'அவள் எங்களுக்கு சகோதரி, தோழி' - வந்தாராவுக்கு யானை கொண்டு செல்லப்பட்டதால் சோகத்தில் மக்கள்

காணொளிக் குறிப்பு, வந்தாராவுக்கு யானை கொண்டு செல்லப்பட்டதால் சோகத்தில் மக்கள்
'அவள் எங்களுக்கு சகோதரி, தோழி' - வந்தாராவுக்கு யானை கொண்டு செல்லப்பட்டதால் சோகத்தில் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவின் கோலாப்பூரின் நந்தானி கிராமத்தின் மடத்தில் இருந்த மகாதேவி என்று அழைக்கப்படும் மாதுரி யானை ஜூலை 28ஆம் தேதி குஜராத்தில் உள்ள வந்தாரா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த யானையின் பிரிவால் நந்தானி கிராமத்தில் மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வந்தாராவில் மாதுரி வரவேற்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த 35 ஆண்டுகளாக, மகாதேவி யானை நந்தானியில் உள்ள ஜெயின் ஸ்வஸ்திஸ்ரீ ஜின்சென் பட்டாரக் பட்டாச்சார்யா மகாசுவாமி மடத்தில் இருந்தது.

பீட்டாவின் மனுவைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் யானையை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. மடத்திலிருந்து யானை கொண்டுசெல்லப்பட்டபோது பலரும் சோகமடைந்தனர்.

இஸ்மாயில் மஹத், கடந்த ஏழு ஆண்டுகளாக யானையின் பராமரிப்பாளராக இருந்தவர். தற்போது அதன் பிரிவைப் பற்றி பேசும்போது அவரது கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

வந்தாரா யானையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறி, நந்தானி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ரிலையன்ஸ் தயாரிப்புகளைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் நகரங்கள் மற்றும் கிராமங்களில், மக்கள் ஜியோ சேவைகளிலிருந்து வேறு சேவைக்கு மாறுவதால் அதற்கான கடைகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு வளர்ந்து வருகிறது.

பொதுமக்களின் போராட்டங்களைக் கவனத்தில் கொண்டு, வந்தாரா அதிகாரிகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மடத்தின் சுவாமியுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.

நந்தானியில் உள்ள இந்த ஜெயின் மடத்துடன் மகாராஷ்டிரா-கர்நாடக எல்லையில் உள்ள 743 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் உணர்ச்சி பூர்வமான தொடர்பை கொண்டுள்ளனர்.

மடத்தின் தலைவர் மீது அவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அந்த மடம் யானை மகாதேவியின் பாதுகாவலராக இருந்தது.

எனவே, கிராம மக்களும் கோயில் நிர்வாகமும் யானையைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து போராடினர்.

செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவு: சர்ஃபராஜ் சனாடி

படத்தொகுப்பு: அர்விந்த் பரேகர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு