'நான் உயிர் பிழைக்க என் மகனே காரணம்': வெனிசுவேலாவில் தாய், மகன் மீட்கப்பட்ட உணர்ச்சிமிகு தருணம்

    • எழுதியவர், ஆலிஸ் கட்டி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வெனிசுலாவில் இடிந்து விழுந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து, 18 நாட்களேயான பச்சிளம் குழந்தையுடன் மீட்கப்பட்ட தாய் ஒருவர், தனது மகன் தன்னை எவ்வாறு உயிரோடு வைத்திருக்க உதவினார் என்பது குறித்து பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

டயானா பாட்டினோ என்ற அந்தத் தாய் கூறுகையில், தனது மகன் ஜுவான் டேவிட் தனக்கு "விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருப்பதற்கான உந்துதலைக் கொடுத்தான்" என்றார்.

"அவன் உயிரோடு இருக்கும் வரை, நானும் உயிரோடு இருக்க வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவன் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்த, அவ்வப்போது அவனது மூக்கைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த மீட்புப் பணியின் வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில், ஜுவான் டேவிட் வெனிசுவேலாவின் நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளான். கடந்த புதன்கிழமை அந்நாட்டை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியதோடு, குறைந்தது 1,450 பேரின் உயிரையும் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெனிசுவேலாவின் வரலாற்றிலேயே "மிகவும் கொடூரமான இயற்கை பேரழிவு" என்று அந்நாட்டின் இடைக்கால அதிபரால் விவரிக்கப்பட்ட இந்த நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.

தேடுதல் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தபோதிலும், இடிபாடுகளிலிருந்து மேலும் எவரேனும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்பதற்கான நம்பிக்கைகள் மங்கி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை வெனிசுவேலா தலைநகர் கராகஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்தபடி டயானா, இடிபாடுகளுக்கு அடியில் தான் கழித்த அந்த பயங்கரமான மணிநேரங்கள் குறித்தும், தனது கைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி தங்களைக் காப்பாற்ற வேண்டிப் பிரார்த்தனை செய்தது குறித்தும் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

வடக்கு கடலோரப் பகுதியான லா குவைராவில் உள்ள தனது எட்டாவது மாடி குடியிருப்பில் அவர் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போதுதான் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. அவர் உடனடியாக தன் மகனைத் தூக்கி அணைத்துக்கொண்டார்; இது "ஒரு சிறிய நடுக்கமாகத்தான் இருக்கும்" என்று நினைத்தார்.

"நான் காற்றில் தூக்கி வீசப்படுவது போல் உணர்ந்தேன். அதன்பிறகு, தண்ணீருக்குள்ளும் மண்ணுக்குள்ளும் மூழ்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது; பின்னர் ஒரு குழிக்குள் விழுந்து அங்கேயே மாட்டிக்கொண்டேன். காற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையிலும், என் குழந்தையை நான் எப்படி நழுவவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. நான் அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.

தான் உரக்க கத்தியபோதிலும், யாரும் தன் குரலைக் கேட்க முடியாது என்பதை விரைவில் உணர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"என்னுடைய ஆற்றலை வீணாக்கக் கூடாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்; அருகில் மக்களின் குரல்களோ அல்லது காலடிச் சத்தங்களோ கேட்கும்போது, அதாவது தேவைப்படும்போது மட்டுமே சத்தமிட வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.

"எப்படி அவ்வளவு அமைதியாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை; ஏனெனில் என் இடது கால் கான்கிரீட் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்தது. என்னால் நகர முடியவில்லை. என் நெற்றியின் ஒரு பகுதி பாறை ஒன்றின் மீது அழுத்திக் கொண்டிருந்தது."

தனக்கு அடியில் ஒரு பைபிள் இருப்பதை உணர்ந்தபோது தனக்குள் நம்பிக்கை பிறந்ததாக டயானா கூறினார்.

"அங்கிருந்துதான் எனது உயிர் பிழைப்பதற்கான போராட்டம் தொடங்கியது," என்றார் அவர்.

இடிபாடுகளின் இருளுக்கு நடுவே, "நிலவைப் போலத் தெரிந்த ஒரு சிறிய ஒளிக்கீற்றை" அவரால் பார்க்க முடிந்தது.

தனது சகோதரன் தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்ட பிறகே தான் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

"இதுதான் எனக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். என் தொண்டை கிழிய... என் முழு பலத்தையும் திரட்டி 'நான் இங்கே இருக்கிறேன்' என்று அலறினேன். அதற்கு அவர், 'உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன்; உன்னை வெளியே எடுக்கும் வரை நான் இங்கிருந்து செல்லமாட்டேன்' என்று கூறினார்."

அவர் அந்த உறுதியைக் காப்பாற்றினார்; வியாழக்கிழமை இரவு தாயையும் குழந்தையையும் இடிபாடுகளிலிருந்து பத்திரமாக வெளியே கொண்டு வர மிகவும் கவனமான மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிலநடுக்கம் தாக்கியதில் டயானாவின் இரு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன, ஆனால் நல்ல அதிர்ஷ்டவசமாக குழந்தை ஜுவானுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தன.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​டயானாவின் கணவர் கெர்சன் வீட்டிற்கு காரை நிறுத்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு வேலியின் மீது ஏறி குதித்துத் தப்பிப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார்.

தங்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் சிதைந்து போயிருந்ததைக் கண்ட அவர், மிக மோசமான நிலை ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சினார்.

தனது மனைவியும் குழந்தையும் மீட்கப்பட்ட அந்தத் தருணம் "அதிசயமான" தருணம் என்று அவர் கூறினார்.

பரவலாகப் பகிரப்பட்ட மீட்புப் பணிக்கான காணொளியில், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது மகனை அணைத்துக்கொண்ட கெர்சன், கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தலையை வானத்தை நோக்கி உயர்த்துவதைக் காண முடிகிறது.

"அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றே நான் நினைத்தேன். ஆனால் என் மகனைப் பார்த்தபோது, ​​எனக்கு மறுபிறவி கிடைத்தது போல உணர்ந்தேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை... என் உயிர் எனக்குத் திரும்பக் கிடைத்தது போல் உணர்ந்தேன்," என்று அந்தத் தருணத்தைப் பற்றி அவர் பிபிசியிடம் கூறினார்.

கெர்சன் மற்றும் டயானாவின் வீடு மற்றும் அவர்களது உடைமைகள் அனைத்தும் அழிந்துவிட்டன; செல்ல நாய் இன்னும் கிடைக்காதது அவர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இருப்பினும், இப்போது "எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க"ப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

"நாங்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்துவிட்டோம், ஆனாலும் நாங்கள் இங்கே இருக்கிறோம்... இழந்த அனைத்தையும் நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம்," என்று கெர்சன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு