காணொளி: மெலிசா சூறாவளியால் ஜமைக்காவில் பேரழிவு - கழுகுப்பார்வை காட்சிகள்

காணொளிக் குறிப்பு, மெலிசா சூறாவளியால் ஜமைக்காவில் பேரழிவு - கழுகுப்பார்வை காட்சிகள்
காணொளி: மெலிசா சூறாவளியால் ஜமைக்காவில் பேரழிவு - கழுகுப்பார்வை காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

மெலிசா சூறாவளியால் ஜமைக்காவில் ஏற்பட்டுள்ள பேரழிவை காட்டும் கழுகுப்பார்வை காட்சிகள் இவை.

கட்டுமானங்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டிச் சென்றிருக்கிறது மெலிசா சூறாவளி.

இந்த சூறாவளி அந்த பகுதியில் இதுவரை அளவிடப்பட்ட மிகப்பெரிய சூறாவளிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் ஜமைக்காவில் குறைந்தது 5 பேரும், ஹைட்டியில் குறைந்தது 20 பேரும் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூறாவளியால் பெய்த கனமழைக்கு பின் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.

சில சாலைகள் சேதமடைந்ததையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஜமைக்காவில் ஏற்பட்டுள்ள முழுமையான பேரழிவால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் கூறினார்.

செவ்வாய்க்கிழமை ஜமைக்காவை மெலிசா சூறாவளி கடந்து சென்றபோது, வீடு, உணவு என அனைத்தும் அடித்து செல்லப்பட்டுவிட்டதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என ஜமைக்காவை சேர்ந்த வால் மிட்செல் கூறினார்.

எதிர்பார்த்ததைவிட சிலர் மோசமாக பாதிப்படைந்திருக்கக்கூடும் என ஜமைக்காவில் வசிக்கும் டாலியா பெய்லி தெரிவித்தார்.

வெள்ளம் வடிந்துள்ள நிலையில், சிலர் தங்களின் வீடுகளை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்.

இடுப்பளவுக்கு வெள்ளம் இருந்ததால், தான் வீட்டிலேயே சிக்கிக்கொண்டதாகவும், இது என் வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் என்றும் கேப்ரியல் கூறினார்.

ஜமைக்காவை தொடர்ந்து கியூபாவிலும் இந்த சூறாவளி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது பலவீனமடைந்ததாக கூறியிருந்தபோதிலும், அமெரிக்க தேசிய சூறாவளி மையம் இதனை ஆபத்தானது என விவரித்திருந்தது.

இதனால், வீடுகள் சரிந்து, கூரைகள் பெயர்க்கப்பட்டு, மரங்களும் சரிந்தன.

இந்த சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியது என கியூபாவில் உள்ள அலெக்சிஸ் கார்போனல் கூறினார்.

ஹைட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் AFP செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.

ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள முகாமில் தங்கியிருக்கும் அமேசான் கிறிஸ்டியன், இந்த நிலையில் இனி வாழ முடியாது எனக் கூறினார்.

உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை இரவு சூறாவளி பஹாமாஸிலிருந்து 170 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. அதிகாலைக்குள் இது பஹாமாஸை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது 155 கி.மீட்டர் வேகத்தில் பெர்முடாவை நோக்கி நகர்ந்து வருகிறது, அப்பகுதியை அடையும்போதும் ஆபத்தான சூறாவளியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு