மகாவிஷ்ணு: டி.வி நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றிய சிறுவன் ஆன்மிகப் பாதைக்கு திரும்பியது எப்படி?

காணொளிக் குறிப்பு, மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அனிதா உத்தரவிட்டார்
மகாவிஷ்ணு: டி.வி நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றிய சிறுவன் ஆன்மிகப் பாதைக்கு திரும்பியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதற்காக 'பரம்பொருள்' அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டார். அவர் தனது பேச்சில், பாவ புண்ணியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆண்கள் மாதிரி பள்ளியில் பேச அழைக்கப்பட்டார். அங்கு மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத் திறனாளியும் தமிழாசிரியருமான சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் மேடையிலேயே மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின.

சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனுவில், 'மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ) படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் குளத்துப்பாளையத்தில் செயல்படும் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

யார் இந்த மகாவிஷ்ணு?

மகாவிஷ்ணு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக இருந்த நாட்களிலேயே மேடைப் பேச்சில் ஆர்வமுடையவராக இருந்த மகாவிஷ்ணு, தனியார் தொலைக்காட்சி நடத்திய 'அசத்தப் போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார்.

"இந்த (அசத்தப் போவது யாரு?) நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் புகழும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிறகு படங்களை இயக்க விரும்பி, கதைகளை எழுதினார். அதற்குப் பிறகு 'துருவங்கள் பதினாறு' படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார்.

"இதற்குப் பிறகு படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தார்.

"ஆனால், அந்த முயற்சியில் வெற்றி ஏதும் கிடைக்காத நிலையில், தனது குருவான காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் ஆன்மீகப் பாதையை அவர் கண்டடைந்ததாக," அவரது 'பரம்பொருள் ஃபவுண்டேஷனின்' இணையதளம் குறிப்பிடுகிறது.

இதற்குப் பிறகு தன்னை ஆன்மீகவாதியாக முன்னிறுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் யோகா நிகழ்ச்சிகள், உரைகள் ஆகியவற்றை நிகழ்த்தி வருகிறார் மகாவிஷ்ணு.

அரசுப் பள்ளிகளில் பேச யாரை அழைக்கலாம்? வரையறை என்ன?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து விதிமுறைகள் ஏதும் உள்ளனவா?

"அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும்.

"ஆனால், ஒரு நபர் மாணவர்கள் மத்தியில் பேச மிகத் தகுதியானவர் என பள்ளித் தலைமை ஆசிரியர் கருதினால், விதிவிலக்காக அவரே முடிவெடுக்கலாம். ஆனால், வரும் நபரின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய வேண்டியது அவரது கடமை. அந்த நிகழ்வுக்கு அவரே பொறுப்பு," என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் கௌரவத் தலைவர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன்.

மாற்றுத் திறனாளியான கே.ஷங்கரை அவமானப்படுத்தியதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மகாவிஷ்ணு மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

முழு விவரம் காணொளியில்.

மகாவிஷ்ணு

பட மூலாதாரம், Paramporul Foundation/YT

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)