சேவாக் போல டி20 பாணியில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் 'ஜெய்ஸ்வால்' - ஸ்ட்ரைக் ரேட் என்ன தெரியுமா?
இது பாஸ்பால் ஆட்டம் அல்ல.. ஜெய்ஸ்பால் ஆட்டம் என ராஜ்கோட்டில் நிரூபித்திருக்கிறார் இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால்.
ஒரே டெஸ்ட் தொடரில் இரண்டு முறை இரட்டைச் சதம் விளாசிய இளம் வீரர்களில் வினோத் காம்ப்ளி, டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் 22 வயதேயான ஜெய்ஸ்வால்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 12 சிக்சர்களை பறக்கவிட்டு, ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்கிற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்திருக்கிறார். இந்த தொடரில் மட்டுமே 22 சிக்சர்களை விளாசியிருக்கிறார் ஜெய்ஸ்வால்.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடந்தது?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை சேர்த்தது.
அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும் ஜடேஜா 112 ரன்களும் சேர்த்தனர். யஷஷ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் கில் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.
இங்கிலாந்து அணியோ முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களை விளாசினார்.
இந்தியா 126 ரன்களில் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோஹித் 19 ரன்களில் வெளியேறிய போதிலும், கில்லும் ஜெய்ஸ்வாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
யஷஸ்வி மிகுந்த எச்சரிக்கையுடன் ஆட்டத்தை தொடங்கினார். முதல் 39 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதற்கு பின்பு வேகமெடுத்தது அவரது ஆட்டம். ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்துவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷத்தில் இருந்து, பந்துவீச்சாளர்கள் யாரும் தப்பவில்லை.
ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷம் டி20 ஆட்டத்தை நினைவுபடுத்தியது. 122 பந்துகளில் சதம் விளாசினார்.
104 ரன்கள் எடுத்திருந்தபோது முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்ட ஜெய்ஸ்வால் களத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
3வது நாள் முடிவடையவிருந்ததால் குல்தீப் யாதவை களமிறக்கியது இந்திய அணி. அவரும் தன் பங்கிற்கு நேர்த்தியாக ஆடினார். 4வது நாள் தொடக்கத்தில் நேர்த்தியாக ஆடிக் கொண்டிருந்த கில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி விடைபெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
கில்லுக்கு பிறகு மீண்டும் வந்த ஜெய்ஸ்வால்
கில் வெளியேறியதும் ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் ஆட களமிறங்கினார். இது பலருக்கு ஆச்சரியத்தை தந்தது. 104 ரன்களுடன் தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். சிக்சர்களும் பவுண்டரியுமாக பந்துகள் பறந்தன.
அபாரமான ஆட்டத்தால் இரட்டைச் சதத்தையும் பதிவு செய்தார். ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் இரட்டைச் சதத்தை பதிவு செய்திருந்தார் ஜெய்ஸ்வால்.
மறுமுனையில் சர்ஃபிராஸ் கான் ஜெய்ஸ்வாலுக்கு பக்கபலமாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் தொடர்ந்து எகிறியது. சர்பிராஸ் கானும் அரைசதம் விளாச, இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் சேர்த்திருந்தது. அத்துடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
அறிமுக ஆட்டக்காரரான சர்ஃபிராஸ் கான் ஆட்டமிழக்காமல் 72 பந்துகளில் 68 ரன்களை விளாசி தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சேவாக் போல டி20 பாணியில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் ஜெய்ஸ்வால்
யஷஷ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை குறிப்பிட்டு, இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டுக்கு பதிலாக இந்தியா 'ஜெய்ஸ்பால்' கிரிக்கெட்டை களமிறக்கியிருக்கிறது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்தளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 236 பந்துகளில் 214 ரன்களை சேர்த்திருந்தார் ஜெய்ச்ஜ்வால். இதில் 14 பவுண்டர்களும் 12 சிக்சர்களும் அடக்கம்.
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டிலும் டி20 பாணியிலேயே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்துக் கொண்டிருந்தார் ஜெய்ஸ்வால். 70 பந்துகளிலேயே 76 ரன்களை ஜெய்ஸ்வால் எடுத்திருந்த போது வர்ணனை செய்து கொண்டிருந்த, மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் டெஸ்டில் இருந்து டி20க்கு மாறுவது அல்லது டி20யில் இருந்து டெஸ்டுக்கு மாறுவது கடினமா என்ன என ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
2023 ஜூலை 12ம் தேதி அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 13 இன்னிங்ஸ்களில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஆனால் 2 அரைசதம் 2 சதம் 2 இரட்டைச் சதம் என தனது அதிரடியான பங்களிப்பை இந்தியா அணிக்கு கொடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 68.99 ஆகும். 90 பவுண்டரிகளையும், 25 சிக்சர்களையும் ஜெய்ஸ்வால் விளாசியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சேவாக், மஞ்ச்ரேக்கர் ஆகியோரை அவர் சமன் செய்துள்ளார். இவர்கள் மூவரும் ஏழாவது இடத்தில் இருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உலக சாதனை சமன்
236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில், பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.
அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.
ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் என்ற தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



