You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் பதவியேற்ற நாளில் கரூர் வேலுசாமிபுரம் எப்படி இருந்தது? உறவுகளை பறிகொடுத்தவர்கள் கூறியது என்ன?
''கரூரில் உயிரிழந்த 41 பேருடைய குடும்பமும் என் குடும்பம் என்று விஜய் கூறியிருக்கிறார். அவர் முதல்வராகி இருப்பதால், எங்கள் தேவைகளை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார். நாட்டுக்கும் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்.''
கரூர் ஏமூரைச் சேர்ந்த சக்திவேலின் வார்த்தைகள் இவை. கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, விஜய் பரப்புரையில் நடந்த கூட்ட நெரிசலில் இவர் தனது மனைவியையும், மகளையும் பறிகொடுத்தார்.
விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவேலை போலவே, கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சிலர் பிபிசி தமிழிடம் பேசினர்.
விஜய் பதவியேற்பு - ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாத வேலுசாமிபுரம்
தமிழக முதல்வராக விஜய் மே 10-ஆம் தேதியன்று பதவியேற்றபோது மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்வையும், சமூக ஊடகப் பதிவுகளால் தங்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்.
அந்த நாளில் கரூர் வேலுசாமிபுரம் எப்படியிருக்கிறது, அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் எத்தகைய உணர்வில் உள்ளன என்பதை அறிய பிபிசி கள ஆய்வுக்குச் சென்றது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது மத்திய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த நாளில் திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை திரும்பிய விஜய், அதன்பிறகு கரூர் வரவே இல்லை. தேர்தல் பரப்புரைக்கும் அவர் கரூர் வரவில்லை.
ஆனால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் மாமல்லபுரம் அழைத்துச் சென்று, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனியாக ஆறுதல் கூறி, இழப்பீடும் வழங்கினார்.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 108 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தை உள்ளடக்கிய கரூர் தொகுதியில் தோல்வியுற்றது. அங்கு திமுகவும் தோற்று அதிமுக வென்றுள்ளது.
கரூரில் கடந்த முறை தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இம்முறை வென்றுள்ளார். இரண்டாம் இடத்தில் தவெக வேட்பாளர் மதியழகனும், திமுக வேட்பாளர் தியாகராஜன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் நான்கில் ஒரு தொகுதியில் தவெகவும் இரண்டு தொகுதிகளில் திமுகவும் வென்றுள்ளன.
இருப்பினும் ஆட்சியைக் கைப்பற்றி, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று இருப்பதால், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகள் எப்படியிருக்குமென்ற கருத்து பல தரப்பிலும் எழுந்திருக்கிறது.
இதை அறிவதற்காக சிலருடைய குடும்பங்களை பிபிசி நேரில் சந்தித்துப் பேசியது. சிலரிடம் அலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்டது.
சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் அருகிலுள்ள கோதூர் சாலையில் வசிக்கிறது பெருமாள்–செல்வராணி குடும்பம். அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் அவர்களும், மகள், மகன் மற்றும் சிலருடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தத் தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன். அவர்களில் இரண்டாவது, மூன்றாவது மகள்கள் பழனியம்மாள் (வயது 12), கோகிலா (வயது 10) ஆகியோர், விஜய் பரப்புரை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்துவிட்டனர்.
விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, செல்வராணி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.
பேச முதலில் முற்றிலும் பேசவே மறுத்துவிட்ட அவர், ''சமூக ஊடகங்களில் தங்கள் குடும்பத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் பற்றி மிக மோசமாக கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனால் எங்களுக்கு ஊடகங்கள் என்றாலே அச்சமாக உள்ளது'' என்று கூறினார்.
''இரு மகள்களையும் ஒரே நேரத்தில் இழந்த பெற்றோருக்கு எவ்வளவு வேதனை இருக்கும் என்பது எங்களுக்குதான் தெரியும். எங்கள் உணர்வைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் பதிவிடுகின்றனர். பல வேதனைகள் இருந்தாலும், இப்போது விஜய் முதல்வரானதில் எங்களைப் போன்றவர்களுக்கு திருப்தி. மற்றபடி 41 பேர் உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதை சிபிஐ கண்டுபிடிக்கட்டும்'' என்றார் பெருமாள்.
பெருமாள் குடும்பத்தைப் போலவே, பல குடும்பங்கள் விஜய் முதல்வரானது குறித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தத் தயங்குவதாகக் கூறினர்.
வேலுசாமிபுரம் பகுதியில் எங்குமே தவெக-வினரின் கொண்டாட்டங்களைப் பார்க்க முடியவில்லை. ஒரே ஓரிடத்தில் மட்டும் நன்றி பேனர் தென்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய சாலையோர மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது. மற்றபடி வழக்கத்தைவிட மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேநீர்க் கடையில் இருந்த தொலைக்காட்சியில் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் யாரும் அதைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதையும் களத்தில் அறிந்துகொள்ள முடிந்தது.
குழந்தையை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட விஜய்
அதேநேரத்தில் அப்பகுதிக்கு விஜய் மீண்டும் வருவார் என்று பிபிசியிடம் பேசிய மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர், அத்துடன் சில விஷயங்களை விஜய் கண்டிப்பாகச் செய்வார் என எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர்கள், கரூர் எப்போதும் இனிமேல் அவருடைய தனிக் கவனத்தில் இருக்கும் என்று நம்புவதாகவும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
அப்பகுதியில் பூ வியாபாரம் செய்யும் சுப்புலட்சுமி, ''நாங்கள் அவர் வெல்வார் என்று நினைத்தோம். அதேபோல வென்று முதல்வராகிவிட்டார். எங்கள் முதல் கோரிக்கை மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான். இப்பகுதியில் மதுவால் ஏராளமான குடும்பங்கள் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. பெண்கள் பாதுகாப்புக்கும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியிலுள்ள என்னைப் போல ஏராளமான பெண்கள் கடனில் தத்தளிக்கின்றனர். அதைத் தீர்ப்பதற்கு உதவ வேண்டும்'' என்றார்.
வேலுசாமிபுரம் வடிவேல்நகர், விஜய் பேசிய இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு வசித்து வந்த விமல்–மாதேஸ்வரி தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை துருவிஷ்ணு, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்துவிட்டான். இதனால் ஏற்பட்ட மனவேதனையில் இந்தத் தம்பதியர் அந்தப் பகுதியில் இருந்து வீட்டைக் காலி செய்துவிட்டு, ஆண்டார்கோவில் என்ற பகுதியிலுள்ள விமல் தந்தை வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.
மாதேஸ்வரி, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது விஜய் பதவியேற்பை விமலும், மாதேஸ்வரியும் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரும் விஜய் முதல்வரானதில் தங்களுக்கு இருக்கும் உணர்வை, விரல்களை உயர்த்திப் பிடித்துக் காண்பித்தனர். சம்பவத்துக்குப் பின்பு, மாமல்லபுரத்தில் தங்களை விஜய் சந்தித்துப் பேசியபோது, அவரின் மனிதாபிமானம் வெளிப்பட்டதாகக் கூறினார் விமல்.
பிபிசியிடம் பேசிய விமல், ''நாற்காலியில் அமர்ந்திருந்த எனது மனைவியின் காலைப் பிடித்து, தன்னை மன்னிக்குமாறு அவர் மண்டியிட்டுக் கோரியபோது எனது மனைவி உள்பட எல்லோருமே அழுதுவிட்டோம். எங்களிடம் மட்டுமல்ல, அங்கு வந்திருந்த அனைவரிடமும் அவர் மிக அன்பாகப் பேசி ஆறுதல் தெரிவித்தார். இப்போது அவர் முதல்வராகி இருப்பதால் நாங்கள் இன்னும் தெம்பாக உணர்கிறோம்'' என்றார்.
''எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு யாருமே உயிரிழக்காத வகையில், மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களின் பொதுவான கோரிக்கை'' என்றார் விமல்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த மேலும் சிலருடைய குடும்பத்தினரையும் சந்திக்க பிபிசி முயன்றபோது சந்திக்க மறுத்துவிட்டனர். விஜய் முதல்வரானது குறித்து சிலர் கருத்துத் தெரிவிக்கவே விரும்பவில்லை என்று கூறிவிட்டனர்.
ஏமூரை சேர்ந்த சக்திவேல், ''எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடக்காதவாறு விஜய் தன் ஆட்சியில் உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.
அந்தச் சம்பவத்தில் இதே ஏமூர் பகுதியில் மட்டுமே பலர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் ஆனந்த் ஜோதி என்பவருடைய மனைவி, இரு மகள்களும் கூட்ட நெரிசலில் உயிரிழந்துவிட்டனர்.
விஜய் முதல்வரானது குறித்து பிபிசியிடம் பேசிய ஆனந்த் ஜோதி, ''அவர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர் முதல்வராகி இருக்கிறார். இதில் எங்கள் உணர்வு முக்கியமில்லை. இப்போதுதான் அந்தத் துயரிலிருந்து கொஞ்சம் மீண்டு கொண்டிருக்கிறோம். அதனால் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு