You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரிய சர்வாதிகாரி கிம் பற்றிய மர்மங்கள் - விடை தெரியாத 5 கேள்விகள்
வட கொரியாவின் உச்ச தலைவர் கிம் ஜாங் உன் 40 வயதை எட்டியுள்ளார். ஆனால், அது உண்மையா?
அவரது பிறந்தநாள் ஜனவரி 8 என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அவரது சரியான பிறந்தநாள் பற்றி ஒருமித்த கருத்து இல்லை.
கிம் பற்றிய மர்மம் இது மட்டுமல்ல. 2011-ல் அதிகாரத்துக்கு வந்த வட கொரிய சர்வாதிகாரி பற்றிய விடை தெரியாத ஐந்து மர்மமான கேள்விகள் இங்கே உள்ளன.
1. கிம் ஜாங் உன் எப்போது பிறந்தார்?
உண்மையில் தெரியவில்லை.
"அவர் பிறந்த ஆண்டு 1982, 1983 அல்லது 1984 என பல சர்ச்சைகள் உள்ளன," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரசியல் பாடப் ஆசிரியர் டாக்டர் எட்வர்ட் ஹோவெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஜனவரி 8 என்று கூறப்படும் அவரது பிறந்தநாள் கம்யூனிச நாட்டில் ஒரு வழக்கமான வேலை நாளாகும். அதே நேரத்தில் அவரது தந்தை கிம் ஜாங் இலின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 16 ஆம் தேதி "பிரகாசமான நட்சத்திரத்தின் நாள்" என்று கொண்டாடப்படுகிறது.
அவரது தாத்தா கிம் இல் சூங் -ன் பிறந்த நாளான ஏப்ரல் 15-ம் தேதி "சூரிய நாள்" என்று கொண்டாடப்படுகிறது.
எவ்வாறிருந்தாலும், அவரது குடும்பத்தின் பல விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன.
வட கொரிய நிபுணர் டாக்டர் ஹோவெல், கிம் ஜாங் உனுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் பெயர் கிம் ஜாங் நாம் என்கிறார். அவர் 2017 -ல் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
கிம் ஜாங் உனின் தந்தை கிம் ஜாங் இலுக்கு குறைந்தது நான்கு வாழ்க்கை துணைகள் இருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் அவரது உறவுகள் பெரும்பாலும் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தன.
அவரது தாய், கோ யங் ஹூய், ஜப்பானில் பிறந்ததாகவும், 1960களில் நடனம் ஆடுபவராக வேலை செய்ய வட கொரியாவுக்கு வந்ததாகவும் கருதப்படுகிறது.
அவர் கிம் ஜாங் இலின் அனைத்து துணைகளிலும் மிகவும் பிடித்தமானவர் என்று கூறப்பட்டது.
1973ல் ஜப்பானுக்கு சென்றபோது கோ யங் ஹூய் எடுத்த புகைப்படங்கள் 2018ல் கண்டுபிடிக்கப்பட்டன.
கோ ஹூய் நடனக் கலைஞராக இருந்ததாலும் ஜப்பானுடன் தொடர்புடைய குடும்ப பின்னணி இருந்ததாலும் வட கொரியா அவரைப் பற்றி அதிகம் விளம்பரம் செய்யவில்லை என்று கொரியா டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
"இரண்டாம் உலகப் போரின் போது கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்திருந்த ஜப்பானில் பிறந்தவர் பொதுவாக சமூகத்தில் குறைந்த நிலையில் இருப்பார். ஆனால் கிம் ஜாங் இலை திருமணம் செய்ததால், அவருக்கு ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தது," என்று டாக்டர் ஹோவெல் கூறுகிறார்.
மற்ற 4 மர்மங்கள் குறித்த விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)