சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி, எகிப்து படையினர் சிறை பிடிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெய்நப் முகமது சலி மற்றும் இம்மானுவேல் இகுன்ஸா
- பதவி, பிபிசி நியூஸ்
- இருந்து, கார்டோம் & நைரோபி
- பிரசுரிக்கப்பட்டது
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே எழுந்த அதிகாரப் போட்டி பெரும் மோதலாக வெடித்துள்ளது. இதில், இதில் இந்தியர் ஒருவர் உட்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தைப் பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளன.
தலைநகரில் மட்டும் 17 பொதுமக்கள் உள்பட 55 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்பலாம் என்ற முன்மொழிவே இந்த மோதலுக்குக் காரணம்.
இரவு முழுவதும் சண்டை நீடித்த நிலையில், கார்டோம் நகரில் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ராணுவம், அதற்கு எதிராக போரிடும் துரித உதவிப் படைகள்(Rapid Support Forces) ஆகிய இரு தரப்புமே கூறுகின்றன.
தலைநகருக்கு வெளியேயும் விரியும் சண்டை
தலைநகர் கார்டோமிற்கு அருகில் உள்ள ஒம்துர்மான், பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கடும் சண்டை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. செங்கடல் துறைமுகமான போர்ட் சூடானிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
துணை ராணுவப் படைத் தளங்கள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவில் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த விமானப்படை, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ராணுவம் - துணை ராணுவப்படைகள் சண்டையால் பீதியடைந்துள்ள கார்டோம் நகரவாசிகள் பிபிசியிடம் பேசுகையில், அருகில் உள்ள வீட்டின் மீதே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாக தெரிவித்தனர்.
சூடான் முழுவதும் ஆங்காங்கே நீடிக்கும் இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. ராணுவத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறும் மருத்துவர்கள் குழு, பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்தத்தில் 595 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அந்த குழு கூறியுள்ளது.
காப்கபியா தளத்தில் ராணுவம் - துணை ராணுவப் படைகள் இடையே மூண்ட மோதலில் ஐ.நா. துணை அமைப்பான உலக உணவுத் திட்டப் பணியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள், சூடானில் வறுமையால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அளிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியர் ஒருவர் பலி
சூடானில் ராணுவம் - துணை ராணுவப் படைகள் இடையே வெடித்துள்ள மோதலில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார். சூடானில் டால் குரூப் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியர் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது குடும்பத்துடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சண்டையை நிறுத்த ஐ.நா., உலக நாடுகள் வலியுறுத்தல்
சூடானில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ ஜெனரல்களே ஆட்சி நடத்தி வந்தனர்.
ராணுவ ஆட்சியாளரான ஜெனரல் அப்டெல் ஃபட்டா அல்-புர்ஹானுக்கு விசுவாசமான ராணுவப் படைகளுக்கும், துணைத் தலைவராக செயல்பட்ட முகமது ஹம்தான் டெகலோ ஆதரவு துணை ராணுவப் படைகளுக்கும் இடையே தற்போது சண்டை நடக்கிறது.
அனைத்து ராணுவத் தளங்களையும் கைப்பற்றும் வரை சண்டை நீடிக்கும் என்று ஹெமிடிட் என்று அழைக்கப்படும் முகமது ஹம்தான் டெகலோ உறுதிபடக் கூறியுள்ளார்.
ராணுவத் தரப்போ, துரித உதவிப் படைகள் என்ற துணை ராணுவப்படை முற்றிலுமாக கலைக்கப்படும் வரை பேச்சுவார்த்தையே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சண்டையை உடனே நிறுத்துமாறு இரு தரப்புகளையும் கேட்டுக் கொண்டுள்ளன. இரு தரப்பு தலைவர்களையும் தொடர்பு கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
எகிப்து ராணுவத்தினரை சிறைபிடித்த துணை ராணுவப் படை
அதிபர் மாளிகை, ராணுவ தளபதியின் இல்லம், 3 விமான நிலையங்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் புர்ஹான் அளித்துள்ள நேர்காணலில் இதனை மறுத்துள்ளார்.
அரசுத் தொலைக்காட்சி நிலையத்திலும் சண்டை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அலுவலகம் தற்போது துணை ராணுவப் படை கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக சண்டையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, கார்டோம் நகருக்குத் தெற்கே தங்களது ஒரு தளம் தாக்குதலுக்கு இலக்கானதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்திருந்தன. துணை ராணுவப் படைகள் மீது ராணுவம் விமான தாக்குதல் நடத்துவதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதன் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
துணை ராணுவப் படையினர் ராணுவ முகாம்களை தாக்கியதோடு, ராணுவ தலைமையகத்தையும் கைப்பற்ற முயன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
"ஆங்காங்கே சண்டை நீடிக்கிறது. நாட்டைப் பாதுகாக்கும் கடமையை ராணுவத்தினர் ஆற்றி வருகின்றனர்" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாபில் அப்துல்லா கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூடானில் வடக்கேயுள்ள மெரோவெ நகரிலும் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக நேரில் கண்டவர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மெரோவெ நகரில் எகிப்திய துருப்புகள் சரணடையும் வீடியோவை துணை ராணுவப் படைகள் வெளியிட்டுள்ளன. சூடான் ராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற தனது படை வீரர்கள், தற்போதைய புதிய சூழலில் தங்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ள சூடான் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
சூடானில் திடீர் சண்டை ஏன்?
2021-ம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ தளபதிகள் ஒருங்கிணைந்து இறையாண்மை கவுன்சில் என்ற பெயரில் குழு அமைத்து ஆட்சி நடத்துகின்றனர். அதன் தலைவராக ஜெனரல் புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெடியும் இருக்கின்றனர்.
சூடானில் மீண்டும் ஜனநாயக ஆட்சிக்குத் திரும்புவதற்கான முன்மொழிவுப்படி, ராணுவத்துடன் துணை ராணுவப் படைகளை எப்போது இணைப்பது என்பதில்தான் மோதல் வெடித்துள்ளது. இதனை 2 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் என்று ராணுவமும், 10 ஆண்டுகள் தாமதிக்க வேண்டும் என்று துணை ராணுவப் படைகளும் கூறுகின்றன.
2003-ம் ஆண்டு டார்புர் நகரில் தொடங்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான சண்டையில் ஹெமிடிக்கு பிரதான பங்கு உண்டு.
இருதரப்பும் சண்டையைக் கைவிட்டு ஜனநாயக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று மேற்கத்திய வல்லரசுகளும், ஆப்ரிக்க பிராந்திய தலைவர்களும் வலியுறுத்தியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரச்னை தீர்ந்து போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ராணுவமும் ஜனநாயகத் தலைவர்களும் கூட்டாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்ட 2 ஆண்டு கால ஆட்சியை 2021-ம் ஆண்டு ராணுவப் புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. சூடானை நீண்ட காலம் ஆட்சிபுரிந்த சர்வாதிகாரி அதிபர் ஒமர் அல் பஷிர் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு அவ்வாறான உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
2021 புரட்சிக்குப் பின்னர் தலைநகர் கார்டாமில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது வாடிக்கையாக மாறிவிட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























