டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் வெற்றி குறித்து தமிழக ரசிகர்கள் கூறுவது என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் வெற்றி குறித்து தமிழக ரசிகர்கள் கூறுவது என்ன? - காணொளி
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

பதினேழு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்க இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்குமான இறுதி ஆட்டத்தில், முதலில் ஆடிய இந்தியா ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து தோற்றது. இறுதிவரை யார் வெற்றி பெறுவார் என்று தெரியாத வகையில், விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருந்தது ஆட்டம்.

2007க்கு பிறகு, டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு பெருமையான தருணமாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

“ஐ பி எல்-ல் செய்யாததை, டி20 உலகக் கோப்பையில் சாதித்துள்ளார் ரோஹித் சர்மா. ரொம்ப சவாலான ஆட்டத்தை இந்தியா வென்றது, இந்திய இளம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்” என்று சிவகுமார் தெரிவித்தார்.

“கடந்த முறை உலகக் கோப்பையை வென்ற போது நான் மிகவும், சிறியவனாக இருந்தேன். 1983 க்கு பிறகு 2011 இல் அப்போதுதான் இந்தியா உலகக்கோப்பையை வெல்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது. பட்டாசு வெடித்து அனைவரும் கொண்டாடினர். இப்போது நானே அப்படி ஒரு தருணத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நேற்று இந்தியா வெற்றி பெற்றபோது நான் போட்ட கூச்சலை கேட்டு வீட்டுக்கு அருகிலிருந்தவர்கள் எல்லாம் வந்துவிட்டனர்” என்று உணர்ச்சி பொங்க பேசுகிறார் பரத்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, உலகக் கோப்பை வென்ற தருணத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது என்கிறார் பரத்.

நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவின் கேட்ச் திருப்பு முனையாக அமைந்தது என்று பலரும் பாராட்டினர். டேவிட் மில்லருக்கு ஹர்திக் பாண்டியா பந்துவீசிய போது, விளாசி அடித்தார் மில்லர். அந்த பந்தை கையில் பிடித்த சூர்யகுமார், தான் பவுண்டரி லைனை தொட்டு விடலாம் என்று சமயோசிதமாக யோசித்து, கையிலிருந்த பந்தை மேலே வீசி மீண்டும் அதை கேட்ச் பிடித்தார்.

சென்னையை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் செல்வகுமார், “இறுதி வரை தென் ஆப்பிரிக்கா தான் ஜெயிக்கும் என்று நினைத்திருந்தோம். ஒரு கட்டத்தில் வெறுத்தே விட்டது. ஆனால் சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச் நினைத்தே பார்க்க முடியவில்லை. எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆட்டத்தை பார்த்து கண் கல்ங்கிவிட்டேன். ஐ லவ் யூ இந்தியா” என்றார்.

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ்-ன் கேட்ச் நினைத்துப் பார்க்க முடியாதது என்கிறார் செல்வகுமார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் சற்று தொய்வாக விளையாடிய விராட் கோலி இந்த இறுதி ஆட்டத்தில் 76 ரன்கள் இந்திய அணிக்காக குவித்தது, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. டி20-ல் விராட் கோலியின் இறுதி ஆட்டமாக அமைந்தது நேற்றைய ஆட்டம். அவரது ஓய்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, தோனியின் இடத்தில் நின்று ஆடினார் விராட் கோலி என்கிறார் ராஜேஷ்.

நேற்று இரவு ஆட்டத்தைப் பார்த்துவிட்டு அதே உற்சாகத்துடன் இன்று காலை மைதானத்தில் கிரிக்கெட் ஆடி வந்த ராஜேஷ், “ஆரம்பத்தில் 47 ரன்களில் 3 விக்கெட்டு இழந்த உடன் உற்சாகம் குறைந்து விட்டது. அதன் பின் கோலி நின்று ஆடினார். இந்த தொடரில் அவர் சரியாக ஆடவில்லை. ஆனால் கடைசி ஆட்டத்தில் கோலி கோப்பை வாங்கிக் கொடுத்து விட்டார். தோனி இடத்தில் நின்றி அதை செய்துள்ளார். 70க்கும் மேல் ரன்கள் அடித்து,தென் ஆப்பிரிக்காவுக்கான இலக்கை கடினமாக்கிவிட்டார்.” என்றார்.

“கிங்கோலி, இத்தனை நாள் ஃபார்மில் இல்லவே இல்லை. நேற்று ஆடியது உண்மையாகவே நன்றாக இருந்தது. ரோஹித் சர்மா வேற லெவல். அவர் நேற்று சரியாக விளையாடவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவுடன் ஆடிய ஆட்டம் அபாரமாக இருந்தது” என்கிறார்.

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, ட்ரோல் செய்தவர்களுக்கு தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்து விட்டார் ஹர்திக் பாண்டியா என்கிறார் ராகுல்.

தோனிக்கு பிறகு யாராவது கோப்பையை வென்று தரமாட்டார்களா என்று காத்திருந்ததாக கிரிக்கெட் ரசிகரான ராகுல் கூறுகிறார். “ஒவ்வொரு முறையும் இறுதி சுற்றுவரை செல்வோம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் இருப்போம், வெல்ல மாட்டோம். ஹர்திக் பாண்டியாவை ஐ பி எல் காலத்தில் அவர் சரியாக ஆடவில்லை என்று சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்வார்கள். இப்போது தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்து விட்டார்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

ஆட்டத்தின் இறுதி ஐந்து ஓவர்களில், 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் ஆடியது தென் ஆப்பிரிக்கா. அப்போது தென் ஆப்பிரிக்கா தான் வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால் கடைசி ஓவரில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா தான் முழு காரணம் என்று அவர் பாராட்டுகிறார் நவீன். “எளிதாக இலக்கு என்று தென் ஆப்பிரிக்கா நினைத்த போது, கிளாசனின் விக்கெட் எடுத்தது தான் ஆட்டத்தின் திருப்பு முனை. அதை செய்தது பாண்டியா தான். இறுதி ஓவரில் முதல் விக்கெட் எடுத்து ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தது ஹர்திக் பாண்டியா. அவரை ட்ரோல் செய்ததற்கு அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார்.” என்றார்.

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, இந்தியா வெற்றி பெற்றதுக்கு ஹர்திக் பாண்டியா எடுத்த க்ளாசன் விக்கெட் தான் முக்கிய காரணம் என்கிறார் நவீன்.

இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் வெற்றிக்கு மிகவும் உதவியது என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர். சத்யசீலன், “அர்ஷ் தீப்-19வது ஓவரில் சிறப்பாக பந்துவீசி ரன் எடுக்காமல் பார்த்துக் கொண்டார். வீரர்களின் உடலுக்கு நெருக்கமாக பந்து வீசியதால், அவர்களால் ரன் எடுக்க இயலவில்லை. பும்ராவும் ஹர்திக் பாண்டியாவும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினர்,” என்றார்.

இரவெல்லாம் தூக்கமில்லாமல் ஆட்டத்தை மீண்டும் மீண்டும் பார்த்ததாக பூரிப்புடன் தெரிவிக்கிறார் சத்யசீலன். “இரவு எல்லாம் உற்சாகமாக இருந்தது. தூங்காமல் இரவு 1 மணி வரை அந்த ஆட்டத்தின் முக்கிய தருணங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தோம். வெற்றி பெற்றவுடன் ரோஹித் சர்மா, மைதானத்தில் படுத்து, அடித்ததை பார்த்து, எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. ரோஹித் சர்மா தலைமையில் கடந்த முறையே உலகக் கோப்பை கிடைத்திருக்க வேண்டும். இனி அவர் ஆட்டத்தை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை,” என்றார்.

தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு நுழைவது இதுவே முதன் முறையாகும். “பல ஆண்டுகள் கழித்து இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளவர்கள் தோற்றுப் போனது ஒரு கிரிக்கெட் ரசிகனாக வருத்தமாக உள்ளது. எனினும், இந்தியாவை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா,” என்று புன்னகைக்கிறார் பரத்.

“இத்தனை ஆண்டுகள் கழித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த தென் ஆப்பிரிக்கா தோற்றது வருத்தம் தான். ஆனால் விளையாட்டில் இதுவெல்லாம் சகஜமே,” என்றார் சுகுமார்.

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, இரவெல்லாம் தூங்காமல் ஆட்டத்தின் நெகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் மீண்டும் பார்த்து வந்ததாக சத்யசீலன் கூறுகிறார்.

“ஐ பி எல் போட்டிகளால் பிரிந்து இருந்தோம். ஆனால் நேற்று அதை எல்லாம் மறந்துவிட்டோம். ஹர்திக் மீது வெறுப்பு சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில், பவுலிங் போடும் போது அவருக்காக வேண்டாத தெய்வமே கிடையாது. எல்லாருமே நன்றாக விளையாடினார். 30 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்த போது வெறுத்து போய், டிவியை அணைத்து விட்டு தூங்கியவர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் வரலாற்றின் முக்கிய தருணத்தை இழந்துவிட்டனர். தென் ஆப்பிரிக்காவை சோக்கர் என்று கூறுவோம். ஆனால் இந்தியா தான் சோக்கர். சோக்கர் எதிராக சோக்கர் ஆடும் விளையாட்டாக அது அமைந்தது,” என்றார் சூர்யா.

டி20 உலகக் கோப்பை
படக்குறிப்பு, ஐ பி எல் போட்டிகளால் பிரிந்து இருந்த ரசிகர்கள் நேற்று ஒன்றாக உணர்ந்ததாக சூர்யா கூறுகிறார்.

எட்டாம் வகுப்பு மாணவர் ஆனந்த் ஆர்த்ரேயா, இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது என்றாலும் அனைவரும் சமமாக பங்களித்தனர் என்றார்.” கோலி இத்தனைநாட்களாக டக் அவுட் ஆகி வந்தார். அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்தது. ரிஷப் பந்த் மேலே தூக்கி அடித்து விக்கெட் இழந்தார். அவர் அப்படி அடித்தது தேவையற்றது என்று நான் கருதுகிறேன்” என்றார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் தேவ் சித்தார்த், “பும்ரா நன்றாக விக்கெட் எடுத்தார். எனக்கு அவரது ஆட்டம் மிகவும் பிடித்திருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்று முன்னாடியே தெரியும்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)