வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ காரணமான மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, மாணவர்கள் போராட்டத்தினால் வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தது
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ காரணமான மாணவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

வங்கதேச மாணவர்கள் ஒரு ஆட்சியையே கவிழ்த்து இருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் விலை கொடுக்க வேண்டியிருந்தது. நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா தரவுகள் கூறுகிறது. இதில் ஏராளமானோர் மாணவர்கள்.

வங்கதேசத்தை சேர்ந்த மிர் மஹ்ஃபூஸ் உர் ரஹ்மான் என்ற இளைஞர் ஜூலை 18 அன்று மதியம் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர் நண்பர்களுடன் டாக்காவில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்.

சமூக வலைதளங்களில் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மஹ்ஃபூஸ் அதுவரை நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்றதில்லை. ஜூலை 18 அன்று தான் முதன்முதலில் போராட்டத்துக்கு சென்றார். மிரின் குடும்பத்தினர் அவரை 'முக்தோ' என்று செல்லமாக அழைத்தனர்.

போராட்டத்துக்கு சென்ற அந்த மதியத்திற்கு பிறகு, முக்தோ தனது வீட்டையும் குடும்பத்தையும் மீண்டும் பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது வீடியோ பதிவு ஒன்று அன்று இணையத்தில் வைரலானது.

வீடியோ பதிவில் அவர் தண்ணீர் பாட்டில்களை ஒரு பையில் கட்டிக்கொண்டு தெருவில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் சென்று தண்ணீர் வேண்டுமா? என்று திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் நடந்து சென்ற அந்த தெருவில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

சில நிமிடங்களில், முக்தோ தலையில் சுடப்பட்டு இறந்தார். 25 வயதான முக்தோ முதுகலை படித்துக் கொண்டிருந்தார். படிப்புடன் பகுதி நேர வேலையையும் செய்து வந்தார். இதன் மூலம் மாதந்தோறும் ஓரளவு வருமானம் கிடைத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது சகோதரர் மிர் மஹ்மூத் உர் ரஹ்மான் என்ற டிப்டோ (30 வயது) கூறுகையில், "முக்தோ அரசு வேலைக்கு காத்திருந்த இளைஞர் அல்ல. ஆனால், வருங்கால சந்ததியினருக்கு நீதி கிடைக்க போராட்டத்தில் பங்கேற்க சென்றவர்" என்றார்.

வன்முறைப் போராட்டங்களும், அதிகரித்த பொது அதிருப்தியும் வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக நேரிட்டது. அதன் பிறகு வங்கதேசத்தில் இருந்து தப்பி ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடம் தேடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தற்போது புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

நாட்டை வழிநடத்துவது யார்? சாலைகள், பொது இடங்களில் போலீசார் இல்லாத நிலையில் சட்டம் ஒழுங்கு எப்படி பராமரிக்கப்படும்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு மாணவர் தலைவர்கள் விடை காண முயல்கின்றனர்.

யார் இந்த மாணவர் தலைவர்கள்?

வங்கதேசத்துடன் இந்தியா நட்புறவு கொண்டுள்ளது. இந்த உறவுக்கு ஒரு வரலாற்று பின்னணி உண்டு. இரு நாடுகளும் 4,000 கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியாவுடனான உறவுகளைப் பற்றி வங்கதேச மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? சிலர் இந்தியாவின் பங்கைக் கேள்வி கேட்பது ஏன்?

டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நுஸ்ரத் தபஸ்ஸூமை சந்தித்தோம்.

போராட்டங்களுக்கு முன்பு, அவர் கல்லூரியில் பொது மாணவர் தலைவராக இருந்தார். ஆனால் இன்று முழு வங்கதேசமும் அவரை அறிந்திருக்கிறது.

சில மாணவர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்புகின்றனர். சில மாணவர்கள் அவரை தங்கள் பெற்றோருடன் சந்திக்க விரும்பினர்.

இடைக்கால அரசாங்கம் வந்த பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டேன்.

அவர் கூறுகையில், "இப்போது எனக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது, அது என் நாட்டை சுதந்திரமாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும்."

நுஸ்ரத் கூறுகையில், "என்னைப் பற்றிய எனது கனவுகளை நான் தள்ளி வைத்துவிட்டேன். எனது நாட்டிற்கு தீவிரமான மாற்றம் தேவை. இந்த மாற்றம் ஒவ்வொரு துறையிலும் கொண்டு வரப்பட வேண்டும்." என்கிறார்.

ஆனால், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நாட்டு மக்களைப் பொறுத்தே அமையும், மக்கள் ஆதரவு அளித்தால் விரைவில் இந்தப் பணியை முடிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நுஸ்ரத் அரசியல் அறிவியலில் (Political Science) முதுகலை படித்து வருகிறார். அவரது நண்பர்கள் சிலர் இடைக்கால அரசில் பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர்.

வங்கதேசம், மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனா

தற்போதைய நிலை என்ன?

தற்போது வங்கதேசத்தில் மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்காதவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கதேச ஊடகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.

பேராசிரியர் ஜோபைடா கூறுகையில், "மற்ற பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பேராசிரியர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மாணவர் இயக்கத்தை ஆதரிக்காததற்காக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இப்போது அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது."

ஆனால், நுஸ்ரத்தின் கூற்றுப்படி, "இப்போது நடக்கும் எதிர்ப்பு, கடந்த 16 ஆண்டுகளாக வங்கதேசத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிரானது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே கோபம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"சமூகம் படிப்படியாக மாறும், மேம்படும் என்று நான் நினைக்கிறேன். மாணவர்கள் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள், நிலைமை கட்டுக்குள் வரும்" என்று அவர் மேலும் கூறினார்.

வங்கதேசத்தின் சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக இந்து சமூகத்தினர் பெரும்பாலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள். இருப்பினும், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிரான போராட்டங்களில் வங்கதேசத்தின் இந்து சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றதையும் நாங்கள் பார்த்தோம்.

சஜ்ஜல் குமார் பிரமானிக் கணக்கியல் மற்றும் தகவல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

மேலும் விவரங்கள் காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)