'தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு' ; வானிலை முன்னறிவிப்பு முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று (அக்.16) தினசரி வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் "தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் இன்று தொடங்கியுள்ளது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் "தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக ,இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர்நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பழமை வாய்ந்த திருச்செந்தூர் சிவன் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் கோவில் குளம் போல் காட்சியளித்து வருகிறது.
அதேபோன்று, புதுக்கோட்டை கோரம்பள்ளம், அந்தோணியார்புரம், காலங்கரை, முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, கனமழையின் காரணமாக காலங்கரை கிராமத்தில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அக். 17: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக். 18: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ) வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 19: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக். 20: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக். 21: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அக். 16: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
'இந்தாண்டு அதிக மழை இருக்கும்'
தனியார் வானிலை ஆர்வலரான செல்வகுமார் கூறுகையில், "இந்தாண்டு மழை அதிகமாக இருக்கும். அக். 22 அன்று அந்தமானில் மந்தா (MOAN-THA) எனும் புயல் உருவாக உள்ளது. இது அக். 23-24 வாக்கில் அது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறும். 25-26 வாக்கில் வட தமிழக கடலோர பகுதிகளுக்கு வரும். நெல்லூர் அருகே இந்த புயல் கரையைக் கடக்கலாம். அப்போது மழை அதிகமாக பெய்யும். சென்னைக்கு 35-40 செ.மீ. வரை கூட மழை பெய்யலாம்." என தெரிவித்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், தென் மாவட்டங்களிலும் இந்தாண்டு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். நீலகிரி, வால்பாறை பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த அளவுக்கான அதிக மழை பெய்யும் என தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஜனவரி நடுப்பகுதி வரை நீள வாய்ப்புள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார். வழக்கமாக, டிசம்பர் இறுதியிலேயே வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
மலைப்பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காளிகேசத்தில் உள்ள சப்பாத்து பாலம் மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும், மழை அதிகரிக்க கூடும் என்பதாலும் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மக்காச்சோளம் விவசாய நிலத்திற்கு உரம் வைக்க கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
இன்று மாலை வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது திடீரென வயலில் பலத்த சத்தத்துடன் இடி மற்றும் மின்னல் தாக்கியது.
இதில் கூலி வேலை செய்து கொண்டிருந்த கணிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒரு பெண் கண்களில் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































