மனோபாலா: உதவி இயக்குநர் முதல் குணசித்திர நடிகர் வரை - தமிழ் திரையுலகில் சாதித்தது என்ன?
இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.
1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார்.
நாகர்கோவில் மாவட்டம் மருங்கூர் எனும் கிராமத்தில் 1956-ல் பிறந்தவர் மனோபாலா. பாலச்சந்தர் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், 1970களில் இயக்குநராகும் கனவோடு சினிமாத்துறையில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் பரிந்துரையில், இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநரானார். பாலச்சந்தர், மனோபாலாவாக மாறியது அப்போதுதான்.
‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோதே, அவரது மெலிந்த தேகமும், நகைச்சுவை நிறைந்த உடல்மொழியும் இயக்குநர் பாரதிராஜாவை ஈர்க்க, முதல் படத்திலேயே சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அதன்பிறகு, கல்லுக்குள் ஈரம், கோபுரங்கள் சாய்வதில்லை, டிக் டிக் டிக் என எக்கச்சக்கமான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், முன்னணி நடிகர்களின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்குமளவிற்கு தன்னை தகவமைத்துக் கொண்டார். அதனால், சுமார் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் அவரால் நடிக்க முடிந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



