இரும்பு நுரையீரல்: கோடிக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றிய ஒரு மகத்தான கண்டுபிடிப்பு
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், போலியோ தொற்று உலகம் முழுவதும் ஏற்பட்டது. அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் அது பரவியது.
1955 ஆம் ஆண்டு வரை அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரை இந்த இரும்பு நுரையீரல்தான் கடுமையான நோய்க்கான சிகிச்சையில் ஒரே முக்கிய வழியாக இருந்தது. அது அப்போது அதிநவீன தொழில்நுட்பமாகக் கருதப்பட்டது.
இரும்பு நுரையீரல் என்பது ஒரு ராட்சத, காற்று புகாத உலோக உருளை. இது 295 கிலோ வரை எடை கொண்டது. அது ஒரு பெல்லோஸ் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். போலியோ நோயாளிகள் கழுத்து வரை இதற்குள்ளே செல்ல வேண்டும்.
ஒரு பம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் பெல்லோஸ் தொடர்ந்து பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் காற்றைச் சுழலச்செய்யும். நோயாளிகளின் நுரையீரலுக்குள் காற்றைத் தள்ளுவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவும்.
செயற்கை சுவாசத்தின் இந்த வடிவம் எக்ஸ்டெர்னல் நெகட்டிவ் பிரஷர் வெண்டிலேஷன் (EPPV) என்று அழைக்கப்படுகிறது.
சில நோயாளிகள் இரும்பு நுரையீரல் எனப்படும் இந்த உருளை போன்ற சாதனைத்தில் சில வாரங்கள் அல்லது மாதங்களைக் கழித்தனர். நுரையீரலின் வலிமையை மீட்டெடுத்து மீண்டும் சுதந்திரமாக சுவாசிக்க முடியும் வரையில் அவர்கள் இதைச் செய்தனர்.
பெக்டோரல் தசைகள் நிரந்தரமாக செயலிழந்த நோயாளிகளுக்கு இந்த இரும்பு நுரையீரல் உயிர்வாழ்வதற்கான திறவுகோலாக இருந்தது.
இது ஒரு உயிர்காக்கும் திருப்புமுனையாக இருந்தாலும் கூட இந்த இரும்பு நுரையீரல் நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்குநர்களுக்கும் பல வரம்புகளைக் கொண்டிருந்தது.
பல நோயாளிகள் இந்த சாதனத்திற்குள் சிக்கியிருப்பதாக உணர்ந்தனர். மேலும் ஒரு நோயாளியின் உடலை அணுகுவதும் இரும்பு நுரையீரலுக்குள் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதும் மருத்துவர்களுக்கு கடினமாக இருந்தது. இருப்பினும் இந்தக்கண்டுபிடிப்பு பல எதிர்கால மருத்துவ முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைத்தது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



