லெபனான்: அபாய கட்டத்தில் மத்திய கிழக்கு - ஐ.நா. மூத்த அதிகாரி எச்சரிப்பது ஏன்?
வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொலா குழுவின் இரண்டு உயர்மட்ட ராணுவத் தளபதிகள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹெஸ்பொலாகளின் உயரடுக்கு ரத்வான் படைகளின் மூத்த தளபதியான இப்ராஹிம் அக்கில் மற்றும் அப்படையின் முக்கிய நபரான அஹ்மத் வஹ்பி இறந்ததை அக்குழு உறுதிப்படுத்தியது.
வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதல் ஹெஸ்பொலாவிற்கு மற்றொரு பெரிய அடியாகும். மேலும், ஜூலைக்கு பிறகு பெய்ரூட் மீது இஸ்ரேல் முதல் முறையாக வான்வழித் தாக்குதல் தொடுத்துள்ளது.
ஹெஸ்பொலாவினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனமான பேஜர்கள் மற்றும் வயர்லெஸ் வாக்கி டாக்கியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஆனால், பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்புகளுக்கு இஸ்ரேல் இதுவரை நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இந்த இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாகவும், 3,000 பேர் காயம் அடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத்துறை கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



