அமெரிக்கா உதவியை நிறுத்தினால், ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியுமா?

அமெரிக்கா உதவியை நிறுத்தினால், ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனால் தாக்குப் பிடிக்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்திய பிறகு, யுக்ரேனின் பொருளாதாரத்தால் ரஷ்யா உடனான போரை மேலும் ஓர் ஆண்டுக்கு எதிர்கொள்ள முடியுமா?

யுக்ரேன் போரை தன்னால் ஒரே நாளில் நிறுத்த முடியும் என அதிபர் தேர்தலில் மீண்டும் வென்றதும் டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆனால், சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அதை எப்படி செய்வார் என்பது குறித்த தெளிவான திட்டத்தை அவர் அறிவிக்கவில்லை.

மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட யுக்ரேன் பெரிய நாடு என்றாலும், ரஷ்யாவைவிட மிகச்சிறியது. முழு படையெடுப்புக்கு முன்னதாக ரஷ்யாவின் பொருளாதாரம் யுக்ரேனின் பொருளாதாரத்தைவிட 10 மடங்கு பெரியது என மதிப்பிடப்பட்டது.

யுக்ரேன் தொடர்ந்து தன்னை தக்க வைக்க முயற்சிக்கிறது. 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு நிதியளிக்க, வரிகளை உயர்த்தியுள்ளது, ஆனால் அது போதாது. ஏனெனில் ரஷ்யாவுடனான போரின் செலவு வியக்க வைக்கும் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 142 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது.

2022 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் யுக்ரைன் 115 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் நிதி உதவி பெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியம் அதிக நிதி வழங்கி இருந்தது.

எனினும், ராணுவ உதவியில் அமெரிக்காவே முன்னணியில் உள்ளது. புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும் பழைய ஆயுதங்களை மேம்படுத்துவதற்குமான நிதியில் கணிசமான பங்கு அமெரிக்கா தருகிறது.

மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற பொது சேவைகளுக்கும், நாணய மதிப்பை நிலையாக பராமரிப்பதற்கும் சர்வதேச கூட்டாளிகளிடமிருந்து ராணுவம் அல்லாத உதவியும் யுக்ரேனுக்கு மிக முக்கியம்.

அதே நேரம், பணம் மட்டும் யுக்ரேனுக்கு இருக்கும் சவால் அல்ல. தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் எரிசக்தி பற்றாக்குறையையும் அந்த நாடு எதிர்கொள்கிறது.

யுக்ரைனின் போருக்கு முந்தைய மின் உற்பத்தி திறனில் கிட்டத்தட்ட பாதி ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சவாலான சூழல்கள் இருந்தபோதிலும் யுக்ரேனின் பொருளாதாரம் மீளக்கூடிய நிலையில் இருப்பதாகவே சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. ஆனால், இது சர்வதேச நிதி உதவியை பொறுத்தது.

2025-ல், யுக்ரைன் மேலும் 38 பில்லியன் டாலர்களை சர்வதேச உதவியாகப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரேனுக்கான பொருளாதார சவால்கள் குறித்து முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)