தடுத்து நிறுத்தியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை நோக்கி பயணம் செய்த இங்கிலாந்தை இந்திய அணி தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களை அடிப்பதே பெரும்பாடு தான். அதுவும் நான்காவது, ஐந்தாவது நாட்களில் பேட்டிங் விளையாடுவது மிகவும் சிரமமான காரியம். இது அயல்நாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூட பொருந்தும்.

இப்படியொரு சூழலில், இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி.

இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை குவித்து வெற்றிகரமாக சேசிங் செய்தது இந்திய அணி தான். இது 2008-ல் சென்னையில் நடந்தது. அப்போது இங்கிலாந்து நிர்ணயித்த 387 ரன்களை இந்தியா வெற்றிகரமாக சேசிங் செய்தது. சச்சின் டெண்டுல்கரின் அபார சதத்தாலும், யுவராஜ் சிங்கின் பொறுப்பான இன்னிங்சாலும் அப்போது இதைச் சாதித்தது இந்திய அணி.

அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், 37 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் 275 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ததே, இந்திய மண்ணில் சாதனையாக இருந்தது.

ஒரு அயல்நாட்டு அணி, இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச இலக்கு இதுதான்.

வரலாறு இப்படி இருக்க, 399 ரன்களை அதிரடியாக சேசிங் செய்ய முடிவெடுத்திருந்தது இங்கிலாந்து அணி.

மூன்றாவது நாளின் இறுதி செஷனில் இங்கிலாந்து அணி 14 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. இது போன்ற சூழலில் எந்தவொரு அணியும் விக்கெட் இழக்காமல் அந்த நாளை கடப்பதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள். ஏனெனில் இரு நாட்கள் மீதமிருப்பதால், கிட்டத்தட்ட 190 ஓவர்களுக்கும் அதிகமாக கைவசம் இருப்பதால் வெற்றிக்கு மெல்ல மெல்ல முயற்சிக்க விரும்புவர்.

ஆனால், இங்கிலாந்து அணி அந்த இறுதி செஷனையே அதிரடியாக ஆடியது. 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவித்தது.

மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தவுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்படிச் சொன்னார். 600 ரன்கள் இலக்கு என்றாலும் நாம் முயற்சி செய்து வெற்றிகரமாக சேஸிங் செய்ய வேண்டும் என எங்களது பயிற்சியாளர் ஏற்கனவே சொல்லிவிட்டார். இந்த டெஸ்ட் போட்டியை எந்தவொரு சூழலிலும் டிரா நோக்கி நகர்த்த முயற்சிக்க மாட்டோம். களத்தில் கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடுவோம். இந்த இலக்கை 60 - 70 ஓவர்களிலேயே சேசிங் செய்ய முயல்வோம். அதுதான் எங்களது தற்போதைய இயல்பான ஆட்டம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்படிச் சொன்ன பிறகு சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பலத்த விவாதங்கள் எழுந்தன. இங்கிலாந்து அணி பிரண்டன் மெக்குல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அதிரடி ஆட்டத்தால் எதிரணியை நிலை குலையச் செய்து வருவது வரலாறு. இதனால் ஒருவேளை இங்கிலாந்து இந்த இலக்கைச் சேசிங் செய்துவிட்டால், இந்திய மண்ணில் சரித்திர சாதனையை படைத்துவிடும் நிலை இருந்தது.

நான்காவது நாள் ஆட்டம்

பும்ரா

பட மூலாதாரம், Getty Images

நான்காவது நாளில் தொடக்கம் முதலே இங்கிலாந்து விறுவிறுவென ரன்களை குவிக்க துவங்கியது. ஆட்டத்தின் 22வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இரண்டாவது பந்தில் ரெஹான் கொடுத்த கேட்சை இந்திய அணி தவறவிட்டது.

ஆனால் ஐந்தாவது பந்திலேயே அக்சர் பந்தில் ரெஹான் எல்.பி முறையில் அவுட் ஆனார். அதற்கடுத்து வந்த ஓலி போப் முதல் பந்தையே பௌண்டரிக்கு விளாசினார். இங்கிலாந்து கொடுத்த ஸ்டேட்மன்ட் அது.

டெஸ்ட் போட்டியை டி20 போல ஆடிய போப், அக்சர் படேல் பந்துகளை குறிவைத்து பௌண்டரிகளாக விளாசினார். அவரை 29 ஓவரின் இரண்டாவது பந்தில் வீழ்த்தினார் அஷ்வின்.

அப்போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் நான்காவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார். ஓவரின் மூன்றாவது பந்தை அஷ்வின் வீசினார். ஜோ ரூட் தான் சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து கணக்கை துவங்கினார். அஷ்வினின் அதே ஓவரில் இன்னொரு பௌண்டரியையும் ரிவர்ஸ் ஸ்வீப் மூலமாகவே விளாசினார் ரூட்.

ஆனால் ஒரு ஓவர் இடைவெளியில் மீண்டும் பந்து வீச வந்த அஷ்வின், ரூட்டை குறிவைத்து தூக்கினார். 10 பந்துகளில் 2 பௌண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரூட்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், இங்கிலாந்து அணி ரன் ரேட்டை குறையவே விடவில்லை. சீரான இடைவெளிகளில் பௌண்டரிகளை விளாசிக் கொண்டிருந்தது. உணவு இடைவேளைக்கு இரண்டு ஓவர்களே மீதமிருந்த நிலையில் 200 ரன்களை நெருங்கியது.

அப்போதுதான் முக்கியமான திருப்புமுனை நடந்தது. குல்தீப் யாதவ் பந்தில் ஜாக் கிராலி எல்.பி ஆனார். அடுத்த ஓவரிலேயே பேர்ஸ்டோ, பும்ரா பந்தில் எல்.பி ஆனார்.

நான்கு விக்கெட் இருந்த போது இங்கிலாந்து என்ன செய்தது?

இந்தியா - இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

அப்போதுதான் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் இன்னும் நான்கு விக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து நம்பிக்கையுடன் நுழைந்தது. அதற்கு காரணம் அப்போது தான் களத்தில் அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் ஜோடி உணவு இடைவேளைக்கு பிறகு சற்று நிதானமாகவே விளையாடியது. ரன்கள் மெல்லமெல்ல ஏறின. ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 500வது விக்கெட்டை எடுக்கும் முனைப்போடு தீவிரமாக பந்து வீசிக்கொண்டிருந்தார்.

ஆட்டத்தின் 53வது ஓவரை அஷ்வின் வீசினார். மூன்றாவது பந்தை ஃபோக்ஸ் எதிர்கொண்டார். ஷ்ரேயாஸ் அய்யரின் ஒரு துல்லியமான த்ரோவால் ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆனார்.

மிகப்பெரிய விக்கெட் அது. ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்து வீரர்கள் எந்தவித மாற்றமும் இன்றி, தமது திட்டப்படி அதிரடியை தொடர்ந்தனர். இங்கிலாந்து 275 ரன்களை தொட்டது.

இன்னும் 124 ரன்கள் தான் எடுக்க வேண்டும். கைவசம் மூன்று விக்கெட்டுகள் இருந்தன. இங்கிலாந்து வீரர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது நிச்சயம் இது இந்திய அணிக்கு இது சவாலான இன்னிங்சாக இருக்கப்போவதாகவே தோன்றியது. ஆனால் அப்போது பும்ரா இந்தியாவுக்கு மேட்ச் வின்னராக உருவெடுத்தார்.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போக்ஸை Caught & Bowled முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். முகேஷ் குமார் ஷோயபை வீழ்த்த, இந்திய அணிக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த டாம் ஹார்ட்லியை போலடாக்கினார் பும்ரா.

அத்தோடு இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 103 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

இந்திய மண்ணில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஒரு சாதனை வெற்றியை நோக்கி முன்னேறிய இங்கிலாந்து கடைசியில் 292 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும் இதுவும் ஒரு சாதனைதான்.

ஏனெனில் இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். அதுமட்டுமல்ல, ஒரு அயல்நாட்டு அணி இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ரன்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டது இங்கிலாந்து.

முன்னதாக 2017-ம் ஆண்டு இலங்கை 299 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான இரட்டைச் சதம், சுப்மன் கில் அதிரடி சதம் ஆகியவை இந்த போட்டியில் இந்திய அணிக்கு கைகொடுத்தாலும், பும்ராவின் அபாரமான பந்துவீச்சு இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியது. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமனில் உள்ளது. அடுத்த போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ம் தேதி துவங்குகிறது.

போட்டி முடிந்தபிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சொன்னது இதுதான்.

"நாங்கள் இந்த இலக்கை சேஸ் செய்ய முடியும் என எங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். இது போன்ற அழுத்தமான சூழலில் தான், நம்மிடம் உள்ள சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர முடியும். எங்களுக்கு யாரும் எப்படி விளையாட வேண்டும் என ஆலோசனை தர தேவையில்லை. டிரஸிங் ரூமில் உள்ள அனைவரும் சிறந்த வீரர்கள். அவர்கள் அனைவருமே களத்தில் என்ன நிலைமை என்பதை பகுப்பாய்வு செய்து, எப்படி விளையாட வேண்டும் என முடிவெடுத்திக்க தெரிந்தவர்கள்" என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)