You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'கிணற்றுக்குள் அலைபாயும் தண்ணீர்' - குஜராத் வைரல் வீடியோவின் உண்மை நிலை
இந்த கிணற்றில் உள்ள நீர் நிலையாக இல்லாமல், தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள இந்த கிணற்று நீர், வெளிப்படையான எந்த காரணமும் இன்றி தானாகவே அசைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலத்தின் உரிமையாளரான பிரஞ்சீவன் சடாரியா இதைப் பற்றி கூறுகையில், "இந்த கிணற்று நீர் தொடர்ந்து இது போல அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நான் இங்கு வந்தபோது நீர் இவ்வாறு அசைந்து கொண்டிருந்தது. திங்கட்கிழமை கிணற்றிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. நேற்று முற்றிலும் அமைதியாக இருந்தது. ஆனால் இன்று மீண்டும் அலைபாயத் தொடங்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.
இன்று மீண்டும் நீர் அலைபாய தொடங்கியதாக உள்ளூர் வாசியான பர்சுராம்பாய் தெரிவிக்கிறார். "மதியம் சுமார் 2.30 மணிக்கு இது தொடங்கியது. மாலை 4 மணிக்கு கிணற்றிலிருந்து நீர் வழிய தொடங்கியது. தற்போது அலைபாய்வது சற்று குறைந்துள்ளது. இது ஏன் நடக்கிறது என தெரியவில்லை. உள்ளூர் அதிகாரிகளும் புவியியலாளர்களும் இதை ஆய்வு செய்து காரணத்தை கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதில் பேய் அல்லது ஆவிகளின் தலையீடு இருப்பதாக நான் கூறவில்லை. கிராம மக்கள் சிலர் அருகிலுள்ள மற்ற கிணறுகளை சென்று பார்த்தபோது, அவை அமைதியாகவே இருந்தன. இந்தக் கிணற்றில் மட்டுமே இப்படி நடக்கிறது." என்றார் அவர்.
இந்தக் கிணறு பற்றிய செய்தி பரவியதும், அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கிணற்றை பார்வையிட வர தொடங்கினர்.
மழை காரணமாக அங்கு காற்று சிக்கிக்கொண்டதே இதற்கு காரணம் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்வப்னில் காரே தெரிவிக்கிறார்.
"அவ்வாறு சிக்கிய காற்று நகரும்போது, அது மேற்பரப்பில் உள்ள நீரில் அசைவை ஏற்படுத்துகிறது. இது நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் தொடர்பான நிகழ்வாக இருக்கலாம் என சிலர் சந்தேகித்தனர். உண்மையில் அப்படியல்ல. எனவே மக்கள் இது தொடர்பான வதந்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
மோர்பியைச் சேர்ந்த புவியியலாளர் ஜகதீஷ் வதேர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நீரின் அசைவு குறித்து காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்திடம் கலந்தாலோசித்தோம். நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் தொடர்பான பிரச்னை எதுவும் இல்லை. முதற்கட்ட விளக்கம் என்னவென்றால், நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்யும்போது, நிலத்தடி நீர் மறுநிரப்பல் நடைபெறும்.
அந்த ரீசார்ஜ் செயல்முறையின் போது, நுண்துளை இடைவெளிகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் வழியாக நீர் செல்லும். அப்போது அந்த இடைவெளிகளிலிருந்து காற்று வெளியேறுவது இத்தகைய அசைவை ஏற்படுத்தக்கூடும். கூடுதலாக, அதிக காற்றின் வேகமும் இதற்கு பங்களிக்கக்கூடும். இதில் நில அதிர்வு அல்லது பிற அசாதாரண புவியியல் காரணிகள் எதுவும் கண்டறியப்படவில்லை." என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு