You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் அரசின் முதல் மாதத்தில் இந்த 6 அமைச்சர்கள் அதிக கவனம் பெற்றது ஏன்?
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் அரசு ஆட்சி அமைத்து, நாளையுடன் (ஜூன் 10) ஒரு மாதம் நிறைவடையவுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற முடியாத போதும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்தது தமிழக வெற்றி கழகம்.
இந்த ஒரு மாதத்தில், தவெக-வின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அமைச்சர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் சர்ச்சையையும், கவனத்தையும் ஈர்த்துள்ளன.
'தூத்துக்குடி- துறைமுக நகரம்'
தமிழக மீன்வளத் துறை அமைச்சராக உள்ள நடிகர் ஸ்ரீநாத், கடந்த மே 19-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தூத்துக்குடியை துறைமுக நகரமாக முழுமையாக மாற்றுவதுதான் தலைவர் விஜயின் ஆசை, எங்களுடைய ஆசை" எனக் கூறினார்.
இது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள வி.ஓ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் (வி.ஓ.சி. துறைமுகம்), இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது 1974 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி இந்தியாவின் 10வது முக்கிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
'உலகளாவிய கடல்வழி வர்த்தகத்திற்கான இந்தியாவின் முதன்மையான துறைமுகங்களில் ஒன்று' என்றே அத்துறைமுகத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது.
"ஏற்கனவே தூத்துக்குடி துறைமுக நகரமாக உள்ளது, பிறகு ஏன் இப்படி பேசுகிறீர்கள்?" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
அதேபோல, தேர்தலுக்கு முன்பு 'கச்சத்தீவு' குறித்த விஜயின் கருத்துகள் பேசுபொருளாக மாறின. குறிப்பாக, "தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்" என விஜய் பேசியிருந்தார்.
இந்நிலையில், 'கச்சத்தீவு மீட்பு' குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, "அதைப் பற்றி இப்போது பேச முடியாது, நோ கமெண்ட்ஸ்" என்று கூறினார்.
"கச்சத்தீவு விவகாரத்தில் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லவா உங்களை அமைச்சராக்கினோம்" என்றும் சீமான் கேள்வியெழுப்பியிருந்தார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீநாத் கடந்த ஜூன் 3ஆம் தேதி, தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது, தவறுதலாக திருச்செந்தூர் தொகுதியின் புன்னக்காயல் கிராமத்தில் சென்று நன்றி தெரிவித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலானது.
'திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு'
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ரமேஷ் தொடக்கம் முதலே செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.
இவர் பதவியேற்ற பிறகு, "பிராமணர் என்பதால் அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது" என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை. சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான்" என்று கூறினார்.
கடந்த மே 29ஆம் தேதி, ரமேஷ் முகக் கவசம் அணிந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்விற்குப் பிறகு, "நான் அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் எனது உதவியாளரிடம் நபருக்கு ரூ.1000 வழங்கினால் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினார். கையில் பணம் இல்லை என்றதும் 'ஜி பே' மூலம் பணம் அனுப்பலாம் என்று கூறி பணத்தை பெற்றுக்கொண்டு எனது உதவியாளரை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து சென்றார்'' என கூறினார்.
"இதுகுறித்து விசாரணை செய்து அர்ச்சகரிடம் விளக்கம் பெறப்பட்டது. அவர் அளித்த விளக்கக் கடிதத்தில் தன்னை மன்னிக்குமாறு கேட்டிருந்தார். மறு உத்தரவு வரும் வரை பணம் பெற்ற அர்ச்சகர் கோவிலுக்கு வரவும் பூஜை கைங்கர்யம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.'' என்றும் அமைச்சர் கூறினார்.
ஆனால், தற்போது மீண்டும் திருச்செந்தூர் கோவிலில் பணம் கொடுத்து விரைவு தரிசனம் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் சில காணொளிகள் பரவின. ஆனால் அந்தக் காணொளிகளின் உண்மைத் தன்மையை பிபிசி-யால் சரிபார்க்க முடியவில்லை.
அதேபோல, திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ் கோவில் பிரசாதங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்று கூறினார்.
ஆனால், அப்படி தேதி குறிப்பிட்டிருந்தும் கூட, 'இந்த தேதியில் தான் தயாரிக்கப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள்?' என அவர் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய அந்த காணொளி சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
'தொடர் மின்வெட்டு, திருப்பரங்குன்றம் தீபம்'
தவெக ஆட்சிக்கு வந்துள்ள இந்த ஒரு மாதத்தில், அக்கட்சியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் மிக முக்கியமானது 'தொடர் மின்வெட்டு'.
குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளின் பல இடங்களில் இரவுகளில் பல மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படுவதாக, மக்கள் சாலை மாறியல்களில் ஈடுபடுகின்ற காணொளிகளையும் பார்க்க முடிந்தது.
"ஒரு சில நபர்களின் சதிவேலையால் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்படுகின்றது. 99 சதவீதம் சிறப்பாக செயல்படும் ஊழியர்கள் மத்தியில் ஒரு சதவீதம் பேர் கருப்பு ஆடுகளாக செயல்படுகின்றனர்" என்று விளக்கமளித்தார் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்.
"தவறான நபர்கள் வேண்டுமென்றே ஃப்யூஸ்களை பிடுங்கி, மின்வெட்டு ஏற்படுத்தியது குறித்த புகார்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின் வெட்டையும் சரி செய்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மின் ஊழியர் அமைப்புகள் பிபிசியிடம் மறுத்திருந்தன.
அதேபோல திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாகவும், முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காதது குறித்தும் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பதில்கள் கவனம் பெற்றன.
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பாக எந்த சூழல் இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.
"அரசு சார்பாக என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பது குறித்த செய்தி அறிக்கை தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அப்படியிருக்க, முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என பெஞ்ச்மார்க் இல்லை" என நிர்மல்குமார் கூறினார்.
அரசுப் பேருந்துகள் தொடர்பான புகார்கள்
இரண்டு வாரங்களுக்கு முன்னர், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான அரசுப் பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என பொது மக்கள் புகார்களை முன்வைத்தனர்.
அப்போது அங்கு ஆய்வுக்குச் சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், முன்பதிவு செய்த பேருந்து குறித்த நேரத்திற்கு வரவில்லை என புகார் தெரிவித்த ஒரு இளைஞரிடம், "நீ சாப்பிட்டுவிட்டு வந்துள்ளாய், நான் சாப்பிடாமல் வந்துள்ளேன்" என பேசிய காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்பதிவு செய்த பேருந்துகளில், முன்பதிவு செய்யாத நபர்களை ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் அன்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு, "மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் அதைச் செய்ய வேண்டியிருந்தது. மாற்று பேருந்துகள் வந்ததும் பிரச்னை சரிசெய்யப்பட்டது" என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஒரு பயணியிடம் விளக்கம் அளிப்பதை ஒரு காணொளியில் பார்க்க முடிந்தது.
தொழில்துறை முதலீடுகள்
முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள நான்கு பெண்களில், சிவகாசி தொகுதி தவெக எம்.எல்.ஏ.வும் தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கீர்த்தனா தொடக்கம் முதலே கவனம் பெற்று வருகிறார்.
மே 11 அன்று, தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப்பேரவையில் பதவியேற்காமல் திரும்பி சென்றது முதல், தமிழ்நாட்டிற்கான தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் காணொளி வரை என இதற்குச் சில உதாரணங்களை சொல்லலாம்.
"தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு 21 நாள்களில் அனுமதி, ஒற்றைச் சாளர ஒப்புதல் முறை, அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் நேரடியாகப் பிரச்னைகளைக் கொண்டு செல்லும் முறை, ஆகியவை எங்கள் வாக்குறுதிகள்" என அந்தக் காணொளியில் அவர் கூறியிருந்தார்.
"உலகம் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அதனைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம்" என அமைச்சர் கீர்த்தனா பேசிய காணொளி விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது.
ஆனால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு செல்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன.
சமீபத்தில் ராயல் என்ஃபீல்ட் மற்றும் இந்தியாவின் 5-வது தலைமுறை அதிநவீன போர் விமான (AMCA) தொழிற்சாலைகள் தங்கள் மாநிலத்தில் அமையவுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு அறிவித்தது.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு ஏற்கனவே உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஆந்திராவில் நிறுவப்படும் தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வெளியே அந்நிறுவனம் அமைக்கும் முதல் ஆலையாக இருக்கும்.
அதேசமயம், 'ஆந்திரப் பிரதேச முதலீடானது, தமிழ்நாட்டிலிருந்து செயல்பாடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக தங்களது திறனை விரிவுபடுத்துவதே நோக்கம் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விளக்கம் அளித்ததாக' தி ஃபெடரல் ஊடகம் குறிப்பிடுகிறது.
'இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான மசாகான் டாக் லிமிடெட், தூத்துக்குடியில் புதிதாக ஒரு பிரமாண்டமான கப்பல் கட்டும் வளாகத்தை அமைப்பதற்கான தனது முன்மொழிவுக்குத் தமிழ்நாட்டின் பதிலுக்காகக் காத்திருந்தது, ஆனால் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது' என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் செய்தி குறிப்பிடுகிறது.
ஆனால், 'தவெக அரசு தொடர்ந்து புதிய தொழில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது' எனக் கூறியுள்ள அமைச்சர் கீர்த்தனா, 'லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'டாஸ்மாக் சீரமைப்பு'
விஜய் தனது தேர்தல் பிரசாரங்களில் டாஸ்மாக் மீதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
'மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுகிறது' என்ற விமர்சனம் கவனம் பெற்றது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், "டாஸ்மாக்கில் ஊழல் அதிமாக உள்ளது. டாஸ்மாக் வருமானம் தனி மனித வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. அரசு கஜானாவுக்கு அவை வரவில்லை. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தவறு" என கடந்த மே 24ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
மீண்டும் கடந்த ஜூன் 8ஆம் தேதி இது தொடர்பாக பேசிய அவர், "மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும். எம்ஆர்பி விலைக்குள் மதுபானம் கொண்டு வரப்படும்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு புதிதாகப் பொறுப்பேற்றதும், 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு கவனத்தை ஈர்த்தது. அவற்றில் தற்போது 500-க்கும் அதிகமான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"தவெக அரசு இன்னும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கப்படுவதைத் தடுக்கவில்லை, அதேபோல மதுக்கடைகளை ஒருபுறம் மூடினால் மறுபுறம் மனமகிழ் மன்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன" என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்திருந்தார்.
அதேபோல, டாஸ்மாக்கில் எந்த மாற்றத்தையும் புதிய அரசு கொண்டுவரவில்லை என முன்னாள் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், "எதையும் உடனடியாக செய்யமுடியாது, பொறுமையாக அணுகுவோம்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு