இந்தியா - பாக்., சண்டை நிறுத்தம்: நடந்தது என்ன? முழு விவரம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வந்த சூழலில், தற்போது இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இது தொடர்பாக முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டார்.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த, இரவு நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார், இதனை உறுதிப்படுத்தினார்.
எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்ட இஷாக் தார், பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது என குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தியா தரப்பில் செய்தியாளர்களிடம் பேசிய, வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இரு நாடுகளும் தரை, வான் மற்றும் கடல் பரப்பில் இருந்து மேற்கொள்ளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக உடன்பாடு எட்டப்பட்டது என்றார்.
மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், அனைத்து வடிவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடரும் என்றும் ஜெய் சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சண்டை நிறுத்தம் குறித்து பதிவிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, கடந்த 48 மணி நேரத்துக்கும் மேலாக, தானும் துணை அதிபர் ஜேடி வான்ஸும் பிரதமர் நரேந்திர மோதி, ஷெபாஸ் ஷெரிப் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர்கள் மோதி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம் மற்றும் ராஜதந்திரத்தை நாங்கள் பாராட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சுமத்திய இந்தியா, மே5 மற்றும்6ஆம் தேதி இடைப்பட்ட இரவு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் இருந்து, இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
பதிலுக்கு பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடத்திய தாக்குதலில் இந்தியாவில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக இந்திய அரசு கூறுகிறது. இரு தரப்பும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன.
இதனால் இரு நாடுகள் இடையே தொடர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



