கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தது எவ்வளவு நாளாகும்?

    • எழுதியவர், சுர்பி குப்தா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நம் உடலின் முக்கியமான உள்ளுறுப்பு கல்லீரல், அது முழுமையாக செயலிழக்கும்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

செயலிழந்த கல்லீரலுக்குப் பதிலாக ஆரோக்கியமான கல்லீரலையோ அல்லது மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரலின் ஒரு பகுதியையோ பொருத்துவது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையாகும்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எப்போது அவசியமாகிறது? அதை செய்வதற்கான விதிமுறைகள் என்ன? மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னர் எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

இதை புரிந்துகொள்ள, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் HPB சர்ஜரி துறையின் தலைவர் மற்றும் ஆலோசகரான மருத்துவர் விபா வர்மா மற்றும் டெல்லியில் உள்ள மேக்ஸ் கல்லீரல் மற்றும் பித்த அறிவியல் மையத்தின் தலைவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான சுபாஷ் குப்தாவிடம் நாங்கள் பேசினோம்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எப்போது செய்ய வேண்டும்?

சிரோசிஸ் (cirrhosis) எனப்படும் ஆரம்பகட்ட கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழத்தல் மற்றும் பிறவியிலேயே கல்லீரல் செயலிழத்தல் போன்ற நிலைமைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என இரு நிபுணர்களும் கூறுகின்றனர்.

மூன்று நோய்கள் ஏற்படும்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக மருத்துவர் சுபாஷ் குப்தா கூறுகிறார்.

1. சிரோசிஸ், இது கல்லீரலை செயலிழக்கச் செய்யும் வகையிலான நிரந்தர காயங்களை ஏற்படுத்தும். இது, பெரும்பாலும் மது அருந்துதல், ஹெப்படைட்டிஸ் பி அல்லது ஹெப்படைட்டிஸ் சி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் உண்டாகிறது.

2. கொலஸ்டாட்டிக் கல்லீரல் நோய், இது கல்லீரலின் பித்த நாளங்களில் ஏற்படும் பிரச்னை. இதில், கல்லீரல் ஆரோக்கியமானதாக இருக்கும், ஆனால் பித்த நாளங்களின் ஓட்டம் சரியாக செயல்படாது.

3. கல்லீரல் புற்றுநோய்

இருவகையான கல்லீரல் புற்றுநோய்கள் இருப்பதாக மருத்துவர் சுபாஷ் குப்தா கூறுகிறார். ஒன்று, முதல் நிலை கல்லீரல் புற்றுநோய், அதாவது கல்லீரலில் ஏற்படும் புற்றுநோய், மற்றொன்று இரண்டாம்நிலை கல்லீரல் புற்றுநோய், இதில் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து புற்றுநோய் கல்லீரலுக்கு பரவும்.

முதல்நிலை கல்லீரல் புற்றுநோயில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறுகிறார் அவர்.

மருத்துவர் விபா வர்மா விளக்குகையில், "சிரோசிஸ் நோயாளிகள் சிலருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது முற்றிலும் குணமடைய வாய்ப்புண்டு. சில நோயாளிகளில், பெருங்குடல் அல்லது மலக்குடலில் புற்றுநோய் ஆரம்பித்து அது கல்லீரலுக்கு பரவும்போதும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்." என தெரிவித்தார்.

இவை தவிர்த்து, கல்லீரல் திடீரென செயலிழக்கும் போதும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மருத்துவர் விபா வர்மா கூறுகையில், "கல்லீரல் திடீரென செயலிழக்கும்போது (acute liver failure) அவசர கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சில சமயங்களில், ஹெப்படைட்டிஸ் ஏ அல்லது ஹெப்படைட்டிஸ் இ அல்லது சில மருந்துகள் காரணமாக ஏற்படும் வைரஸ் தொற்றால் இது ஏற்படுகிறது." என்றார்.

கல்லீரல் தானம் எவ்வாறு பெறப்படுகிறது?

இறந்துபோன ஒருவரிடமிருந்தோ அல்லது உயிருடன் உள்ளவரிடமிருந்தோ ஆரோக்கியமான கல்லீரலை பெற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இறந்துபோன அல்லது மூளைசாவு அடைந்தவரிடமிருந்து கல்லீரலை பெறுதல்

இம்முறையில் நோயாளியின் செயலிழந்துபோன கல்லீரலை நீக்கிவிட்டு, ஆரோக்கியமான கல்லீரலை பொருத்துவார்கள்.

மருத்துவர் விபா வர்மா விளக்குகையில், "இதில், தானமாக வழங்கப்படும் முழு கல்லீரலையும் நோயாளிக்கு பொருத்தலாம். அல்லது கல்லீரல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒருபகுதியை வளர்ந்த ஒரு நபருக்கும் மற்றொன்றை குழந்தைக்கும் பொருத்த முடியும்," என்கிறார்.

உயிருள்ள நபரின் கல்லீரல்

ஆரோக்கியமாக உள்ள நபர் ஒருவர் தன் கல்லீரலின் ஒருபகுதியை தானமாக அளிக்க முடியும். ஆனால், அவர்கள் நோயாளியின் உறவினராக இருத்தல் வேண்டும்.

மருத்துவர் சுபாஷ் கூறுகையில், "இம்முறையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் கல்லீரலின் ஒருபகுதியை தானமாக அளிக்கலாம், வேறொருவர் தானமாக வழங்க முடியாது. அதாவது தாய் அல்லது தந்தை குழந்தைக்கு தானமாக வழங்கலாம், அல்லது மகன்/மகள் தங்கள் பெற்றோருக்கு தானமாக வழங்கலாம். கணவன், மனைவி, சகோதரர், சகோதரியும் தானமாக வழங்கலாம். இதில் சட்டபூர்வ விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்." என்றார்.

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை உடல் உறுப்புகள் மாற்று சட்டம் நிர்வகிப்பதாக, மருத்துவர் விபா வர்மா விளக்குகிறார்.

  • கல்லீரலை தானமாக வழங்குபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரின் சம்மதத்துடனேயே கல்லீரலை பெறமுடியும். நோயாளியின் உறவினரே உறுப்பை தானமாக வழங்க முடியும்.
  • அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட குழு, நோயாளிக்கும் கல்லீரல் தானமாக அளிப்பவருக்கும் இடையேயான உறவை உறுதிசெய்யும், இதில் எவ்வித அழுத்தமோ வற்புறுத்தலோ இல்லை என்பது உறுதி செய்யப்படும்.
  • சட்டப்பூர்வ ஒப்புதல் கிடைத்தபின்னர், நோயாளிக்கும் தானமாக வழங்குபவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும், அறுவை சிகிச்சைக்கான உடல் தகுதியுடன் இருவரும் உள்ளனரா என்பது உறுதி செய்யப்படும்.

மருத்துவர் விபா வர்மா கூறுகையில், "இருவருக்கும் ஒரே வகை ரத்தப்பிரிவு இருக்க வேண்டும். தானமாக வழங்குபவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், 18-55 வயதுக்குட்பட்டவராகவும் அவர் இருக்க வேண்டும்." என்றார்.

உயிருடன் உள்ளவரிடமிருந்து ஒருபகுதி கல்லீரல் மட்டுமே தானமாக பெறப்படும்.

நாளடைவில் இருவருடைய கல்லீரல்களும் அதன் முழு அளவுக்கு வளர்ச்சியடைந்துவிடும்.

மருத்துவர் சுபாஷ் குப்தா விளக்குகையில், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கல்லீரல் அதன் 70% அளவை மீண்டும் பெற்றுவிடும், மேலும் 80-90% பகுதி ஒரு மாதத்தில் அடையும். ஒரு வருடத்தில் இருவரின் கல்லீரல்களும் 95-100% அளவை எட்டிவிடும்" என்கிறார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் உயிருடன் உள்ளவர்களிடமிருந்து தானம் பெற்றே செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) கூற்றின்படி, இந்தியாவில் 2024ம் ஆண்டில் 952 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் இறந்தவர்களிடமிருந்து கல்லீரல் பெற்றும் 3,946 சிகிச்சைகள் உயிருடன் உள்ளவர்களிடமிருந்து பெற்றும் மேற்கொள்ளப்பட்டன.

சுபாஷ் குப்தா கூறுகையில், இந்தியாவில் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படவில்லை என தெரிவித்தார்.

"உறுப்பு தானம் செய்வது மிகவும் முக்கியம். அது பல உயிர்களை காப்பாற்றும். இப்போது, பலரும் மருத்துவமனைகளில் உயிரிழக்கின்றனர், ஆனாலும் உறுப்பு தானத்திற்கு பற்றாக்குறை நிலவுகிறது." என்றார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

பொருத்தப்பட்ட புதிய கல்லீரல், நன்றாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வது முக்கியம்.

மருத்துவரிடம் அவ்வப்போது பரிசோதனைக்கு செல்வது முக்கியம். அறுவை சிகிச்சைக்கு பின்னர், அந்த கல்லீரலை நோயாளியின் உடல் ஏற்றுக்கொண்டுள்ளதா என்பது குறித்தும் மற்ற விளைவுகள் குறித்தும் மருத்துவர்கள் பரிசோதிப்பர்.

மாற்று உறுப்பை நிராகரித்தல் என்பது என்ன?

உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பொருத்தப்பட்ட கல்லீரலை "வெளியிலிருந்து பெறப்பட்டது" என கருதி, அதை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். இது அறுவை சிகிச்சை நடந்து முதல் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு நடக்க வாய்ப்புண்டு.

அறிகுறிகள் என்ன?

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின்படி (NIH), பெரும்பாலும் இதற்கான அறிகுறிகள் உடனடியாக தெரியாது.

NIH அதற்கான அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது:

  • சோர்வு
  • வயிற்று வலி, காய்ச்சல்
  • தோல் மஞ்சள் நிறமாதல், கண் வெளிறிய நிறத்தில் மாறுதல்
  • அடர் சிறுநீர்
  • வெளிறிய நிறத்தில் மலம் கழித்தல்

இதைத் தடுக்க மருத்துவர்கள் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை பரிந்துரைப்பர். பொருத்தப்பட்ட கல்லீரலுக்கு எதிரான நோயெதிர்ப்பு அமைப்பின் எதிர்வினையை குறைப்பதன் மூலம் உறுப்பு நிராகரிப்பை தடுக்கலாம்.

அறுவை சிகிச்சைக்கு பின்னான முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை என விளக்கும் விபா வர்மா, நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் காரணமாக இந்த காலகட்டத்தில் தொற்றுக்கான ஆபத்து அதிகம் என்றார்.

அவரை பொறுத்தவரை, இக்காலகட்டத்தில் நோயாளிகள் சிலவற்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • நோயாளி கூட்டமான அல்லது மாசுபட்ட இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • உறுப்பு நிராகரிப்பு ரத்தப் பரிசோதனைகள் அல்லது கல்லீரல் பயாப்சி (திசுக்களை பரிசோதித்தல்) மூலம் கண்டறியப்படும், அதற்கு நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளின் டோஸை சரிசெய்வதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.
  • அறுவை சிகிச்சைக்கு பிந்தைய முதல் மூன்று மாதங்கள் கடுமையான உடலுழைப்பை கோரும் பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • இதன்பின், மருந்துகள் மற்றும் போதுமான இடைவெளியில் மருத்துவரை சந்திப்பது போன்றவை சீரான அளவில் குறைந்து, நோயாளிகள் வழக்கமான பணிகளுக்கு திரும்பலாம்.
  • மருந்துகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், மருத்துவரின் பரிந்துரைப்படி ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும், மேலும் அசாதாரண அறிகுறிகளை மருத்துவரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான நோயாளிகள் இயல்பான வாழ்க்கையை வாழ்வதாக மருத்துவர் விபா வர்மா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு