மனைவியின் சவாலுக்காக ஃபிரிட்ஜ் ஃப்ரீசருடன் 112 கி.மீ. மலையேற்றம் சென்ற நபர் (காணொளி)

மனைவியின் சவாலுக்காக ஃபிரிட்ஜ் ஃப்ரீசருடன் 112 கி.மீ. மலையேற்றம் சென்ற நபர் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டவும் இறந்த மனைவியின் நினைவாகவும் மட் ஜோன்ஸ் ஃபிரிட்ஜ் ஃப்ரீசருடன் 112 கி.மீ. மலையேற்றம் சென்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என் மனைவி விக்கியுடன் நான் செய்த பந்தயத்துக்காக இவ்வாறு செய்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனக்கு செய்யப்பட்டது. தற்போது செய்வதை என்னால் இனி செய்ய முடியாது என்றும் அப்படி செய்தால் உடலின் மற்ற பாகங்களில் பிரச்னை ஏற்படும் என்றும் என்னிடம் அறுவை சிகிச்சை நிபுணர் கூறினார்.

அந்த அறையின் ஒரு மூலையில் என் மனைவி விக்கி சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். 'இந்த முட்டாள், லாங்கோலன் சாலை முழுவதும் ஃபிரிட்ஜை சுமந்துகொண்டு நடப்பார்' எனக் கூறினாள். துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்துமஸுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு விக்கி இறந்துவிட்டார்.

ஜனவரி மாதம் இந்த சவாலை என் குழந்தைகள் எனக்கு நினைவுபடுத்தினர். 'லாங்கோலன் சாலையில் நடக்கப் போகிறீர்களா?', 'ஃபிரிட்ஜ் ஃப்ரீசரை சுமந்துகொண்டு நடக்கப் போகிறீர்களா?' எனக் கேட்டனர். நான் 'ஆமாம்' என்றேன்.

முதன்முறையாக பயிற்சி எடுத்தபோது எனக்கு மிக பயமாக இருந்தது. என் குழந்தைகள் மட்டும்தான் என்னை ஊக்கப்படுத்தினர். 'உங்களால் இதைச் செய்ய முடியும்' என்றனர். அவர்களின் தாயின் மூலமாக அவர்களுக்கு இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் விக்கி மூலமாக வந்தவர்கள். என் வாழ்க்கையின் மிகப்பெரும் உந்துசக்தி என் மனைவிதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிகவும் நேர்மறையான, எதையும் செய்துகாட்டக்கூடிய நபர் அவர்." என்றார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு