பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு - பேருந்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபர் யார்?

பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்பு - பேருந்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபர் யார்?
பிரசுரிக்கப்பட்டது

பெங்களூரு குண்டுவெடிக்கு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என கர்நாடக் முதலமைசர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப்படும் என்றும் கூறியுள்ளார்

பெங்களூருவில் இரட்டை குண்டுவெடிப்பு

பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை மதியம் அடுத்தடுத்து 2 முறை குண்டு வெடித்தது.

முதல் குண்டுவெடிப்பு மதியம் 12:55:32 மணிக்கும், இரண்டாவது குண்டுவெடிப்பு 12:55:37 மணிக்கும் நிகழ்ந்தது.

குண்டிவெடிப்பில் 10 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் ஒருவருக்கு நாற்பது சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் சிலிண்டர் வெடித்து நிகழ்ந்ததா அல்லது குண்டு வெடித்து நிகழ்ந்ததா என போலீஸார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஐஇடி வகை குண்டுவெடிப்பால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என கூறப்படுவதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும் என்றும் சித்தராமையா கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், குண்டுவெடிப்பு நடத்திய நபர் முதலில் ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு வாஷ் பேசின் அருகே உள்ள மரத்தடியில் பையை வைத்துவிட்டுச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பை நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உணவகத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யா ராகவேந்திரா, எந்த சிலிண்டராலும் வெடிப்பு ஏற்படவில்லை என பிபிசியிடம் கூறினார். இந்த வழக்கின் தடயவியல் ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட குழுவினர் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கர்நாடக டிஜிபி அலோக் மோகனும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

உணவகத்தில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான் என்பதை டிஜிபியும் உறுதிப்படுத்தினார்.

பா.ஜ.க. குற்றச்சாட்டும் காங்கிரஸ் பதிலடியும்

இந்த நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜகவைச் சேர்ந்தவர்மான பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகவு, தேச விரோத சக்திகளுக்கு ஆளும் கட்சியில் இருந்து அதிக ஆதரவு கிடைப்பதாகவும், குறிப்பிட்ட சாரரை திருப்திபடுத்த நினைக்கும் அரசியல்தான் இது போன்ற சம்பவங்கள் வழிவகுப்பதாக பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.

பசவராஜ் பொம்மையின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய சித்தராமையா, பாஜக ஆட்சியின்போது மங்களூருவில் குண்டுவெடிப்பு நடந்தது, அதுவும் குறிப்பிட்ட சாரரை திருப்திபடுத்த நினைக்கும் அரசியலால்தான் நிகழ்ந்ததா என கேள்வி எழுப்பினார்.

சனிக்கிழமை அன்று, பாதிக்கப்பட்டவர்களை கர்நாடக முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாஜகவினர் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், 8 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், நியாயமான விசாரணை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

பேருந்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபர் யார்?

சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அதிகாரிகள், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிசிடிவி ஆதாரங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். சந்தேகத்திற்கிடமான நபர் பேருந்தில் இருந்து வந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அவ்வழியாக பயணித்த 26 மாநகர பேருந்துகள் குறித்து தரவுகளை சேகரித்து வருகிறோம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

குண்டுவெடிப்புக்காக டைமர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் சிலிண்டர் வெடிப்பு பற்றிய கதையை உருவாக்க முயன்றார்கள். இப்போது வியாபாரப் போட்டி என்ற கதையை உருவாக்குகிறார்கள்.

விசாரணை அமைப்புகளைத் தங்கள் வேலையைச் செய்ய காங்கிரஸ் அரசால் ஏன் அனுமதிக்க முடியவில்லை? வாக்கு வங்கியின் கட்டாயம் என்ன? விசாரணை நடத்த சுதந்திரம் வழங்க வேண்டும், பெங்களூரு மக்களுக்குத் தெளிவான பதில் அளிக்க வேண்டும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

முழு விவரம் காணொளியில்..

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)