டெல்லியின் ஆறாவது தோல்வியைத் தவிர்த்த 'அந்த தருணம்'; பேட்ஸ்மேன்கள் ஏன் இப்படி சறுக்குகிறார்கள்?

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

பிரசுரிக்கப்பட்டது

டேவிட் வார்னரின் பொறுப்பான பேட்டிங், பந்துவீச்சாளர்களின் கடும் முயற்சி ஆகியவற்றால் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்.டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியது .

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி முதலில் ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த பின் இது குறித்து பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் வார்னர், `அடுத்த 5 நாட்களுக்குள் பலம் வாய்ந்த அணியாக திரும்ப வேண்டும். தற்போது எதுவும் சரியாக அமையவில்லை. அதே நேரத்தில் ஒருசில அணிகள் 0-5க்கு என்ற நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளன. அதேபோல், நாங்களும் மீண்டு வருவோம்` என்று குறிப்பிட்டார்.

நேற்றைய ஆட்டத்தில் கடுமையாக போராடி மீண்டு வந்துள்ள டெல்லி அணி, நடப்பு தொடரில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 127 ரன்களுக்கு சுருண்டது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த 5 போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது புள்ளிக்கணக்கைத் தொடங்கியது. 2 புள்ளிகளை டெல்லி கேபிடல்ஸ் அணி பெற்றாலும், பட்டியலில் கடைசி இடத்தில்தான் இருக்கிறது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்த வெற்றி, வறண்டுகிடந்த பூமி, மழையைப் பார்த்தது போன்ற மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் வீரர்களுக்கு ஏற்படுத்தும். இருப்பினும், ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்வது எளிதான காரியமல்ல, அடுத்துவரும் 8 போட்டிகளில் குறைந்தபட்சம் 7 வெற்றிகளை டெல்லி கேபிடல்ஸ் பெறுவது அவசியமாகும்.

டெல்லிக்கு புது தெம்பு ஊட்டிய இஷாந்த் ஷர்மா

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். இஷாந்த் ஷர்மா, ஆன்ரிச் நார்ட்ஜே, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோரின் கடும் உழைப்புதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 127 ரன்களில் சுருட்ட உதவியது.

டெல்லி அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் குழுவாகச் செயல்பட்டது முக்கியக் காரணமாகும். இல்லாவிட்டால், 127 ரன்களுக்குள் கொல்லக்தா நைட் ரைடர்ஸ் அணியை சுருட்டியிருக்க முடியாது.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குறிப்பாக 2 ஆண்டுகளுக்குப்பின் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா, அதிவேகமாகப் பந்துவீசிய ஆன்ர்ச் நார்ட்ஜே, நடுப்பகுதியில் நெருக்கடி அளித்த சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பணி வெற்றிக்கு உதவின.

அதிலும் பவர்ப்ளே ஓவருக்குள் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா, வெங்கடேஷ், லிட்டன் தாஸ் ஆகிய 3 பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றி டெல்லி அளித்த நெருக்கடியில் இருந்து கடைசி வரை கொல்கத்தா அணியால் மீள முடியவில்லை.

2021ம் ஆண்டுக்குப்பின் ஐ.பி.எல். தொடரில் முதல்முறையாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பின்னர் பேசிய அவர், என் வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். இதைப்பற்றி மட்டுமே நினைத்துகொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் பந்துவீச்சில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போதில் இருந்து இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறேன்` என்று குறிப்பிட்டார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர், ஆன்ரிச் நார்ட்ஜேயின் பந்துகள் நேற்று மணிக்கு 150கி.மீ வேகத்தில் எகிறியதால், கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாட கடும் சிரமப்பட்டனர். 4 ஓவர்கள் வீசிய ஆன்ரிச் 16 டாட் பந்துகளுடன் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து சொதப்பும் பேட்ஸ்மேன்கள்

இது தவிர வழக்கம்போல் டேவிட் வார்னர்(57), தனிஒருவனாக போராடி இந்த சீசனில் 4வது அரைசதத்தை பதிவு செய்து ரன்களைச் சேர்த்ததும் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து 127 ரன்களில் கொல்கத்தா அணியை சுருட்டிக் கொடுத்தனர். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களின் மந்தமான ஆட்டத்தால், கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் கடைசி ஓவரில்தான் வெற்றி கிடைத்தது.

இந்த குறைந்த ஸ்கோரைக்கூட டெல்லி கேபிடல்ஸ் அணியால் எளிதாக சேஸிங் செய்ய முடியாமல் கடைசி ஓவர்வரை இழுத்துச் சென்று 4 பந்துகள் இருக்கையில் அக்ஸர் படேல் ஆட்டத்தை முடித்தார்.

எளிதாக எட்ட வேண்டிய இந்த ஸ்கோரை டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்று, போராடி வெல்வதற்கு காரணம் என்ன என்பதை அந்த அணி சுயபரிசோதனை செய்வது அவசியமாகும்.

ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிக்கு 30 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 6 விக்கெட்டுகள் என நல்ல நிலையில்தான் அணி இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நெருக்கடி நிலைக்கு டெல்லி கேபிடல்ஸ் வந்துவிட்டது.

ராணா வீசிய 19-வது ஓவரில் அக்ஸர் படேலுக்கான ஸ்டெம்பிங்கை விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் தவறவிடாமல் இருந்திருந்தால் நிச்சயம் டெல்லியின் தொடர் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், ANI

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தாலும், இன்னும் அந்த அணியின் பேட்டிங் வரிசை ஸ்திரமாகவில்லை, பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்பதையே இந்த ஆட்டத்தின் முடிவு உணர்த்துகிறது. நடுவரிசையில் மார்ஷ், பில் சால்ட், ப்ரித்வி ஷா, மணிஷ் பாண்டே ஆகியோர் இன்னும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் டேவிட் வார்னர் மட்டுமே சீராக ஸ்கோர் செய்துள்ளார். பேட்டிங்கில் மற்ற வீரர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாததே அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக இருந்து வருகிறது.

டெல்லி அணியின் பேட்டிங் தொடர்பான அதிருப்தியை அந்த அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலியும் நேற்று வெளிப்படுத்தினார், போட்டிக்கு பின்பு பேசிய அவர், இதை எனது முதல் டெஸ்ட் ஆட்டம் போன்று நினைக்கிறேன். இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசியுள்ளோம். ஆனால், பிரச்னை என்பது பேட்டிங்கில் இருக்கிறது. எப்படி இன்னும் சிறப்பாக செய்வது என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும்.` என்றார்.

ஸ்பின்னர்ஸை வைத்து போராடிய கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்களால் முடிந்த அளவு குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்ய முயன்றது. இதற்காக நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரேன், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்குல் ராய் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. இவர்களைப் பயன்படுத்தியதற்கும் ஓரளவு பலன்கிடைத்தது. இன்னும் கூடுதலாக 20 ரன்களை கொல்கத்தா சேர்த்திருந்தால் நிச்சயம் டெல்லியின் தோல்வி உறுதியாகியிருக்கும்.

சென்றார்.

பிரித்வி ஷா கழற்றிவிடப்படுகிறாரா?

பிரித்வி ஷாவின் ஐ.பி.எல். பயணம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. ப்ரித்வி ஷாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் 6 போட்டிகளாகத் தொடர்கிறது.

சன்சைரஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி ஒரு பேட்டியில் கூறுகையில் “ டெல்லி கேபிடல்ஸ் போதுமான வாய்ப்புகளை ப்ரித்வி ஷாவுக்கு வழங்கிவிட்டது. இனிமேலும் வாய்ப்புகளை வழங்குவதை விடுத்து, அவருக்குப் பதிலாக ஷான் மார்ஷை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். ஆதலால் அடுத்த போட்டியில் ப்ரித்வி ஷா நிலை என்னவென்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கடந்த 6 போட்டிகளில் பிரித்வி ஷா-வார்னர் ஜோடி குறைந்தபட்சம் பவர்ப்ளே ஓவர்கள்வரைகூட தாக்குப்பிடிக்கவில்லை. பிரித்வி ஷாவின் தவறான ஷாட்களாலும்,மோசமான ஃபார்ம் காரணமாகவும் விரைவாகவே ஆட்டமிழந்துவிடுகிறார். இந்த ஜோடி கடந்த 5 போட்டிகளில் 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

ஏமாற்றம் அளித்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்

கொல்கத்தா அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை நேற்றை ஆட்டத்தில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் நேற்றைய ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ராணா(4), லிட்டன் தாஸ்(4), மன்தீப் சிங்(12), ரிங்கு சிங்(6), சுனில் நரேன்(4) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய ஜேஸன் ராய் தனது வழக்கமான அதிரடியில் 43 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் ஆன்ட்ரே ரஸ்ஸலின்(38நாட்அவுட்) அதிரடி ஆட்டம் ஸ்கோரை உயர்த்த உதவியது. அதிலும் முகேஷ் குமாரின் கடைசி ஓவரில் ரஸ்ஸல் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு தூணாக அமைந்தது. ரஸ்ஸலும் சொதப்பி இருந்தால், கொல்கத்தா அணி 110 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். மற்ற வகையில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.

டெல்லி கேபிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், ANI

‘தனி ஒருவன்’ வார்னர்

டெல்லி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு காரணமோ அதற்கு ஈடாக கேப்டன் டேவிட் வார்னரின் பங்களிப்பும் முக்கியமாகும். கடந்த 5 போட்டிகளிலும் டெல்லி அணி தோற்றபோதிலும், தனிஒருவனாக களத்தில் நின்று வார்னர் ஸ்கோர் செய்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் வார்னர் அடித்த 4வது அரைசதமாகும்.

டெல்லி கேப்டல்ஸ் பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் சீராக விக்கெட்டுகளை இழந்தாலும், வார்னர் மட்டும் நங்கூரமிட்டு ஆடினார். அதிலும் சுனில் நரேன் பந்துவீச்சில் வார்னர் 4 பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை வேகப்படுத்தினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தது, கொல்கத்தா அணிக்கு சற்று நம்பிக்கை ஏற்படுத்தியது, டெல்லி கேபிடல்ஸுக்கு பதற்றத்தை அதிகப்படுத்தியது. வார்னர் களத்தில் இருக்கும் வரை டெல்லி வெற்றி உறுதி என ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். ஆனால், வார்னர் ஆட்டமிழந்து சென்றபின் ஆட்டம் பரபரப்பை எட்டியது.

எனினும் அக்ஸர் படேல் 19 ரன்களுடன்ஆட்டமிழக்காமல் களத்தில் கடைசி வரை இருந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: