You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குலசேகரபட்டினத்தில் இருந்து எந்த வகை ராக்கெட்டுகளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது?
குலசேகரப்பட்டினம்... இனி இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக மாறப்போகும் இடம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
இஸ்ரோவுக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்துதான் இதுவரை இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் தன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தற்போது அடிக்கல் நாட்டு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது.
இதையடுத்து, புதன்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ரோகிணி RH – 200 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
75.24 கி.மீ உயரம் வரை சென்று காற்றின் திசை, வேகம் உள்ளிட்டவை, இந்த சிறிய ரக ராக்கெட்டின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பெறப்பட்ட தரவுகள் இனி குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கு உதவக்கூடியவை. குறிப்பிட்ட உயரம் வரை சென்றபின் இந்த ராக்கெட் கடலில் விழுந்தது.
குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்காவைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அன்றே தேர்வான தமிழ்நாடு
“இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான இளங்கோவன்.
"இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்
அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது என இளங்கோவன் தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?
நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ தூத்துக்குடியில் உள்ள குலசேகரபட்டினத்தை தேர்ந்தெடுத்தது குறித்துப் பேசும்போது அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக விஞ்ஞானி இளங்கோவன் தெரிவித்தார்.
பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான நொடிக்கு 0.5 கிமீ கூடுதலாக கிடைக்கும் என இளங்கோவன் குறுகிறார்
இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்கிறார் இளங்கோவன்
இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்துகூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன. ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது," என விஞ்ஞானி இளங்கோவன் குறிப்பிடுகிறார்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன. அதாவது கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது.
இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்."
ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் இளங்கோவன். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது. மின்னல், புயல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும்.
"தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம், இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்திருப்பதாக முன்னாள் விஞ்சானி இளங்கோவம் தெரிவித்தார்.
பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள குலசேகரபட்டினம்
“ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே,. குலசேகரபட்டினத்தில் இருந்து ஏவும்போது ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் எரிபொருளும் அதிகளவில் மிச்சமாகும்.
இதுதவிர, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
ஆனால், தற்போது குலசேகப்பட்டினம் செயல்பாட்டிற்கு வந்த இந்த சிரமங்கள் குறைந்துவிடும் மூத்த விஞ்ஞானியான நெல்லை சு.முத்து கூறுகிறார்.
குலசேகரபட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து எந்த வகை ராக்கெட்டுகள் ஏவப்படும்?
“குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைவன் மூலம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். குலசேகரபட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என விஞ்ஞானி முத்து தெரிவிக்கிறார்
குலசேகரபட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்," என்கிறார் அவர்.
இதன்மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தக ரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும் என்றும் முத்து குறிப்பிடுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)