You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெதன்யாகு கொன்றதாக கூறும் முகமது சின்வார் யார்? அவரது பின்னணி என்ன?
ஹமாஸின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வாரின் சகோதரரும், இஸ்ரேலால் தீவிரமாக தேடப்பட்டு வருபவருமான முகமது சின்வாரை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
யார் இந்த முகமது சின்வார்?
49 வயதான முகமது சின்வார், 1980ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஹமாஸ் உருவாக்கப்பட்டபோதே அதில் இணைந்தார். ஹமாஸின் ராணுவ கிளையில் உறுப்பினரானார். படிப்படியாக உயர்ந்து 2005-ல் கான் யூனிஸ் பிரிகேடின் படைத்தலைவரானார்.
2006ஆம் ஆண்டு இஸ்ரேலில் நடத்தப்பட்ட எல்லைத் தாண்டிய தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் முகமது சின்வாரும் ஒருவராகக் கருதப்பட்டார். இந்த தாக்குதலின் போதே இஸ்ரேலிய ராணுவ வீரர் கிலாத் ஷலித் (Gilad Shalit) ஹமாஸிடம் பிடிபட்டார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு யாஹ்யா சின்வார் உட்பட 1,000 பாலத்தீன கைதிகளுக்கு மாற்றாக ஷலித் விடுவிக்கப்பட்டார்.
ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்ட ஹமாஸ் ஆயுதப்பிரிவு தலைவர் முகமது டெய்ஃப் உடனும் முகமது சின்வார் நெருக்கமாக இருந்தவராக கூறப்படுகிறது. இஸ்ரேலில் நடந்த 2024 அக்டோபர் 7 தாக்குதலின் திட்டமிடலில் இவருக்கும் பங்கிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனாலும், இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக மிகுந்த கவனத்துடனே பேசி வருகிறது. மே 13ஆம் தேதி நடந்த தாக்குதலில் இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில், இவரைப் பற்றிய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. அதன் பிறகும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், முகமது சின்வார் இறந்ததற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அதேசமயம், ஹமாஸும் இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல், அமைதி காத்து வருகிறது. இந்தநிலையில் தான் நெதன்யாகு நேற்று அவர் கொல்லப்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு