பழைய குப்பைகளை ஒப்படைத்தால் மளிகை சாமான்கள் : ஊராட்சியின் புதிய முயற்சி

காணொளிக் குறிப்பு, பழைய பொருட்களைக் கொடுத்தால் மளிகைப் பொருட்கள்
பழைய குப்பைகளை ஒப்படைத்தால் மளிகை சாமான்கள் : ஊராட்சியின் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது

பழைய இரும்பு சாமான்களை வாங்கும் இதுபோன்ற வாகனங்களை நீங்கள் சாலைகளில் பார்த்திருக்கலாம். ஆனால், ஆந்திரப் பிரதேசத்தில், ஊராட்சித்துறை மூலம் இயக்கப்படும் இந்த வாகனங்கள் சற்றே வித்தியாசமானவை. இவை பழைய பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அத்தியாவசிய பொருட்களை வழங்குகின்றன.

தற்போது சோதனை முயற்சியாக குண்டூர் மண்டலத்துக்குட்பட்ட சில கிராமங்களில் இந்த வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மக்கள் ஒப்படைக்கும் உலர் கழிவுகளுக்குப் பதிலாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 'ஸ்வச்ச ரதம்' திட்டம் தொடங்கப்பட்டதாக ஸ்ரீனிவாச ராவ் கூறுகிறார்.

இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் ஸ்க்ராப் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. அதிலிருந்து வரும் பணத்துடன், அரசாங்க நிதியும் சேர்த்து, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

குண்டூர் கிராமப்புற மண்டலத்தில் உள்ள வெங்கலாயபாலம் கிராம மக்கள், உலர்ந்த கழிவுகளை அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு மாற்றிக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார்கள்.

இது ஒரு நல்ல திட்டம் என்கிறார் குண்டூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான யெல்லா ரட்டையா. இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து யோசித்து வருவதாக ஊராட்சித்துறை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை ஆணையர் மைலவரபு கிருஷ்ண தேஜா கூறினார். இந்த திட்டம் குண்டூர் கிராமப்புற மண்டலத்தில் வெற்றி பெற்றதாக ஸ்ரீனிவாச ராவ் கூறுகிறார்.

ஆனால், 'ஜன சைத்தன்ய வேதிக' தலைவர் லக்ஷ்மண ரெడ్డి, நீண்டகாலத்தில் இது நிலைத்திருக்காது என்கிறார். அரசு ஊழியர்கள் சோதனை அடிப்படையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டு வாசலில் உலர் கழிவுகளை சேகரிப்பார்கள், ஆனால் அவர்கள் நீண்ட காலத்திற்கு இந்த திட்டத்தைத் தொடர விரும்ப மாட்டார்கள் என்று அவர் நம்புகிறார். இந்த திட்டத்திற்காக நகராட்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் துப்புரவுப் பணியாளர்களை இணைத்தால் அது சற்று பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு